Saturday, March 2, 2024

கே.எம்.கே.பேட்டி....!

 

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் நவாஸ் கனி மீண்டும் போட்டி....!

ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி...!!

...விற்கு தொகுதி ஒதுக்கினால் வரவேற்று மகிழ்ச்சி அடைவோம்...!!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி

 

சென்னை, மார்ச்,03: இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், தற்போதைய எம்.பி. நவாஸ் கனி நிறுத்தப்படுவதாக தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற மாநில பொதுக்குழு சிறப்பு கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுக்குழுவின் எடுக்கப்பட்ட முடிவுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

மூன்று முக்கிய தீர்மானங்கள்:

அப்போது பேசிய பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இந்த பொதுக்குழு சிறப்பு கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். அதன்படி, நாடாளுமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியை .யூ.முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கிய திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினருக்கும் .யூ.முஸ்லிம் லீக் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இரண்டாவதாக, இந்திய நாட்டில் ஜனநாயகம், மதசார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடும் ஒன்றிய பாஜக அரசிற்கு இக்கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மூன்றாவதாக, .யூ.முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்ட இராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி. நவாஸ் கனியை மீண்டும் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி, ஏணி சின்னத்தில் போட்டியிடுவார். நான்காவதாக, தேர்தல் பணிகளை ஆற்ற பல்வேறு குழுக்களை அமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பி கேள்விகளுக்கும் பேராசிரியர் கே.எம்.கே. பதில் அளித்தார்.

ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும்:

 


கேள்வி: திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு இன்னும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இழுபறி நிலை நீடிக்கிறதே. இதுகுறித்து உங்கள் பதில் என்ன?

பதில்: தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கு இடையே நல்ல புரிதலோடு செயல்பட்டு வருகிறார்கள். திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் முதலில், .யூ.முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய இரண்டு இயக்கங்களுக்கு தலா ஒரு தொகுதி திமுக தலைமை ஒதுக்கீடு செய்து, கையெழுத்தாகியுள்ளது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு விரைவில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும் என நம்புகிறேன்.

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளும் வெற்றி பெற வேண்டும். திமுக தலைமையில் களம் காணும் வேட்பாளர்கள் அனைவரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்துவார்கள். அதன்மூலம், ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். இது உறுதியாக நடக்கும். 

.யூ.முஸ்லிம் லீக் வரவேற்கும்:

 


கேள்வி: திமுக தலைமை மனிதநேய மக்கள் கட்சியை அழைத்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறதே, இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இடம்பெற்றுள்ள .யூ.முஸ்லிம் லீகிற்கு ஒரு தொகுதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டது. அதேபோன்று கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியும், தற்போது திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. திமுக தலைமை. மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கினால், அதை வரவேற்கும் முதல் கட்சியாக .யூ.முஸ்லிம் லீக் இருக்கும். மேலும், திமுக தலைவருக்கும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினருக்கும் .யூ.முஸ்லிம் லீக் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ளும். திமுக தலைமை எடுக்கும் எந்தொரு நல்ல முடிவையும் .யூ.முஸ்லிம் லீக் வரவேற்கும் என இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறேன்.

செய்தியாளர்களின் சந்திப்பில் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விளக்கம் அளித்தார்.

- சிறப்பு செய்தியாளர்: எஸ்..அப்துல் அஜீஸ்

No comments: