Friday, September 27, 2024

கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் கே.ரகுமான் கான் பேச்சு.....!

ஆர்.எஸ்.எஸ்.-சின் விருப்பத்தின் பேரில்  ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு  எதிராக சமுதாயம் ஒருங்கிணைந்து போராட வேண்டும்....!

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.ரகுமான் கான் பேச்சு.....!!

சென்னை,செப்,28- வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாக்பூரின் ஆர்.எஸ்.எஸ். மூலம் ஒன்றிய அரசு கொண்டு வந்திருப்பதாக ஒன்றிய முன்னாள் அமைச்சர் கே.ரகுமான் கான் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரையின் முழு விவரம் இதோ:

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா - 2024 தொடர்பாக சென்னையில் நடைபெறும் இந்த கருத்தரங்கம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்கமாகும். சந்தேகமின்றி, இந்த கருத்தரங்கம் மூலம் நாட்டிற்கு ஒரு முக்கியமான செய்தியை கொண்டு செல்லும் என்பது உறுதி. வக்பு சொத்துக்கள் மூலம் சமுதாயம் பயன் அடைய வேண்டும் என்பதே நோக்கமாகும். அந்த முக்கிய நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தற்போது வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா என்ற பெயரில் ஒரு புதிய நெருக்கடியை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் மறைமுகமாக முஸ்லிம்களின் மத விவகாரங்களில் மூக்கை நுழைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நாக்பூரில் இருந்து ஆர்.எஸ்.எஸ். மூலம்தான் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முக்கிய காரணம் நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாகும். அதற்காக தான் வக்பு வாரிய சட்டத்தின் மீது அவர்களை கை வைத்துள்ளார்கள். மற்ற அனைத்திலும் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டதால், தற்போது மக்களை குழப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வக்பு வாரிய சட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள். இதனை அவர்கள் ஏன் கையில் எடுத்து இருக்கிறார்கள் என்றால், முஸ்லிம்கள் அல்லாத சகோதர சமுதாய மக்களிடம் ஒருவித குழப்பத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்பது தான் அவர்களின் முக்கிய திட்டமாகும். 

முஸ்லிம்கள் குறித்து பொய்யான பிரச்சாரம்:

முஸ்லிம் சமுதாயம் இந்தியாவின் சொத்துகளை கொள்ளையடிக்கிறார்கள். அதிகளவு சொத்துக்களை தங்கள் கைகளில் வைத்துள்ளார்கள் என்பது போன்ற ஒரு எண்ணத்தை அவர்கள் உருவாக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். அதற்காக தான் இந்த சட்டத்தை கொண்டு, வக்பு சொத்துக்கள் மீது அவர்கள் குறிவைத்து இருக்கிறார்கள். ஒன்றிய சிறுபான்மையின துறை அமைச்சரின் அறிக்கையை நீங்கள் நன்கு உற்று கவனித்தால் இந்த உண்மை நன்கு தெரியவரும். அவர்கள் வக்பு வாரிய சட்டத்தில் 40க்கும் மேற்பட்ட மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். 

பெரும் அளவுக்கு மாற்றம் செய்யப்பட்ட இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், வக்பு சொத்துக்கள் அனைத்தும் பறிபோகும். முஸ்லிம் சமுதாயம் அனைத்து உரிமைகளையும் இழந்துவிடும். எனவே தான் அவர்கள் தொடர்ந்து தவறான பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். அதன்மூலம் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் குழப்பம் அடைய வேண்டும் என்ற நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது. 

எனவே தான், நான் பல பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, வக்பு வாரிய சட்டம் குறித்தும், வக்பு சொத்துக்கள் குறித்து சகோதர சமுதாய மக்களிடம் மிகவும் தெளிவான முறையில் அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வருகிறேன். வக்பு சொத்துக்களை பாதுகாக்க தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் நடத்தப்பட வேண்டும். கலந்துரையாடல், செய்தியாளர்கள் சந்திப்பு போன்றவற்றை நடத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மட்டுமே, சகோதர சமுதாய மக்களிடம் இருந்துவரும் சந்தேகங்களை போக்க முடியும். அவர்களிடம் இருக்கும் சந்தேகங்கள் நீக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

இப்படி நாம் செயல்படவில்லை எனில், நிச்சயம் வக்பு வாரிய சட்டம் குறித்து அவர்களிடம் தவறான புரிதல் இருக்கும். வக்பு சொத்துக்களை பாதுகாக்க வேண்டுமானால், நாட்டில் உள்ள ஒவ்வொரு சமுதாய மக்களின் ஆதரவு நமக்கு கட்டாயம் தேவை. அப்படி செய்யவில்லை எனில் நாம் தோல்வியை தான் சந்திக்க நேரிடும். பா.ஜ.க.வின் சூழ்ச்சி வலையில் சிக்கி மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

வக்பு என்பது என்ன?

வக்பு என்பது என்ன? அந்த வக்பு வாரியத்தை சீர்குலைக்க பா.ஜ.க. எப்படிப்பட்ட சதி திட்டங்களை அரங்கேற்றி வருகிறது? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வக்பு என்பது ஒரு முஸ்லிம் தன்னுடைய சொத்தை நல்ல பணிக்காக அர்ப்பணிப்பு செய்வதாகும். மார்க்கப் பணிகளுக்காகவும், அறக்காரியங்களுக்காகவும், சமுதாய நன்மைக்காகவும், ஒரு சொத்து வக்பு செய்யப்படுகிறது. ஒரு சொத்து வக்பு செய்யப்பட்டால், ஒருவர் தன்னுடைய அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார். ஏக இறைவனின் பெயரால் வக்பு செய்யப்பட்டு விட்டால், அனைத்து உரிமைகளும் வக்புக்கு சென்று விடுகிறது. அல்லாஹ் தான் அனைத்து வக்பு சொத்துக்களுக்கும் உரிமையாளன் ஆகிவிடுகிறான்,. 

வக்பு என்பது ஒரு தனிப்பட்ட மனிதன் தன்னுடைய சொத்தை அல்லாஹ்விற்கு தானம் செய்துவிட்டதால், அவனுக்கும் அல்லாஹ்விற்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டு விடுகிறது. அல்லாஹ்வின் அருள் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஒருவர் தன்னுடைய சொத்தை வக்பு செய்து விடும்போது, அதில் யாரும் தலையிட முடியாது. சொத்தை அபகரிக்க முடியாது. 

கடந்த 2013ஆம் ஆண்டு நாங்கள் வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்போது, முஸ்லிம் அல்லாத சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சமூகச் சேவைக்காக தங்களுடைய சொத்தை தானம் செய்யும்போது, அதில் யாரும் கை வைக்கக்கூடாது. தலையிடக் கூடாது என்ற வகையில் தான் சட்டத்தை கொண்டு வந்தோம். அதுவும் ஒருவிதமான வக்பு தான். கடந்த காலங்களில் அரசர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது சொத்துகளை தானம் செய்து வக்பு ஆக்கியிருக்கிறார்கள். முஸ்லிம் அல்லாத அரசர்கள் கூட உயர்ந்த நோக்கத்திற்காக வக்பு செய்து இருக்கிறார்கள். பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் முஸ்லிம் அல்லாத மக்கள் வக்பு ‘செய்து இருக்கிறார்கள். பல்வேறு மஸ்ஜித்துகள், தர்காக்கள் மற்றும் அனாதை இல்லங்களுக்கு என அவர்கள்  நிலங்களை வழங்கி இருக்கிறார்கள்.  இவை அனைத்தும் உயர்ந்த நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டதாகும். 

உயர்ந்த நோக்கத்திற்காக கொடுக்கப்பட்ட வக்பு சொத்துக்களை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி அவர்கள் பறிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். ஒருமுறை வக்பு செய்துவிட்டால் அது எப்போதும் வக்பாகவே இருக்கும். அதை யாரும் மாற்ற முடியாது. வக்பு சொத்துக்களை யாரும் பறிக்க முடியாது. மாற்ற முடியாது. இதனை பல்வேறு தீர்ப்புகள் மூலம் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 

நீதிமன்றங்கள் தீர்ப்பு:

மஸ்ஜித்கள், தர்ஹாக்கள் உள்ளிட்டவைகளை பராமரிக்க அளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தங்கள் வசத்தில் கொண்டு வர முயற்சி செய்யப்படுகிறது. அதற்கு பல்வேறு உதாரணங்களை என்னால் எடுத்துக் கூறி முடியும். ஆந்திர பிரதேசத்தில் ஒரு வக்பு வாரிய சொத்து தொடர்பாக பிரச்சினை வந்தபோது, வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வக்பு வாரிய சொத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என உறுதியாக கூறி, ஆந்திர அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இதன்மூலம் ஆந்திர பிரதேச அரசு, இழப்பீட்டு தொகையை வழங்கி, குறிப்பிட்ட அளவு நிலத்தையும் திரும்ப ஒப்படைத்தது. இதேபோன்ற ஹைதராபாத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கில் கூட, நீதிமன்றங்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளன. 

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, வக்பு சொத்துக்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டபோது, அதற்கு விளக்கம் அளித்த இந்திரா காந்தி, வக்பு சொத்துக்கள் எப்போதும் வக்பு சொத்துக்களாகவே இருக்கும் என கூறியிருந்தார். அதன்படி, நான் சிறுபான்மையின அமைச்சராக இருந்தபோது, அந்த கருத்தின் அடிப்படையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. 2013ஆம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தபோது, அனைத்து தரப்பரினமும் ஆலோசனை பெறப்பட்டது. பா.ஜ.க.விடம் கூட நாம் ஆலோசனைகளை பெற்றோம். 

என்னுடைய தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு பல்வேறு பல்வேறு திருத்தங்களை கொண்டுவந்தபோது, அனைத்து கட்சிகளும் அதற்கு ஆதரவு அளித்தனர். ஆனால், தற்போது எந்தவித ஆலோசனைகளையும் பெறாமல், கருத்துகளை கேட்காமல், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 1995 சட்டத்தில் திருத்தம் கொண்டு வர சுமார் 25 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது மீண்டும் திருத்தம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

வக்பு வாரியத்திற்கு எந்தவித அதிகாரம் இல்லை. தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வக்பு வாரியத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால், வக்பு வாரியத்தின் அனைத்து அதிகாரங்களையும் பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வக்பு வாரியத்தில் அரசு நிச்சயம் மூக்கை நுழைக்க முடியாது. அது முறையாக செயல்படவில்லை என்றால் மட்டுமே அரசு தனது பணிகளை செய்ய முடியும். 

என்ன காரணம்?

ஆனால், தற்போது வக்பு வாரியத்தில் திருத்தம் கொண்டு வர என்ன காரணம்? பல்வேறு காரணங்களை அரசு கூறுகிறது. ஊழல் போன்ற காரணங்கள் இருந்து வருகின்றன. ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காணரங்களும் சொல்லப்படுகின்றன. ஆக்கிரமிப்பு என்பது சட்டத்தின்படி ஒரு மிகப்பெரிய குற்றமாகும். வக்பு வாரியம் சரியான முறையில் செயல்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். 

நான் நாட்டில் உள்ள அனைத்து வக்பு வாரியங்களுக்கு சென்று ஆய்வு செய்து இருக்கிறேன். கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தின்படி, அவை சரியான முறையில் செயல்பட்டு வருகின்றன. இதற்காக தற்போது மத ரீதியாக பிரச்சினையை ஏற்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள். சட்டப்பிரிவு 40ன்படி வக்பு சொத்துக்கள் குறித்து தவறான கருத்துக்களை அவர்கள் பரப்பி வருகிறார்கள். 

தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் மூலம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அரசிலமைப்புச் சட்டம் 14ன் படி தவறாகும். காரணம் இதுபோன்ற ஒரு நிலை இதர மத ரீதியான அமைப்புகளில் கடைப்பிடிக்க முடியாது என அவர்கள் கூறி இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, வக்பு வாரியத்தில் மட்டும் இரண்டு முஸ்லிம் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள்.  அதற்கு அவர்களிடம் சரியான விளக்கம் இல்லை. அரசியலமைப்பு சட்டம் 26ன்படி,  மத ரீதியான அமைப்புகள் தங்களுடைய பணிகளை தங்களுடைய மத ரீதியாக செயல்படுத்த உரிமை அளிக்கிறது. இதில் அரசு மற்றும் பிற அமைப்புகள் தலையிட முடியாது.  இது அடிப்படை உரிமைகள் ஆகும்.

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்:

இத்தகைய சூழ்நிலையில் மக்களிடையே குழப்பதை ஏற்படுத்த வேண்டும் என ஒரே நோக்கத்தில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்மூலம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நாம் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இந்த சட்டத் திருத்தம் மூலம் ஒரு நன்மை கிடைத்து இருக்கிறது. அது, சமுதாயம் தற்போது விழித்துக் கொண்டுள்ளது. இனி நாம் தூங்கவே கூடாது. தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த போராட்டத்தை வெற்றி போராட்டமாக மாற்ற தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பா.ஜ.க. இதில் இதுபோதும் வெற்றி பெறவே கூடாது. 

நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சரியான புரிதல் கொண்டு இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு கூறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுகவின் ஆ.ராசா உள்ளிட்டோர் சரியான முறையில் செயல்பட்டு வருகிறார்கள். இதேபோன்று, மதசார்பற்ற மற்ற உறுப்பினர்கள் கூட நன்கு செயல்படுகிறார்கள். ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தை மட்டுமல்ல மக்களையும் திசை திருப்பி இருக்கிறார்கள். மொத்தம் 85 பிரிவுகளை மாற்றம் கொண்டு வந்து வருகிறார்கள். இது அனைத்தும் அமல்படுத்த முடியாது அளவில் உள்ளது. இந்த சட்டம் மிகவும் பிற்போக்கு சட்டமாகும். எனவே இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 

இவ்வாறு ரகுமான் கான் பேசினார். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: