Saturday, October 14, 2023

அதிமுகவின் திடீர் பாசம்.....!

முஸ்லிம்கள் மீது அதிமுகவின் திடீர் பாசம்.....!


அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு,  அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக திடீரென முறித்துக் கொண்டுள்ளது. இதற்கு வலுவான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டாலும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்களை அதிமுக விமர்சனம் செய்வது இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அதிமுக ஆர்வம் செலுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த கூட்டணி முறிவு என்பது ஒரு அரசியல் நாடகம் என அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். எனவே, அதிமுக திடீரென அரங்கேற்றியுள்ள அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

முஸ்லிம்கள் மீது திடீர் பாசம்:

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்த அதிமுக,  தற்போது திடீரென முஸ்லிம்கள் மீது பாசம் காட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் நடந்த முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முஸ்லிம் சிறைவாசிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர் நீண்ட நாட்களாக சிறையில் வாடும், முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

தற்போது, வேலூர் மத்திய சிறையில் உள்ள மசூதி மூடப்பட்டு உள்ளதாகவும், இதனால் முஸ்லிம் கைதிகள் தொழுகை நடத்த முடியவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். முஸ்லிம் கைதிகளின் வழிப்பாட்டு உரிமைகளை நசுக்கக் கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இப்படி, முஸ்லிம் சமுதாயம் மீது திடீர் பாச மழையை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பொழிந்து வருகிறது. இதற்கு ஒருசில லெட்டர் பேட் முஸ்லிம் அமைப்புகளும் பாராட்டு தெரிவித்துள்ளன. 

அதிமுகவின் கடந்த காலம்:


இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, சென்னை உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லிம் சமுதாயம் கடந்த 2020ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டு, சட்டத்தை  திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது. 

போராட்டத்தின் போது, முஸ்லிம் பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டபோதும், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

ஒரு முக்கியமான தகவல், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட காரணமே, அதிமுகதான் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. ஆம், பாஜக அரசு சிஏஏ சட்டம் கொண்டு வந்தபோது அதை ஆதரித்து வாக்கு அளித்தது அதிமுகதான். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் சிஏஏ சட்டத்திற்கு எதிராக வாக்கு அளித்து இருந்தால், அந்த சட்டம் நிறைவேறி இருக்காது.  முஸ்லிம்கள் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமே இருந்து இருக்காது. எனவே, சிஏஏ சட்டம் வர முக்கிய காரணம் அதிமுக என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. 

இப்படி, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு, கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு, அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்ததால் சிஏஏவை ஆதரித்தோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது விளக்கம் அளித்துள்ளார். 

முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள்:


முஸ்லிம் சமுதாயத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, செய்த துரோகங்களை முஸ்லிம்கள் யாரும் மறக்க மாட்டார்கள். குறிப்பாக, தமிழக முஸ்லிம்கள், அதிமுகவின் கபட நாடகத்தை நன்கு அறிந்து இருக்கிறார்கள். பாபரி மசூதி இடிப்பு விவகாரம், சிஏஏ விவகாரம் என அனைத்துப் பிரச்சினைகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்ட கட்சி அதிமுக என்பது வரலாறு. தற்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, திடீரென முஸ்லிம்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி கருத்துகளை வெளியிட்டு வருவதை எப்படி ஏற்க முடியும். 

தமிழகத்தில் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையின மக்களின் ஆதரவு இல்லாமல், எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது என்பது அரசியல் நிலைமை. இதை உணர்ந்துகொண்டு தான், எப்படியாவது, முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக தனது திட்டத்தை அரங்கேற்ற தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களாக முஸ்லிம்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். 

ஆனால், அதிமுகவின் இந்த அரசியல் நாடகம் குறித்து முஸ்லிம் சமுதாயம் நன்கு அறிந்து கொண்டு அமைதியாக இருந்து வருகிறது. தற்போதைய முஸ்லிம்கள் ஏமாளிகள் அல்ல என்பது அவர்களின் அண்மைக் கால நடவடிக்கைகளை எடுத்துக் காட்டுகின்றன. 

கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தங்கள் வாக்குகளை பாஜகவுக்கு எதிராக அளித்து காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைத்தனர். அதேபோன்று, நாடு முழுவதும் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இனி, முஸ்லிம்கள் சரியான முடிவை எடுத்து, சரியான திசையில் தங்களது அரசியல் பயணத்தைத் தொடர்வார்கள் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. எனவே, அதிமுக முஸ்லிம்கள் மீது காட்டத் தொடங்கியுள்ள பாசம், அக்கட்சிக்கு மிகப்பெரிய அளவுக்கு எந்த பலனையும் தராது. 

சரியான முடிவு எடுக்கும்:

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசு தீர்மானம் கொண்டு வந்த நிறைவேற்றியதையும், முஸ்லிம் கைதிகளின் விடுதலைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகள் எடுத்து வருவதையும், சமுதாயம் நன்கு அறிந்து கொண்டுள்ளது. இதேபோன்று, நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக ஓர் அணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திரண்டு, இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த இந்தியா கூட்டணிதான், பாஜகவை வீழ்த்த வலுவான அணியாக இருக்கும் என்பதை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். 

எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது வாக்குகளை சிதறிவிட முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி எந்த கருத்து கூறி வந்தாலும், அதனை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது. ஒருபோதும் நம்பாது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தான், தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயம் முழுமையாக ஆதரவு அளிக்கும் என்பது உறுதி. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: