"வாரியத் தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத சி.பி.எஸ்.இ. உத்தரவு"
- உர்தூ மொழி மாணவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து -
தெலங்கானாவின் ஹைதராபாத், ஹரியானாவின் நுஹ் மற்றும் பீகாரின் தர்பங்கா ஆகிய இடங்களில் உள்ள 'மாதிரி பள்ளிகள்' மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் (MANUU) கீழ் உர்தூ மொழியில் கல்வியை வழங்குகின்றன. இந்த பள்ளிகள் சி.பி.எஸ்.இ.(CBSE) உடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிகள் மொழியின் அடிப்படையில் எந்த மொழியையும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. மாறாக, மாணவர்கள் தங்கள் சேர்க்கை படிவங்களை நிரப்பும்போது அவர்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய பள்ளி வாரியமான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மாணவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியிலும் வாரியத் தேர்வுகளை எழுதக்கூடாது என்ற முடிவானது, மௌலானா ஆசாத் தேசிய உர்தூ பல்கலைக்கழகத்தின் (MANUU) கீழ் இயங்கும் மூன்று உர்தூ நடுத்தரப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கவலை அடையச் செய்துள்ளது. ஹைதராபாத், நுஹ் (ஹரியானா) தர்பங்கா (பீகார்) ஆகிய இடங்களில் உள்ள MANUU "மாதிரி பள்ளிகள்" உர்தூ மொழியில் கல்வியை வழங்குவதுடன், இந்த பள்ளிகள் CBSE உடன் இணைக்கப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ.முடிவு:
இத்தகைய சூழ்நிலையில், வாரியத்தின் அனுமதியின்றி இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியிலும் எழுதப்பட்ட விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்று கடந்த ஜூன் மாதம் சிபிஎஸ்இ நிர்வாகக் குழு முடிவு செய்தது. டெல்லியில் உள்ள பள்ளிகள் மட்டுமே இந்த அனுமதியைப் பெறுவதற்கான விருப்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
CBSEயிடமிருந்து எந்த அனுமதியும் பெறாமல், அதன் விஜயவாடா பிராந்தியத்தின் கீழ் உள்ள பள்ளியின் மாணவர்கள் உர்தூ மொழியில் விடை எழுதுவதை வாரியம் இந்த ஆண்டு கவனித்தது. மேலும் இந்த மாணவர்கள் MANUU பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. "வாரியத்தின் அனுமதியின்றி இந்தி அல்லது ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் விடை எழுதும் மாணவர்களின் விடைப் புத்தகங்கள் (விடைத்தாள்கள்) மதிப்பீடு செய்யப்படக் கூடாது என்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மண்டல அலுவலகம் அறிவுறுத்தியது.
இந்த அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், எந்த ஒரு மாணவர் தானாக முன்வந்து விடை எழுதினால். வாரியத்தின் கொள்கைக்கு எதிராக இந்தி அல்லது ஆங்கிலம் தவிர மற்ற மொழி, பாடத்தில் எந்த மதிப்பெண்களும் வழங்கப்படாமல் அவரது முடிவு அறிவிக்கப்படும்" என்றும் வாரியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தின் மினிஸ்ட்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகளின் விளக்கம்:
மௌலானா ஆசாத் தேசிய உர்தூ பல்கலைக்கழகம் இந்த மூன்று மாதிரிப் பள்ளிகளை கடந்த 2010 இல் தொடங்கியது. இவற்றில் இரண்டு பள்ளிகளின் அதிகாரிகள், மாணவர்களின் கற்றல் மொழி உர்தூ என்பதை சி.பி.எஸ்.இ.யின் முழு கவனத்துடன் இணைக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
MANUU பள்ளிகளின் மாணவர்கள் 2020 ஆம் ஆண்டு வரை ஆங்கிலம், இந்தி மற்றும் உர்தூ மொழிகளில் வினாத்தாள்களைப் பெற்றனர். 2021 முதல், உர்தூவில் வினாத்தாள் வழங்குவதை வாரியம் நிறுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆங்கிலம் மற்றும் இந்தியில் வினாத்தாள்கள் அனுப்பப்பட்டாலும், இந்த மூன்று பள்ளிகளின் மாணவர்களும் உர்தூ மொழியில் தங்கள் பதில்களை எழுதினர். சிபிஎஸ்இயின் சமீபத்திய முடிவிற்குப் பிறகு, இந்தப் பள்ளிகளின் மாணவர்கள் உர்தூ மொழியில் பதில் எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
"உர்தூ மொழியிலும் வினாத்தாள் அனுப்புவதை நிறுத்த முடிவு செய்வதற்கு முன் சிபிஎஸ்இ எங்களுடன் எந்த விவாதமும் நடத்தவில்லை. எங்கள் மாணவர்கள் உர்தூ மொழியில் இல்லாததால் கேள்விகளைப் புரிந்துகொள்வதில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து சிபிஎஸ்இக்கு தெரிவித்துள்ளோம். வாரியம் இன்னும் பிரச்சனை தீர்க்கப்படவில்லை" என்று MANUU பள்ளியின் அதிகாரி ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கைக்கு எதிரானது:
MANUUஇன் அரசியல் அறிவியல் பேராசிரியரான அஃப்ரோஸ் ஆலம், தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியில் கல்வியை ஆதரிக்கிறது என்றும் CBSE இன் நடவடிக்கைகள் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். "மாணவர்கள் உர்தூ மொழியில் கற்கத் தொடங்கியவுடன், அந்த மொழியில் தான் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அவர்களை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதச் சொல்வது நியாயமற்றது," என்றும் அஃப்ரோஸ் ஆலம் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரத்தில் CBSEயின் தேர்வுக் கட்டுப்பாட்டாளரான சன்யம் பரத்வாஜ், MANUU பள்ளிகளை உர்தூ நடுத்தரப் பள்ளிகளாக அங்கீகரிக்க மறுத்துவிட்டார். "டெல்லியில் மட்டுமே உர்தூ நடுத்தர பள்ளிகள் உள்ளன, அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப, வினாத்தாள்கள் உர்தூவில் வழங்கப்படுகின்றன" என்றும் பரத்வாஜ் விளக்கம் அளித்துள்ளார்.
மௌலானா ஆசாத் தேசிய உர்தூ பல்கலைக்கழகத்தின் (MANUU) கீழ் இயங்கும் மூன்று உர்தூ நடுத்தரப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உர்தூ மொழியில் கேள்வித்தாள்களுக்கு விடை அளிக்க மறுக்கப்பட்டு இருப்பது உர்தூ மொழி ஆர்வலர்களை மட்டுமல்லாமல், உர்தூ மொழியில் கல்விப் பயிலும் மாணவர்களையும் கவலை அடையச் செய்துள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment