Monday, September 23, 2024

யார் பொறுப்பு….?

 

வேலையின்மை, வறுமை அதிகரிப்புக்கு யார் பொறுப்பு….?

 

-    எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

உலகில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது நாடு நிச்சயமாக அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் நாட்டில் வறுமை முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. நமது அரசாங்கம் வறுமையை எதிர்த்துப் போராட இன்னும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய நிலைமைகள், நாட்டில் வறுமையை மேலும் அதிகரித்துள்ளன. கொரோனா பேரிடர் உள்ளிட்ட பல காரணங்களால், இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் வறுமையில் வாடுகின்றன.

சில முக்கியமான உண்மைகள்:

இந்தியாவின் மக்கள் தொகையில் 27 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர், அதேசமயம் 96 புள்ளி 14 சதவீத மக்கள் மிகவும் ஏழ்மையான பிரிவில் உள்ளனர்.

வறுமை அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளன. நாட்டில் மில்லியன் கணக்கான குடிமக்கள் குடிசைகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்தியாவில் வேலையின்மை, பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் மற்றும் சாதிப் பிரிவினை காரணமாக வறுமை தொடர்நது அதிகரித்து வருகிறது. வறுமை காரணமாக பாலின சமத்துவமின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

2023-ஆம் ஆண்டில், உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 125 நாடுகளில் 111 வது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டில் மில்லியன் கணக்கான குழந்தைகள் வறுமையின் காரணமாக கல்வியை இழந்துள்ளனர். ஆண்டு கல்வி நிலை (ASER) அறிக்கையின்படி, 2021-ஆம் நிதியாண்டில் 12 புள்ளி 97 மில்லியன் குழந்தைகள் கல்வியை இழந்துள்ளனர்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அதிக வறுமை விகிதங்களைக் கொண்டுள்ளன.

நாட்டில் 16 புள்ளி 6 சதவீத மக்கள் மோசமான ஊட்டச்சத்தால் பாதிக்கப்படுகின்றனர். யுனிசெஃப் அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் 200 மில்லியன் இந்தியர்கள் வெறும் வயிற்றில் தூங்குகிறார்கள். அதேநேரத்தில் 7 ஆயிரம் பேர் பசியால் நாள்தோறும் இறக்கின்றனர்.

கூடுதல் தகவல்கள்:

உலக ஏழை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். நிதி ஆயோக் அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் 7 சதவீதம் (அதாவது 10 கோடி மக்கள்) ஒவ்வொரு ஆண்டும் வறுமைக் கோட்டுக்குக் கீழே சுகாதாரத்திற்காகப் பணம் செலவழிக்கிறார்கள். நமது சுகாதார அமைப்பு மிகவும் விலை உயர்ந்தது என்பதை இது காட்டுகிறது.

இந்தியாவில் நகர்ப்புறங்களில் 20 மில்லியன் குழந்தைகள் தெருக்களில் வாழ்கின்றனர். நாட்டில் வறுமையின் காரணமாக 6 லட்சத்து 31 ஆயிரம் பேர் வீடில்லாமல் உள்ளனர்.

வெற்று முழக்கங்கள்:

மேலே உள்ள புள்ளிவிவரங்கள் மூலம் நாட்டில் வேலையின்மை அதிகரித்து வறுமை தாண்டவம் ஆடுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். நாட்டில் ஏழை மக்கள் இன்னும் ஏழ்மை நிலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., நாட்டில் வறுமை ஒழிந்துவிட்டது என்று நாள்தோறும் வெற்று முழக்கங்களை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டு வருகிறது.

ஜி.எஸ்.டி. என்ற வரி விதிப்பு முறையால், தங்களது தொழில்கள் முடங்கிவிட்டதாகவும், வருவாய் பெரும் அளவுக்கு குறைந்துவிட்டதாகவும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குற்றம்சாட்டி வேதனை அடைந்து வருகின்றன. ஜி.எஸ்.டி. முறையை மாற்றி அமைக்க வேண்டும் என வணிக நிறுவனங்கள் கோரிக்கை வைத்தால், அந்த கோரிக்கைகளை மத்திய அரசு சரியான முறையில் பரிசீலனை செய்வது இல்லை. மாறாக அலட்சியம் செய்து, கோரிக்கை வைக்கும் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் ஏளனம் செய்யப்படுகிறார்கள். இதன் காரணமாக வேதனை அடையும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் மேற்கொண்டு, எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல், இருந்து விடுகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரி முறை, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், அனைத்து அத்தியாவசிப் பொருட்களின் விலைவாசிகள் தாறுமாறாக வேகமாக உயர்ந்து வருகின்றன. இதன் காரணமாக மக்களிடம் வாங்கும் சக்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து வருவதால், வணிக நிறுவனங்களில், பொருட்கள் தேக்கம் அடைந்து விடுகின்றன. வணிகம் வீழ்ச்சி அடைந்து பெரும் அளவுக்கு வருவாய் இழப்பை சந்திக்க வேண்டிய கட்டாய நிலைக்கு வணிகர்கள் தள்ளப்படுகிறார்கள். வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல், வேதனை மேல் வேதனையை சுமக்க வேண்டிய நிலை, வணிகர்களுக்கு மட்டுமல்ல, மாத சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் நிலைமை:

இந்தியாவில் சுமார் 25 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். தாய் நாட்டை உண்மையாக நேசிக்கும் மக்களாக இருந்துவரும் முஸ்லிம்கள், நாள்தோறும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியே உள்ளனர். உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

உயர்கல்வி பெற்றாலும், வேலைவாய்ப்புகளில் சேரும் முஸ்லிம் இளைஞர்கள் மிகமிக குறைந்து அளவுக்கு மட்டுமே உள்ளனர். கடந்த பத்து ஆண்டு காலமாக பா.ஜ.க. நாட்டு மக்கள் மத்தியில் விதைத்த நச்சு கொள்கை, நச்சு பேச்சு, நச்சு எண்ணங்கள், முஸ்லிம்களை மிகப்பெரும் அளவுக்கு பாதித்து வருகிறது. வட மாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் எப்போதும் ஒருவித அச்சத்துடன் வாழ வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனினும், அனைத்துவிதமான துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்கும் முஸ்லிம்கள், இந்திய மக்கள் அனைவரையும் தங்கள் சகோதரர்களாக, சகோதரிகளாக நினைத்து பழகுகிறார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில், சகோதரத்துவ மனப்பான்மை மிகவும் உச்சத்தில் இருந்து வருகிறது. இன்பம், துன்பங்களில் ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்லும் நல்ல பண்பாடு இருந்து வருகிறது. இதனை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.

நாட்டில் நிலவும் வேலையின்மை, வறுமை அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, முற்றுப்புள்ளி வைக்க எந்தவித முயற்சிகளையும் செய்யாமல், மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணத்திலேயே காரியங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நாட்டில் வாழும் 140 கோடி மக்களும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் எல்லா வளங்களும் பெற்று வாழ திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே, வேலையின்மை வறுமை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் நாட்டின் நலனின் அக்கறை கொண்ட சிந்தனைவாதிகளின் கருத்ததாக இருந்து வருகிறது.

================================

No comments: