“பெரும்பான்மை கிடைத்ததும், அரசியல் சாசனத்தையே மாற்றுவோம்”
என்ற பாஜக எம்.பி.யின் சர்ச்சை கருத்துக்கு கடும் கண்டனம்....!
நாட்டு மக்கள் இனி வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை...!!
சென்னை,மார்ச்12- கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தின் சித்தாபூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக எம்.பி., அனந்த் குமார் ஹெக்டே, வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைத்ததும் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இருந்தார். பாஜக எம்.பி.யின் இந்த சர்ச்சைகுரிய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை:
இந்நிலையில் பா.ஜ.க எம்.பி.யின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி, தனது கட்சி எம்.பி.யின் கருத்தை ஏற்றுக் கொள்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார். சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ள அனந்த் குமார் ஹெக்டேவை பாஜகவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
புரட்சி வெடிக்கும்:
அரசிலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம், திருத்தம் செய்வோம் என பாஜகவினர் கூறி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டால், அதை காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்றும் மல்லிகார்ஜுன கார்கே எச்சரித்தார்.
மதசார்பின்மை தத்துவத்தை வலியுறுத்தியும், அரசியலமைப்பு சட்டத்தை காப்பற்றும் வகையிலும் நாட்டில் உள்ள ஏழை உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை வலியுறுத்தி இன்றுமுதல்(12.03.2024) நாடு முழுவதும் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் கூறினார்.
பாஜக-ஆர்.எஸ்.எஸ்.சதி:
அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கூறுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை பாஜகவினர் கூற பிரதமர் மோடி ஏன் அனுமதி அளிக்கிறார் என்றும் கார்கே கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடிக்கு உண்மையில் துணிவு இருந்தால், சர்ச்சை கருத்து கூறும் பாஜகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசியலமைப்பு சட்டத்தை விதிகளை மீறி செயல்படும் பாஜகவினரை கண்டிக்க வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தினார்.
மக்கள் பாடம் புகுத்துவார்கள்:
அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என கூறினால் நாட்டில், மிகப்பெரிய அளவுக்கு மக்கள் புரட்சி வெடிக்கும் என்றும், நாட்டில் வாழும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் கார்கே எச்சரித்தார். நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற கருத்துகளை கூறிவரும் பாஜகவிற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகுத்துவார்கள் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment