சமூக ஊடகங்களின் காட்டில்.....!
தற்போதைய வேகமான நவீன விஞ்ஞான உலகில், மனித வாழ்க்கையும் மிகமிக வேகமாக பயணித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பயணத்தில் மனிதன் தன்னை தொலைத்துவிட்டு, மன நிம்மதி இல்லாமல் அமைதியை தேடி அலைந்துக் கொண்டிருக்கின்றான். மனிதன் மன நிம்மதி இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தற்போதைய நிலையில் சமூக ஊடகங்கள் முக்கிய இடம் பிடித்து, மனித இனத்தை ஆட்டிப் படைத்து வருகின்றன.
நாள்தோறும் பல மணி நேரம் சமூக ஊடகங்களில் தனது கவனத்தைத் திருப்பி, அதில் மூழ்கியே, வாழ்க்கையின் அனைத்துவிதமான பலன்களையும் மனிதன் இழந்து வருகின்றான். மேலும், ஏக இறைவன் வழங்கிய அற்புதமான வாழ்க்கையை அனுபவித்து ரசித்து வாழ மறந்துவிடுகின்றான். தாம் மட்டுமல்லாமல் தம்முடைய குழந்தைகளையும் சமூக ஊடகங்களில் மூழ்கிவிடபெற்றோர்கள் முக்கிய காரணமாக இருந்து விடுகிறார்கள். இதனால், இளம் தளிர்களின் வாழ்க்கை தொலைந்து போகிறது. சமூக ஊடங்கங்கள் மூலம் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பல்வேறு தொல்லைகளுக்கும் பாதிப்புக்கும் ஆளாகும் நிலை தற்போது நிலவி வருகிறது.
தனியாக விடாதீர்கள்:
இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க குழந்தைகளை எப்போதும் தனியாக இருக்க பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. அப்படி தனியாக இருக்க அனுமதித்தால், அவர்கள் சமூக ஊடகங்களில் தொலைந்து போவார்கள் என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், வீட்டில் உள்ள அனைவரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளும் இதைச் செய்கிறார்கள். ஆனால் சில குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் மூலம் உருவாக்கும் சிக்கலில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வழி தெரியாது. இதன் காரணமாக குழந்தைகள் மன மற்றும் உடல் ரீதியாக பாதிப்பு அடைக்கிறார்கள். இந்த பாதிப்பு பின்னாளில் அவர்களின் வாழ்க்கையை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கி விடுகிறது. எனவே, வீட்டில் இருக்கும் குழந்தைகள் தனியாக இருப்பதையும், சமூக ஊடகங்களில் மூழ்கி இருப்பதையும் அனுமதிக்காமல், அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பாதுகாப்பான பயன்பாடு:
சமூக ஊடகங்களின் பாதுகாப்பான பயன்பாட்டைப் பற்றி நீங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். அதற்கு நீங்கள் சில முக்கியமான குறிப்புகளை பின்பற்ற வேண்டும். உங்கள் குழந்தை சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால், எந்தவித பிரச்சினையும் வரவில்லை என நீங்கள் நினைத்தால், அதை நம்பிக்கையுடன் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் கூறுவதைக் கோபப்படாமல் மிகவும் அமைதியாகக் கேளுங்கள். யாராவது அவரை கிண்டல் செய்தால், அல்லது கேலி செய்தால், கிண்டல் செய்பவர் அவரது கருத்துகளால் கிண்டல் செய்தவதை தாழ்வாக உணருங்கள். குழந்தைகளுக்கு யாராவது மிரட்டல் செய்திகளை அனுப்பினால், அந்த அம்சத்தை உடனடியாக பரிசீலித்து, பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வு காண வேண்டும்.
வீட்டில் தனிப்பட்ட முறையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வீட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சில விதிகளை அமைக்க வேண்டும். ஒரு குழந்தை எந்த அளவிற்கு, எந்த நேரத்தில், யாருடன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். உங்கள் குழந்தை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தொடங்கும் போது இதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
சில சமூக ஊடகங்களில் பயன்படுத்த வயது வரம்புகள் உள்ளன. உங்கள் பிள்ளை குறைந்த வயது உள்ளவராக இருந்தால், அவரை சட்டவிரோதமான வழியில் செல்ல அனுமதிக்காதீர்கள். உங்கள் குழந்தை பயன்படுத்த விரும்பும் எந்தவொரு சமூக ஊடகத் தளத்தின் தனியுரிமைக் கொள்கை மற்றும் நடத்தை விதிகள் பற்றி முழுமையாக அறிந்திருங்கள். குழந்தைகளின் இடுகைகளை அந்தந்த இயங்குதளம் கண்காணிக்கிறதா என்பதையும் சரிபார்க்கவும். அதேசமயம், குழந்தையின் பக்கத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தைக்கு ஏற்கனவே தெரிந்த ஆன்லைன் நண்பர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டும். இது சம்பந்தமாக, நீங்கள் அவரை வழிநடத்தும் கடமையைச் செய்ய வேண்டும். உங்கள் குழந்தையை அந்நியர்களிடமிருந்து விலக்கி வைக்க உண்மையான நண்பர்களுடன் சந்திப்பது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த உங்கள் பிள்ளைக்கு அறிவுரை கூறுங்கள். அதில் அவருக்குப் பிடித்தமான கவிதைகளையும் கதைகளையும் பதிவிட வேண்டும். பயனுள்ள வீடியோக்களைப் பார்க்க வேண்டும். அவர் வயதாகும்போது, அவரது மூல கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவரை ஊக்குவிக்க வேண்டும். சமூக ஊடகங்களில், மக்கள் கருத்துகளை தெரிவிக்கிறார்கள், திருத்தங்களை செய்கிறார்கள். இந்தக் கருத்துக்களையும் கவனமாகப் படிக்க வேண்டும். குறைகளை திருத்துங்கள். ஆனால் உயர்ந்த பாராட்டுக்களால் திருப்தி அடையாதீர்கள். அதேநேரத்தில் அதை மேலும் செம்மைப்படுத்துங்கள்.
கவனம் மிகவும் அவசியம்:
சமூக ஊடகங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்கள் நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டும் கலந்த கலவை என்பதை புரிந்துகொண்டு, அவற்றை நன்மையான விஷயத்திற்காக பயன்படுத்த வேண்டும். அதில் பெற்றோர்கள் மட்டுமல்லாமல், தங்களது குழந்தைகளும் கவனம் செலுத்த வேண்டும். சமூக ஊடகங்கள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை உருவாகிவிட்டதால், சமூக ஊடகங்களின் மத்தியில் வாழும் போது, கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் இருப்பது மிகமிக அவசியம். இதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment