Friday, December 8, 2023

தோல்விக்கு மூன்று காரணங்கள்....!

மூன்று மாநில தேர்தல் தோல்விக்கு மூன்று காரணங்கள்....! 


இந்திய ஜனநாயக தேர்தல் களத்தில் செமி ஃபைனலாக கருத்தப்பட்ட ஐந்து மாநில தேர்தல்கள் அண்மையில் நடந்து முடிந்து, முடிவுகளும் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் , சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்த இந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி நான்கு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கணிக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த மூன்றாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, நிலைமை முற்றிலும் பாஜகவிற்கு சாதகமாக அமைந்துவிட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. 

ஏற்கனவே, ஆட்சியில் இருந்த ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை தக்க வைக்க முடியாமல், பறிகொடுத்தது. இது காங்கிரஸ் தலைவர்களை மட்டுமல்லாமல், நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. எனினும் இந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலான மக்கள் தங்களது வாக்குகளை அளித்து இருப்பது, அந்த கட்சி வாங்கியுள்ள வாக்குகள் மூலம் தெரிய வருகிறது. 

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு கோடியே 75 லட்சத்து, 71 ஆயிரத்து 582 வாக்குகளை பெற்று 66 இடங்களில் வெற்றி பெற்றது. ராஜஸ்தானில் ஒரு கோடியே 56 லட்சத்து, 67 ஆயிரத்து 947 வாக்குகளை பெற்று, 69 இடங்களை கைப்பற்றியது. சட்டீஸ்கரில், 66 லட்சத்து 2 ஆயிரத்து, 586 வாக்குகளை பெற்ற காங்கிரஸ், 35 இடங்களில் வெற்றி பெற்றது. தெலங்கானாவில் 92 லட்சத்து, 35 ஆயிரத்து 792 வாக்குகளை பெற்று, 64 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. மிசோமில், ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 113 வாக்குகளை பெற்று ஒரு இடத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.  இந்த ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பெற்ற வாக்குகள், நான்கு கோடியே 92 லட்சத்து 24 ஆயிரத்து 20 ஆக உள்ளது. ஆனால், மூன்று மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக பெற்ற வாக்குகளோ, நான்கு கோடியே 81 லட்சத்து, 68 ஆயிரத்து, 987 ஆகும்.இது காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகளை விட குறைவாகும். இதன்மூலம் பாஜகவை விட மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தான் ஐந்து மாநிலங்களில் அதிக ஆதரவு தெரிவித்து இருப்பது உறுதியாக தெரிய வருகிறது.  அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுக்க காரணம் என்ன என்று ஆராய்ந்தால் அதற்கு மூன்று முக்கிய அம்சங்களை அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். 

சனாதான பிரச்சினை:


தமிழகத்தில் கிளம்பிய சனாதான பிரச்சினையை, ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் அனைவரும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சனாதானத்திற்கு எதிரான கட்சி காங்கிரஸ் என பொய் பிரச்சாரம் செய்தனர். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், சனாதானத்தை எதிர்ப்பவர்கள் என்று குற்றம்சாட்டினர். இது தேர்தல் நடந்த மாநிலங்களில் வாழும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது என அரசியல்  நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இதனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள வலதுசாரி சிந்தனையாளர்கள் கூட, அக்கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுவே தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. 

சாதிவாரிக் கணக்கெடுப்பு:

தேர்தல் நடைபெற்ற அனைத்து மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்தது. குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும், வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும், உரிமைகள் பெற வேண்டும் என தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். அதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதேபோன்று, பிற காங்கிரஸ் தலைவர்களும் சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து பேசி வந்தனர். ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநில மக்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என தோன்றுகிறது. அது தங்களுக்கு எதிரானது என்று தவறாக நினைத்துவிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதை தவிர்த்துவிட்டனர். சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தையும் ஒரு பிரச்சினையாக கையில் எடுத்துக் கொண்டு பாஜக பொய் பிரச்சாரம் செய்தது. இதுவும் காங்கிரஸ் தோல்விக்கு அடுத்த முக்கிய காரணம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்தியா கூட்டணி புறக்கணிப்பு:


ஐந்து மாநில தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் கட்சி அரவணைத்து செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து, அந்த கட்சி கேட்ட நான்கு தொகுதிகளை விட்டுக் கொண்டு காங்கிரஸ் தேர்தலை சந்தித்து இருக்க வேண்டும் என்ற கருத்தும் தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும், தேர்தலில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களை காங்கிரஸ் கட்சி, தங்களின் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தனியாகவே தேர்தல்களை சந்தித்தது அக்கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர். 

திக்விஜய் சிங் குற்றச்சாட்டு:


இது ஒருபுறம் இருக்க, மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு மின்னணு வாக்குப்பதிவு முறை ஒரு முக்கிய காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில்  அவர் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் தபால் மூலம் மக்கள் வாக்குகளை அளிக்க தேர்தல் ஆணையம் வசதி செய்து கொடுத்தது. இந்த தபால் வாக்குகள் மூலம் மொத்தம், மூன்று லட்சத்து, 40 ஆயிரத்து 354 வாக்குகள் பதிவாகின. இதில் காங்கிரஸ் கட்சி, ஒரு லட்சத்து 93 ஆயிரத்து, 452 வாக்குகளை பெற்றது. ஆனால், பாஜக, ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து 809 வாக்குகளை மட்டுமே பெற்றது. இதன்மூலம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடைபெற்றால், காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் நிறைய முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாகவும், அதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், மின்னணு எந்திர தேர்தல்களை கண்டித்து, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. 

காங்கிரஸ் இனி என்ன செய்ய வேண்டும்?

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னை சுயப்பரிசோதனை செய்துக் கொண்டு, இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் ஆலோசித்து, சரியாக வியூகம் அமைத்து, நல்ல கூட்டணி கட்சிகளுடன் தோழமை உணர்வுடன் செயல்பட்டு, மக்களவைத் தேர்தலை சந்திக்க வேண்டும். குறிப்பாக, இந்தி பேசும் வடமாநில மக்களின் நம்பிக்கையை பெற காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வலுவாக உள்ள சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட மாநில கட்சிகளை அரவணைத்துக் கொண்டு, விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். தற்போது வந்துள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு, பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டதாக மக்கள் மத்தியில் தற்போதே பிரச்சாரம் செய்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் பாஜக தனது பிரச்சாரத்தை பரப்பி வருகிறது. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்பட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. சர்ச்சை கருத்துகளை பேசுவதை ஒதுக்கிவிட்டு, நாட்டின் நலனில் அக்கறை கொண்டு, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தங்களது பிரச்சார உத்திகளை மாற்றி வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால், நிச்சயம் நாட்டில் மாற்றம் ஏற்படும் என உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 

No comments: