பாஜக அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்....!
உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அவசர வழக்கு...!!
டெல்லி, மார்ச்12-நாடாளுமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு நேற்று திடீரென நாடு முழுவதும் அமல்படுத்தி, அரசிதழில் அறிவிக்கையை வெளியிட்டது. இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக ஆட்சியாளர்கள் இதுபோன்ற பாசிச நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இ.யூ.முஸ்லிம் லீக் வழக்கு:
இந்நிலையில், நாடு முழுவதும் ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மதத்தின் அடிப்படையாக மட்டுமே வைத்துக் கொண்டு குடியுரிமை வழங்கப்படும் என ஒன்றிய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை காரணமாக நாட்டில் பதற்றமான, அசாதாரணமாக சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் இ.யூ.முஸ்லிம் லீக் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
குஞ்ஞாலிக்குட்டி கண்டனம்:
மேலும், ஒன்றிய அரசின் நடவடிக்கை குறித்து கருத்து கூறியுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமை வழங்கப்படும் என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒன்று என கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, உச்சநீதிமன்றத்தை இ.யூ.முஸ்லிம் லீக் நாடி இருப்பதாகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment