Sunday, October 1, 2023

ஏலக்காய்....!

 

ஏலக்காயின் மருத்துவ பலன்கள்....!

 


ஏக இறைவன் உலகில் மனித சமுதாயத்திற்கு எராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான். இந்த அருட்கொடைகள் மூலம் மனிதன், நல்ல உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழ முடிகிறது. ஆனால், இயற்கை தந்த வரங்களை புறக்கணித்துவிட்டு, மனித வர்க்கம், தற்போதைய நவீன காலத்தில் உணவுப் பழக்க வழக்கங்களில் பல்வேறு புதிய முறைகளை புகுத்தி, அதன்முலம், ஆரோக்கியமற்ற வாழ்க்கையை நடத்துகிறது. இயற்கையோடு ஒத்துபோனால், ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள். அதனால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மனித சமுதாயம் வாழ்க்கையில் நிம்மதியை இழந்து விடுகிறது. 

பச்சை ஏலக்காய்:

ஏக இறைவன் வழங்கிய பல அருட்கொடைகளில் ஒன்று ஏலக்காய் என உறுதியாக கூறலாம். இந்தியா உட்பட ஆசிய நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் பயன்படுத்தப்படும் ஏலக்காய், மசாலாப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. பண்டைய கிரீஸ் மற்றும் எகிப்து நாகரிகங்களில் ஏலக்காய் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.

ஏலக்காய் செரிமான அமைப்பில் பயனுள்ளதாக இருக்கும். உணவுக்குப் பிறகு ஏலக்காயை உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. அத்துடன் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

மருத்துவ பலன்கள்:

மக்களில் சிலர் பருவ மாற்றத்தால் மகரந்த அலர்ஜியால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட நிலையில் ஏலக்காயை வாயில் உறிஞ்சி சாப்பிட்டால் அலர்ஜி பிரச்சனை மற்றும் வலியில் இருந்து விடுபடலாம்.

இது பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது.

ஏலக்காய் இரத்த சோகையை சமாளிக்க உதவுகிறது. இதில் உள்ள தாமிரம், இரும்பு, ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி மற்றும் பிற வைட்டமின்கள் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.

மன அழுத்த எதிர்ப்பு:

மாறிவரும் உலக சூழ்நிலைகளால், மனிதர்கள் தற்போது அதிக மன அழுத்த நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இளம் வயதில் மாரடைப்பு வந்து இளைஞர்கள் உயிரிழக்கும் செய்திகளை அன்றாடம் நாம் கேள்விப்பட்டு வருகிறோம். மாரடைப்பு வராமல் தடுக்க பல்வேறு யோசனைகளை மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதை முறையாக கடைப்பிடித்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பது மருத்துவ உலகின் நம்பிக்கை.

ஆனால், இயற்கை நமக்கு ஏலக்காய் மூலம் மன அழுத்த நோய்க்கு நல்ல பலன்களை தருகிறது. ஏலக்காய்க்கு மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதன் பயன்பாடு மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட பல உளவியல் கோளாறுகளின் அறிகுறிகளைக் குறைக்கிறது. எனவே, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை குறைக்க நாம் தினமும் ஏலக்காயை பயன்படுத்த வேண்டும்.

நச்சுகளை வெளியேற்றும் ஏலக்காய்:

நமது உணவு பழக்கங்களால், உடலில் நாள்தோறும் ஏராளமான நச்சுகள் சேர்ந்துவிடுகின்றன. இதனால் பல்வேறு பிரச்சினைகளை மனிதர்கள் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்ற நமக்கு பயன்படுவது ஏலக்காய் என உறுதியாக கூறலாம். ஏலக்காய் பயன்படுத்துவதால், உடலில் இருந்து நச்சுகளை வெளியேறும். உடலில் நச்சு நீக்கும் செயல்பாட்டில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

அத்துடன் நுரையீரலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை ஏலக்காய் செரிமானத்தை மேம்படுத்துகிறது, மற்றும் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

புற்றுநோய் பாதுகாப்பு, இரத்த சோகைக்கு சிகிச்சை, ஆரோக்கியமான நுரையீரல், அலர்ஜியில் இருந்து பாதுகாப்பு என ஏராளமான பலனைகளை தரும் ஏலக்காயை இன்றுமுதல் கட்டாயம் பயன்படுத்த தொடங்கி விடுங்கள். நன்மைகளையும் பலன்களையும் பெற்று ஆரோக்கிய வாழ்க்கையை வாழுங்கள்.

- எஸ்..அப்துல் அஜீஸ்

 

No comments: