மன
மற்றும் உடல் ஆரோக்கியத்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம்….!
மனிதனுடைய வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு
வெற்றி, தோல்விக்கும் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் முக்கியமாக இருந்து வருகிறது. வாழ்க்கையில்
சாதித்து வெற்றிகளை குவித்த சாதனையாளர்களின் பட்டியலை எடுத்து ஆராய்ந்தால், கடினமான
உழைப்புக்கு மத்தியிலும், அவர்கள் மனம் மற்றும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொண்டு,
நாள்தோறும் பணியாற்றியதை அறிந்துகொள்ளலாம். வெற்றிக்கு கடின உழைப்பு மட்டுமே போதுமானதாக
இருக்க முடியாது. ஒவ்வொரு நொடியும் மனம் அமைதியாக இருக்க வேண்டும். அத்துடன், உடலும்
ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, குறிப்பிட்ட வெற்றி இலக்கை நோக்கி நாம் சரியாக பயணிக்க
முடியும். இல்லையெனில், வெற்றிக்கனி எளிதாக கிடைக்காமல் போகும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தேர்வுகளை
எழுதும்போது, எப்போதும் ஒருவித பதற்றத்துடன் இருப்பதால், அவர்களின் மனம் சரியான திசையில்
செல்லாமல், தேர்வு எழுதுவதில் குளறுபடி செய்துவிடுகிறது. இதனால், நல்ல திறமையான மாணவர்கள்
கூட, சில நேரங்களில் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சினைக்கு
சரியான முறையில் அணுகி தீர்வு காண்டால், நிச்சயம் சாதிக்கலாம். அதுதொடர்பான சில குறிப்புகளை
இப்போது நாம் காணலாம்.
மன அழுத்தத்தைத் தவிர்க்க
வேண்டும்:
தேர்வு நாட்களில் மாணவர்களுக்கு
ஏற்படும் மன அழுத்தம் பொதுவானது. இருப்பினும், இதிலிருந்து மாணவர்கள்
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மன உளைச்சல் இருந்தால் சிறப்பாக செயல்பட முடியாது.
தேர்வை சரியாக எழுத முடியாது. கல்வியாண்டு
அல்லது தேர்வு தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தயாராகத் தொடங்கும் மாணவர்கள்,
மன அழுத்தத்தால் ஒருவித சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கான
எளிதான வழி என்னவென்றால், எதிர்கால முன்னேற்றத்திற்கான தயாரிப்பில் மாணவர்கள் கவனம்
செலுத்த வேண்டும்.
நீர்ச்சத்து அவசியம்:
மாணவர்கள் குறித்த பொதுவான புகார் என்னவென்றால்,
அவர்கள் சரியான அளவுக்கு தண்ணீர் குடிப்பதில்லை என்பதாகும். ஆரோக்கியமான வாழ்விற்கு
ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்பது மருத்துவ
நிபுணர்களின் ஆலோசனையாக இருந்து வருகிறது. குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் மன மற்றும்
உடல் சோர்வு ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி மூளைக்கு சக்தி அளிக்கும் செல்களும் பலவீனமடையத்
தொடங்குவதால், மாணவர்கள் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே நீர்ச்சத்தின் முக்கியத்துவம் உணர்ந்து அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை
மாணவர்கள் மட்டுமல்ல, சாதிக்க நினைக்கும் அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை அவசியம்:
தேர்வு நேரங்களில் மாணவர்கள்
ஒருபோதும் பீதி அடையக் கூடாது. தேர்வு அறையில் அமர்ந்து கொண்டு கேள்வித்தாளை
பார்த்ததும் அதில் வந்துள்ள கேள்வியை கண்டு பயம் கொண்டு, பீதி அடைய வேண்டாம். நீங்கள்
நன்றாகத் தயார் செய்திருந்தால் கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை. நீங்கள் எளிதாகத்
தீர்க்கக்கூடிய கேள்வியாக இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. குறைந்தப்பட்சம் பல
முக்கியமான கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து நீங்கள் நன்றாக மதிப்பெண் பெறலாம்
என்பதில் உறுதியாக இருங்கள். பெரும்பாலான மாணவர்கள் கேள்வித்தாளைப் பற்றி நினைத்தாலே
பதற்றமடைகிறார்கள். அந்த பதற்றத்தை கைவிட்டு, தன்னம்பிக்கையுடன் எதையும் அணுக முயற்சி
செய்யுங்கள்.
ஆற்றலின் சரியான பயன்பாடு:
தேர்வு நாட்களில் தங்களின் ஆற்றலை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது பெரும்பாலான
மாணவர்களுக்குத் தெரிவதில்லை. வீரர்கள் களத்தில் இருக்கவும், விடாமுயற்சியுடன் செயல்படவும்,
சோர்வடையாமல் இருக்கவும் ஆற்றலைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். கடினமான
விடைகளைப் படிக்கும் போது, மாணவர்கள்,
ஒருநாளின் எந்தப் பகுதியில் அதிக ஆற்றலுடன் உணர்கிறார்கள் என்பதைப் பொறுத்து தங்கள்
ஆற்றலை ஒதுக்க வேண்டும்.
படிப்புக்கு முந்தைய
உணவுமுறை:
தேர்வு நாட்களில் பசி எடுக்கும் போது எதையும் சாப்பிடுவது நல்லதல்ல. படிப்பதற்கு
முன், நீங்கள் சோம்பலை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடக்கூடாது. தேர்வு நாட்களில் துரித
உணவு, குளிர் பானங்கள், அதிகப்படியான இனிப்புகள், வெளி உணவுகள், சர்க்கரை பானங்கள்
போன்றவற்றை தவிர்க்க
வேண்டும். படிப்பதற்கு
முன் சில பழங்களை சாப்பிடுங்கள் அல்லது பழச்சாறு குடிக்கவும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான
நீரில் காலையைத் தொடங்குங்கள், நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
கற்பித்தலின் நுட்பங்கள்:
ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு கற்றல் நுட்பம் உள்ளது. வகுப்பில் முதலிடம் பெறுபவர்
முயற்சிக்கும் படிப்பு நுட்பம், மற்ற மாணவர்களுக்குச் சாதகமாக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை.
சில மாணவர்கள் இரவில் வெகுநேரம் விழித்திருந்து நன்றாகப் படிக்கிறார்கள், பலர் அதிகாலையில்
படிப்பதை எளிதாக்குகிறார்கள். ஒவ்வொரு மாணவரும் தனது சொந்த பலம் மற்றும் திறன்களைப்
பற்றி அறிந்திருக்கிறார்கள், எனவே உங்களுக்குச் சிறப்பாகச் செயல்படும் நுட்பத்தைப்
பின்பற்ற முயற்சிக்க வேண்டும். .
நேரத்தின் சரியான
பயன்பாடு:
நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு
நாட்களில், நேரம் எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
காலை முதல் இரவு வரை மிகவும் சரியான முறையில் நேரத்தை பயன்படுத்த வேண்டும். எந்த நேரத்தில்
என்ன செய்வீர்கள், கடினமான கேள்விகளுக்கு எவ்வளவு நேரம் கொடுப்பீர்கள் மற்றும் எளிதான
கேள்விகளுக்கு எவ்வளவு நேரம் கொடுப்பீர்கள் என்பதில் மாணவர்கள் கவனம் செலுத்து வேண்டும்.
அத்துடன் எப்போது சாப்பிடுவீர்கள், எப்போது ஓய்வெடுப்பீர்கள்? பொழுதுபோக்கிற்காக எவ்வளவு
நேரம் எடுத்துக் கொள்ளப்படும் ஆகியவற்றிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
கொஞ்சம் விலகி இருங்கள்:
தேர்வு நாட்களில் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், டேப்லெட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச்
போன்ற அனைத்து தொல்லைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.. இந்த விஷயங்களை சில நேரம்
தூய ஆய்வுக்கு பயன்படுத்தினால் பரவாயில்லை, இல்லையெனில் அவை மனதை சிதறடிக்கும், குறிப்பாக
சமூக ஊடகங்களால் தேர்வில் சரியான முறையில் கவனம் செலுத்த முடியாது. தேர்வின் முதல் 15 நாட்களுக்கு ஸ்மார்ட்போனிலிருந்து
விலகி இருக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த வழியில் நீங்கள் சரியான நேர அட்டவணையை உருவாக்கி
செயல்பட்டால், உங்களுக்கு மன சோர்வு ஏற்படாது.
நேர்மறை எண்ணங்கள்:
தேர்வு நாட்களில் மாணவர்களின் மனம் எதிர்மறை எண்ணங்களை வளர்க்கும் இடமாக மாறுகிறது
என்பது நிபுணர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
இருப்பினும், மாணவர்களின் மனதை எவ்வாறு நேர்மறை
எண்ணங்களால் நிரப்புவது என்பது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு எதிர்மறையான
எண்ணங்களையும் தவிர்த்து மனதில் நேர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். தேர்வுக்கு
நன்றாக தயார் செய்கிறீர்கள் என்று நினைத்தால், நம்பிக்கையுடன், தேர்வை எதிர்கொள்ள முடியும்
என்பதை மறந்துவிடக் கூடாது.
உங்களை நீங்களே சோதித்துக்
கொள்ளுங்கள்:
படிக்கும் முறை மிகவும் எளிமையானது மற்றும் முக்கியமானது. படிப்பை முடித்த பிறகு
நீங்களே உங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணமாக, ஐந்து அத்தியாயங்கள் வரவிருந்தால்,
பாடத்தின் பின்பகுதியில் வினாக்களைக் குறிக்கவும், பின்னர் பதில்களை எழுதவும். நீங்கள்
எத்தனை சரியான பதில்களை எழுதியுள்ளீர்கள், எத்தனை தவறான பதில்களை எழுதியுள்ளீர்கள்
என்பதை சரிபார்க்கவும். இந்த வழியில் நீங்கள் படித்தால், உங்கள் தேர்வில் நிச்சயம்
தேர்ச்சி பெற முடியும், மேலும் உங்கள் எழுத்து திறனின் வேகமும் அதிகரிக்கும்.
மனதில் கொள்ள வேண்டியவை:
நாம் ஆரம்பத்தில் சொன்னப்படி,
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானல், மனமும், உடலும் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
மன ஆரோக்கியமாக இருந்தால், உடலும் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நாம் எப்போதும்
நினைவில் வைத்துகொள்ள வேண்டும். நம்முடைய இலட்சியங்களை, நம்முடைய இலக்குகளை எட்ட வேண்டுமானால்,
அதற்கு தகுந்த உழைப்பு மட்டும் போதாது. உழைப்புடன் கூடிய மன மற்றும் உடல் ஆரோக்கியம்
எப்போதும் தேவை.இதில் சிறப்பு கவனம் செலுத்தினால், நிச்சயம் வாழ்க்கையில் நாம் உயரங்களை
தொட முடியும்.
-
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment