ஒற்றுமை எனும் குடைக்குள்....!
கனமழை வெள்ளத்தில் சின்னாபின்னமான சென்னையில் இஸ்லாமிய அமைப்புகள், முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், முஸ்லிம் இளைஞர்கள் செய்த, தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும் மனித நேய நிவாரணப் பணிகளை, தொண்டுகளை பாராட்டாதே மக்களே இல்லை.
இஸ்லாமிய அமைப்புகளின் மனித நேயப் பணிகள் சென்னைவாசிகளை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்களை கவர்ந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இக்கட்டான நேரத்தில் ஒவ்வொரு முஸ்லிம் அமைப்புகளும் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கி ஆற்றிய தன்னலமற்ற சேவையைக் கண்டு பலர் மூக்கின் மீது விரல் வைத்து வியப்பு அடைந்துள்ளனர்.
உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் கிடைக்க ஏற்பாடு செய்த இஸ்லாமிய அமைப்புகள் சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளயும் அகற்றி நகரை தங்களால் முடிந்த அளவிற்கு தூய்மை செய்து வருகின்றன.
தூய்மை இந்தியா திட்டத்திற்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்ட பல பிரபலங்கள், தற்போது வீடுகளில் ஒளிந்து கிடக்க இஸ்லாமிய அமைப்புகளின் இளைஞர்கள் கவுரவம் எதையும் பார்க்காமல் களத்தில் இறங்கி மாநகரை தூய்மை செய்து வருவது உண்மையிலேயே பலரது புருவங்களை மேலே தூக்கி வைத்துள்ளது.
இப்படி மகத்தான மக்கள் நலப்பணிகளை செய்து வரும் இஸ்லாமிய அமைப்புகள் ஓர் விஷயத்தில் மட்டும் இன்னும் முரட்டு பிடிவாதம் பிடித்து வருகிறது.
அது....
ஒற்றுமை என்ற கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்து ஓர் அணியில் வர இஸ்லாமிய அமைப்புகள் மறுத்து வருவதுதான்.
ஓர் குடைக்குள் வர இஸ்லாமிய அமைப்புகள் இன்னும் ஏன் தயக்கம் காட்டி வருகின்றன.
அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் பணிகளை உலகமே வியந்து பாராட்டி வரும் நிலையில் அனைவரும் ஓர் அணியில் திரண்டு வந்து நின்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
தமிழகத்தில் எவ்வளவு பெரிய அரசியல், சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இஸ்லாமியர்கள் குறித்து பிற மத சகோதரர்களிடம் இருக்கும் தவறான எண்ணங்களை, கருத்துக்களை இன்னும் உடைத்து எறியலாம் அல்லவா.
அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் அல்லவா.
அதன்மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தயக்கம் இல்லாமல் பெறலாம் அல்லவா.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓர் அணியின் கீழ் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இஸ்லாமிய அமைப்புகளும் முஸ்லிம் கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை, ஈகோ பிரச்சினைகளை சிறிது ஓரத்தில் வைத்து விட்டு ஒற்றுமை என்ற குடைக்குள் வர கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
அதுதான் சமுதாயத்திற்கு நலம் பயக்கும்.
எனவே,
ஓர் அணியில் திரள இஸ்லாமிய தலைவர்கள் முன் வருவார்களா.
இதுதான் இஸ்லாமிய சமுதாயத்தின் தற்போதைய மிக முக்கிய வினா.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment