இந்திய வரலாற்றை ஒற்றை கண்ணோட்டத்தில் பார்க்கும் இந்துத்துவா பார்வை
பிரபல வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் விமர்சனம்
புதுடெல்லி, அக்.26- இந்திய வரலாற்றை இந்துத்துவா கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வையைப் பரப்புவதில் சில வரலாற்றாசிரியர்கள் ஈடுபட்டு வருவதாக புகழ்பெற்ற வரலாற்றிசிரியர் ரோமிலா தாப்பர் விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லியில் "வரலாற்றெழுத்தியலும் தொடக்ககால இந்திய வரலாறும்" என்ற தலைப்பில் இரண்டாவது சீதாராம் யெச்சூரி நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ரோமிலா தாப்பர், காலனித்துவ வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாறு புரிந்துகொள்ளப்பட்ட விதத்தை அடிப்படையாக வடிவமைத்ததாக விமர்சனம் செய்தார்.
மேலும், அவர்கள் சிக்கலான சமூக மற்றும் அரசியல் செயல்முறைகளை எளிமைப்படுத்தப்பட்ட மதக் கதைகளாகச் சுருக்கினர் என்றும் அவை இன்றும் வரலாற்று விளக்கங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார். அத்துடன், இந்திய வரலாற்றை இந்துத்துவா கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வையைப் பரப்புவதிலும் வரலாற்றிசிரியர்கள் ஈடுபட்டதாகவும் தாப்பர் புகார் தெரிவித்தார்.
வரலாற்றை மதக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வை :
இந்திய வரலாறு குறித்த பல பரவலான கருத்துக்களின் தோற்றத்தை தமது உரையில் சுட்டிக் காட்டிய அவர், காலனித்துவ அறிஞர்கள் இந்தியாவை கீழைத்தேய கொடுங்கோன்மை என்ற கட்டமைப்பின் மூலம் பார்த்ததாக விமர்சனம் செய்தார். ஆசிய சமூகங்களை நிலையானதாகவும், மாறாததாகவும், கொடுங்கோல் ஆட்சியாளர்களால் ஆளப்படுவதாகவும் சித்தரித்ததாகவும் அவர் கூறினார். இந்திய வரலாற்றை முதன்மையாக ஒரு மதக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போக்கு காலனித்துவ அறிஞர்களிடமிருந்து பெறப்பட்டது என்றும் தாப்பர் குற்றம்சாட்டினார்.
காலனியின் வரலாற்றை எழுதியவர்கள் தங்களின் சொந்தக் கற்பனையை எழுதினார்கள் என்று தமது உரையில் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் மில்லை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்திய வரலாற்றை இந்து, முஸ்லிம் மற்றும் பிரிட்டிஷ் காலகட்டங்களாக மில் வகைப்படுத்தியதை தாப்பர் விமர்சித்தார். இத்தகைய வகைப்பாடுகள், மிகவும் சிக்கலான ஒரு அனுபவத்தின் மீது எளிமையான பிரிவுகளைத் திணிக்கின்றன என்றும் அவர் வாதிட்டார்.
இந்துத்துவப் பார்வை :
இந்திய வரலாற்றைப் பற்றிய இந்துத்துவப் பார்வை ஒற்றையானது மற்றும் நிலையானது என்றும், அது இந்து மதத்திற்குள்ளேயே இருக்கும் பன்முகத்தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தாப்பர் கூறினார். இந்த விளக்கத்தில், வரலாற்றின் நோக்கம் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை விளக்குவது அல்ல. மாறாக சமகால அரசியல் பார்வைகளின் கூற்றுகளை உருவாக்குவதே ஆகும். இந்தக் கூற்றுகள், புதிய தேசத்தின் இன்றியமையாத அங்கமாக விளங்கும் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் மையத்துவத்தை மறுக்கின்றன என்றும் வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் வேதனை தெரிவித்தார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments:
Post a Comment