Monday, October 16, 2023

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்....!

 

சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்....!


மனிதனின் நல்ல ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவு மிகமிக அவசியம். அத்துடன், உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதும் மிகவும் முக்கியமாகும். சில நேரங்களில் தவறான சமையல் முறை, உணவின் ஊட்டச்சத்து மதிப்பை வீணாக்குகிறது. எனவே, சமைக்கும் போது சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்துவது அவசியம். மேலும், சாப்பிடும் போது சில விஷயங்களில் கவனம் மிகமிக தேவை என்பதை மறந்துவிடக் கூடாது.

ஊட்டச்சத்து இழப்பு:

சமையல் செய்வது ஒரு கலை. ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டுமானால், சிறப்பான சமையல் இருக்க வேண்டும். எனவே, சமையல் அறையில் சமையல் வேலையில் ஈடுபடும்போது காய்கறிகளை அதிகமாக சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். காய்கறியை அதிக நேரம் சமைக்க விடாதீர்கள். மேலும், காய்கறியில் அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம், அப்படி செய்தால் காய்கறிகளின் சத்துக்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை சமையல் செய்யும் ஆண், பெண் அனைவரும் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான பொருட்களின் பயன்பாடு:

நல்ல ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் பயன்பாடு மிகவும் அவசியம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எனவே, இஞ்சியை வறுத்து சாந்தா உப்புடன் சாப்பிடுங்கள். இது பசியை அதிகரிக்கிறது. அத்துடன் செரிமானத்தை மேம்படுத்துகிறது. அண்மைக் காலமாக வயிறு சம்பந்தமான நோய்கள் பரவி வருவதால் இந்த முறையை பின்பற்றுங்கள். அதனால் நல்ல பலன் கிடைக்கும்.

நாட்டில் நிலவும் கால மாற்றம் காரணமாக, கடந்த சில வாரங்களாக மக்கள் அதிகம்  நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். எனவே புதிய மற்றும் சூடான உணவை சாப்பிடுவது நல்லது. இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். இதற்காக தண்ணீரைக் கொதிக்க வைத்து பயன்படுத்தலாம்.

நல்ல ஆரோக்கியத்திற்கு :


நல்ல ஆரோக்கியத்திற்கு தேனுக்கு பதிலாக வெல்லம் சாப்பிடுவது முக்கியம். மேலும், மாவுக்கு பதிலாக, அரைத்த மாவில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுங்கள். கஞ்சியும் உடல் நலத்திற்கு நல்லது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போதும் பசியை விட,  சற்று குறைவாகவே சாப்பிடுங்கள். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்களை உடலால் உறிஞ்சிவிடும். மேலும், தொடர்ந்து சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட பிறகு குறைந்தது 2 மணிநேரம் கழித்து மீண்டும் சாப்பிடலாம்.  அடிக்கடி ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவது நல்லது. இது உடலுக்கு பலத்தை தரும். அத்துடன் பசி எடுக்கும் போது இயற்கை பானங்கள் குடிக்கலாம்.

கவனம் மிகவும் தேவை:

எந்த பழத்துடனும் சேர்த்து பால் குடிக்க வேண்டாம். குளிர்ந்த தயிருடன் சூடான ரொட்டி சாப்பிட வேண்டாம். பாலுடன் காரம் உள்ள எதையும் இணைத்து சாப்பிடக் கூடாது. பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. இப்படி மிகவும் கவனத்துடன் செயல்பட்டால், உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். சாப்பாடு விவகாரத்தில் மன இச்சைப் பின்பற்றி, உணவுகளை அள்ளி அள்ளி சாப்பிட்டால், பின்னர், மருத்துவர்களை நாடிச் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும் என்பதை எப்போதும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மாலை 6 மணிக்குப் பிறகு குளிர்ந்த பானங்களை அருந்துவதை கட்டாயம் கைவிட வேண்டும். இரவு நேரத்தில் குளிர்ந்து பானங்களை சாப்பிட்டால், உடல் குளிர்ச்சி அடைந்து, வலிப்பு உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்பு உண்டு. இதனை பலர் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறார்கள். அவர்களின் அனுபவம் பலருக்கு நல்ல பாடமாக இருந்து வருகிறது.

எனவே, சமைக்கும் போதும் சாப்பிடும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய இந்த விஷயங்களை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட்டால், அடிக்கடி மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

No comments: