Sunday, October 25, 2026

ஈரான் சரண் அடையாது....!

 அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுதல் எதிரொலி:

எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாக ஈரான் உறுதி

 ராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்காக கதவைத் திறந்து வைத்துள்ளதாகவும் அறிவிப்பு


தெஹ்ரான், அக்.26- அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுதலை எதிர்கொள்ள எந்தவொரு சூழ்நிலைக்கும் தங்கள் நாடு தயாராக இருப்பதாக ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேநேரத்தல் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கான கதவைத் திறந்து வைத்துள்ளதாகவும் அந்நாடு அறிவித்துள்ளது. 

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் அவ்வவ்போது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுதல் விடுத்து வருகிறார். இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டு, வளைகுடா நாடுகளில் ஒருவித அச்சம் எழுந்துள்ளது. 

ஈரான் திட்டவட்ட அறிவிப்பு :

இந்நிலையில், தெஹ்ரானில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள ஈரான் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, தெஹ்ரான் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் ராஜதந்திரத்திற்கான சாத்தியக்கூறுகளைத் தக்கவைத்துக் கொள்ள தங்கள் நாடு திறந்துவைத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நாங்கள் ஒருபோதும் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகியதில்லை அல்லது ராஜதந்திரத்திற்கான கதவை மூடியதில்லை, என்று பாகாயி கூறியுள்ளார். அதே நேரத்தில், எங்கள் நிலப்பரப்பைப் பாதுகாக்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம். எனவே, ஆம், மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஈரான் சரண் அடையாது :

ஈரானின் முழுமையான சரணடைதல் உள்ளிட்ட ஒருதலைப்பட்சமான கோரிக்கைகளை வாஷிங்டன் வலியுறுத்துவதாக பாகாயி கூறினார். ஆனால், இதை எந்த ஈரானியரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்றும் அவர் கூறினார். மேலும், இந்த மோதலில் சுதந்திரமான பங்கை வகிப்பதற்குப் பதிலாக அமெரிக்காவுடன் கைகோர்த்ததற்காக ஐரோப்பிய நாடுகளை பாகாயி விமர்சித்தார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்காக இப்பகுதி முழுவதையும் பயன்படுத்துவதால் ஹோர்முஸ் ஜலசந்தி பாதுகாப்பற்றதாக உள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார். இந்த நிலைமை நீடிக்கும் வரை, நமது பிராந்திய ஒருமைப்பாடு, தேசியப் பாதுகாப்பு மற்றும் மக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, என்றும் பாகாயி குறிப்பிட்டார்.

இதனிடையே ஈரான் மீது 26.10.2026 அன்று கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது அந்த முடிவை நிறுத்துவைப்பதாக அறிவித்துள்ளார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: