Sunday, September 22, 2024

சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா....!

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா....!

வாழ்க்கையில் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட யாருக்கு தான் ஆசை இருக்காது? ஒவ்வொரு நாளும் உற்சாத்துடன் இருக்க பல்வேறு வழிகள் உண்டு. அவற்றில் ஒன்று தான் விளையாட்டு போட்டிகள் ஆகும். குறிப்பாக, இளைஞர்கள் சோர்வு அடையாமல், வழக்கமான உற்சாகத்துடன் செயல்பட கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் உதவும் வகையில் உள்ளன. எதிலும் ஆர்வம் இல்லாமல் எப்போதும் சோர்வுடன் இருக்கும் இளைஞர்கள் குறித்து கருத்து கூறும் மனநல வல்லுநர்கள், இளைஞர்களை ஏதாவது ஒரு விளையாட்டில் தனிக் கவனம் செலுத்த அறிவுறுத்துகிறார்கள். மனநல மருத்துவர்களின் இந்த ஆலோசனைகள் மிகவும் பலன் அளிக்கும் வகையில் இருப்பதை, விளையாட்டின் மூலம் சாதித்த இளைஞர்களை காணும்போது  உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது. 

தற்போது உலகில் மிகவும் பிரபலமான விளையாட்டு எது என்று கேள்வி எழுப்பினால், அதற்கு கால்பந்து விளையாட்டு என்ற பதில் தான் வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 350 கோடிக்கும் அதிகமான மக்களை கவர்ந்த விளையாட்டாக கால்பந்து போட்டி இருந்து வருகிறது. அதன் காரணமாக தான் உலகின் பிரபலமான விளையாட்டுகளுள் கால்பந்து முதல் இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் கால்பந்து விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக உலக கோப்பை கால்பந்து தொடர்களில், மக்கள் தொகையில் குறைவாக உள்ள முஸ்லிம் நாடுகள் கூட பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன. சவுதி அரேபியாவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க அந்நாட்டு அரசு தனிக் கவனம் செலுத்தி, இளைஞர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கம் அளித்து வருகிறது. கால்பந்து விளையாட்டு போட்டிக்காக பிரமாண்ட விளையாட்டு அரங்குகள் சவுதி அரேபியாவின் பல நகரங்களில் உள்ளன. இப்படி பல காரணங்களால், சவுதி அரேபியாவில் திறமையான இளம் கால்பந்து வீரர்கள் உருவாகி வருவதுடன் சர்வதேச அளவிலும் அவர்கள் சாதித்தும் வருகிறார்கள். 

 நௌமன் சித்திக் எனும் இளம் வீரர்:

இந்திய திருநாட்டில், கிரிக்கெட் விளையாட்டில் இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் இருந்து வருகிறது. அதேநேரத்தில் கால்பந்து உள்ளிட்ட பிற விளையாட்டுகளிலும் சில இளைஞர்கள் கவனம் செலுத்தி, அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அத்தகைய இளைஞர்களில் ஒருவர் தான் நௌமன் சித்திக் ஆவார். மும்பையைச் சேர்ந்த நௌமன் சித்திக், வணிகவியல் இளங்கலை இறுதியாண்டு மாணவர். கல்லூரி மாணவராக இருந்தாலும், கால்பந்து பயிற்சியாளராகவும் அவர் இருந்து வருகிறார். பொதுவாக, மாணவர்கள் பள்ளியில் நடத்தப்படும் படிப்பு சாராத பிற செயல்களில் பங்கேற்க விரும்புவதில்லை. வெறும் பதக்கம் அல்லது சான்றிதழ் என்ன செய்யும் என்று  அவர்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள். 

ஆனால், குறிப்பிட்ட விளையாட்டில் சிறப்பு கவனம் செலுத்தினால், அதை ஒரு தொழிலாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதில் சிறந்து விளங்கலாம். இளைஞர்கள் கல்விப் பணியுடன், தங்களை ஆக்கப்பூர்வமாக வளர்த்துக் கொள்ள விளையாட்டுக்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி நேரம் ஒதுக்கினால் சில மாதங்களுக்குப் பிறகு ஏற்படும் மாற்றத்தை இளைஞர்கள் நிச்சயம் உணருவார்கள். கல்வியுடன் விளையாட்டு எவ்வளவு முக்கியமானது என்பதை, பள்ளியில் பல்வேறு பாடங்களுடன் விளையாட்டு ஒரு காலகட்டம் என்பதில் இருந்து அறியலாம். பல மாணவர்கள் படிப்பில் ஊக்கம் பெற மற்றும் விளையாட்டில் தங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்க முயற்சி ஒரு பகுதியாக உள்ளது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி உணர்ந்துகொண்டு செயல்படும் நௌமன் சித்திக், 2க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் கால்பந்து பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். 

சாதிக்க ஆர்வம்:

தனது கால்பந்து ஆர்வம் குறித்து கருத்து கூறியுள்ள நௌமன் சித்திக், "தனது கல்வியை முடித்தவுடன் ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டும் என்று தனது பெற்றோர் விரும்பினார்கள். ஆனால் கால்பந்தின் மீதான தனது ஆர்வத்தைக் கண்டு, அவர்கள் தன்னை ஒருபோதும் தடுக்கவில்லை. மாறாக எப்போதும் தன்னை ஊக்கப்படுத்துகிறார்கள். இதனால் கல்வி மற்றும் கால்பந்து விளையாட்டு மற்றும் மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்தல் என மூன்று அம்சங்களுடன் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பகலில் கல்லூரியின் பிஸியான பிறகு, மாலையில் கோச்சிங்கிற்குச் செல்வேன். ஆனால் சில சமயங்களில் இரவு கால்பந்து விளையாட நேரம் கிடைக்கும்" என்று  பெருமையுடன் தெரிவித்துள்ளார். 

கால்பந்து மீதான தனது பிரியம் குறித்து பெருமையுடன் மேலும் கூறும் சித்திக், "நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பேன்.  10வது மற்றும் 12வது வகுப்புகளில் படிக்கும்போது, கால்பந்தின் மீது ஈர்ப்பு அதிகமானது.  அதன் பின்னர் ஆர்வம் வளர ஆரம்பித்தது. நான் ஒரு கால்பந்து பயிற்சியாளரிடமிருந்து விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன், பின்னர் எனது பிராந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்தேன். பயிற்சியாளர் எனக்கு நிறைய உதவினார்.

மன அழுத்தத்தை குறைக்க:

எந்த விளையாட்டும் மன அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் ஒவ்வொரு மாணவரும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். வெற்றி, தோல்வி இரண்டாம் பட்சம். போட்டி முக்கியம். விளையாட்டு பல முக்கியமான வாழ்க்கை பாடங்களை கற்றுத் தருகிறது. பள்ளியின் கூடுதல் பாடநெறி நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம், மாணவர்கள் எந்த விளையாட்டு அல்லது செயல்பாடுகளில் சிறந்தவர்கள் என்பதைக் கண்டறியலாம்.

எனவே இளைஞர்கள் பள்ளி படிப்பு சாராத பிற விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும். மாணவர் காலத்தில் எதையும் சாதிக்க முடியும். திறமையை வெளிப்படுத்த முடியும். எனவே தயக்கம் இல்லாமல், எதையும் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.  எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். படிப்புடன் விளையாட்டுக்கும் நேரம் கொடுங்கள். நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். கல்வி வாழ்க்கையில் உள்ள சிரமங்களை எதிர்கொள்வதில் விடாமுயற்சியுடன் இருங்கள். உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்".

இவை அனைத்தும் இளம் கால்பந்து பயிற்சியாளர் நௌமன் சித்திக்கின் வார்த்தைகள். இளம் வயதில் எவ்வளவு தெளிவுடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார் என்பதை, அவரது வார்த்தை மொழிகளே மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களுடைய நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தினால், நௌமன் சித்திக் போன்று வாழ்க்கையில் நிச்சயம் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க முடியும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: