Tuesday, September 24, 2024

எப்போதும் மகிழ்ச்சியாக....!

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா...?

வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு  பெரும்பாலான மக்கள் நிச்சயம் முடியாது என்றே விளக்கம் அளிக்கிறார்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், வயது ஏறிக் கொண்டே செல்லும்போது, மகிழ்ச்சியும் மெல்ல மெல்ல பறிப் போகிறது என்ற நினைப்பு, எண்ணம் நம் அனைவருக்கும் உண்டு. இதன் காரணமாக அலுவலகப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, பலர் தங்கள் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறார்கள். எப்போதும் ஒருவித இறுக்கமான மனநிலையில் இருந்து வருகிறார்கள். 

ஏக இறைவன் நமக்கு வழங்கியுள்ள இந்த அற்புதமான வாழ்க்கையில், நாம் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எப்போதும் நண்பர்கள், உறவுகளை இணைத்துகொண்டு, ஆனந்தமான சூழ்நிலையை உருவாக்க முடியும். இதற்கு முக்கியமாக, நம்மிடம் சரியான புரிதல் இருக்க வேண்டும். 60 வயது ஆகிவிட்டால், நம்முடைய வாழ்க்கை அத்துடன் முடிந்து போவதில்லை. மகிழ்ச்சி பறிப் போய்விடாது. 

அண்மையில், சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளி ஒன்றை காணும் வாய்ப்பு நமக்கு கிட்டியது. அதில், ஒரு அழகான சூழ்நிலையில், அதிக வயதுடைய பெண்கள் பலர் ஒன்றாக கூடி, மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்த காணொளியில் இடம்பெற்றிருந்த பெண்கள் அனைவருக்கும் 70 அல்லது 80 வயதுக்கு மேல் இருக்கும். ஒருசில பெண்கள் 100 வயதை தாண்டி இருந்தார்கள். அப்படி இருந்தும், அவர்கள் அனைவரும் எந்தவித சோர்வும் இல்லாமல், மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஒன்றாக கூடி தங்கள் எண்ணங்கள், ஆசைகளை பறிமாறிக் கொண்டார்கள். 

மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? 

இப்படி வயதான இந்த மூதாட்டிகள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் என கேள்வி எழுந்தபோது, அதற்கு அவர்கள் மிக அழகாக விளக்கம் அளிக்கிறார்கள். "நாங்கள் அனைவரும் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு, அதன்மூலம் பல நல்ல பணிகளை செய்து வருகிறோம். குறிப்பாக, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். அத்துடன் ஒவ்வொரு மாதமும் அனைவரும் ஒன்று கூடி, மகிழ்ச்சியுடன் பேசுவதுடன், நம்முடைய எண்ணங்களை ஒவ்வொருவரிடமும் பரிமாறிக் கொண்டு, ஆனந்தம் அடைகிறோம். மனநிலையை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே எங்களை மிகவும் சிறப்புடன் செயல்பட உதவுகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் நல்ல நட்புடன் இருந்து வருகிறோம். 

வாழ்க்கையை மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வைத்துக் கொள்ள புத்தகங்கள் ஒரு நல்ல துணை என்பதை நாங்கள் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம். அதன் காரணமாக, ஒரு நூல் நிலையம் எங்கள் குழுவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அற்புதமான நூல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த நூல்களை படிக்கும் நம்மில் பலர், அதுகுறித்து மற்றவர்களிடம் மிக அழகான முறையில் எடுத்துக் கூறுகிறார்கள். அந்த நூலின் சிறப்பு, குறை ஆகிய அனைத்தையும் அறியும்போது, நூல்கள் மீதான எங்கள் பிரியம் மேலும் அதிகமாக மாறிவிடுகிறது. நூல்கள் மீது காதல் ஏற்பட்டு விடுகிறது. எனவே நல்ல நூல்களை தேடி தேடி வாங்கி அதை படிக்கிறோம். அதன்மூலம் நல்ல தெளிவு எங்களுக்கு கிடைக்கிறது. 

எப்போதும் உற்சாக மனநிலை:

நாங்கள் 60 அல்லது 80 வயதை கடந்துவிட்டாலும் இப்போதும், எப்போதும் இளமையாகவே எங்களை உணர்கிறோம். மனதில் எப்போதும் இளமை எண்ணங்கள் அசைப் போட்டுக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு மாதமும், வேறுவேறு பகுதிகளில் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம். விதவிதமான உடைகள் அணிந்துகொண்டு, ஆரோக்கியமான எண்ணங்களுடன் எப்போது உற்சாகமான மனநிலையில் இருந்து வருகிறோம். இதன் காரணமாக தான், எங்கள் முகங்களில் கூட, உற்சாகம் இருந்து கொண்டே இருக்கிறோம். பேச்சில் உற்சாகம், செயலில் உற்சாகம் என அனைத்திலும் உற்சாக மனநிலையில் இருக்கும்போது, வயது ஒரு தடையாக இல்லாமல், எங்களை எப்போதும் ஆர்வதுடன் செயல்பட வைக்கிறது. 

நகர்ந்துகொண்டே இருங்கள்:


வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நகர்ந்துகொண்டே இருங்கள். ஒரே இடத்தில் சோர்வு அடைந்து அமர்ந்து விடாதீர்கள். நல்ல நட்புகளை, உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் அடிக்கடி பேசி மகிழ்ந்து, அன்பை வெளிப்படுத்துங்கள். இங்கே இருக்கும் அனைவரும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். ஆனால், அனைவரிடமும், உற்சாகமும் மகிழ்ச்சியும் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அதற்கு முக்கிய காரணம், எங்களிடம் சோர்வு எண்ணங்கள் ஒருபோதும் இருப்பது இல்லை. நோய்கள் குறித்து எண்ணங்கள் இருப்பது இல்லை. அப்படி நோய் ஏற்பட்டாலும், அதற்கு சிகிச்சை பெற்றுவிட்டு, மீண்டும் உற்சாகத்துடன் செயல்பட ஆரம்பித்து விடுகிறோம். 

ஒருவர் மற்றவர்களின் நலனில் மிகவும் அக்கறை செலுத்தும் பண்பு எங்களிடம் உண்டு. உதவி செய்யும் மனப்பான்மை அனைவரிடமும் உண்டு. இதுபோன்ற பல காரணங்கள் தான் எங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது" இப்படி அந்த குழுவில் இடம்பெற்று இருந்த மூதாட்டிகள், மன்னிக்கவும், இளம் பெண்கள் சொன்னதை காணொளியில் கேட்டபோது, நமக்கு வியப்புக்கு மேல் வியப்பு ஏற்பட்டது. 

வேண்டாம் இந்த மனப்பான்மை:

இந்தியா உட்பட ஆசிய நாடுகளில், கொஞ்சம் வயது ஆகிவிட்டால், உடனே அவர்களை (முதியோர்களை) நாம் ஒதுக்கி வைத்து விடுகிறோம். வயதானவர்கள் மீது சரியான முறையில் அன்பு செலுத்துவதில்லை. அவர்களின் ஆசைகளை காதுகொடுத்து கேட்பதில்லை. அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில்லை. இதன் காரணமாக, எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டிய நம் முதியோர்கள், வேதனைக்கு மேல் வேதனையை அனுபவிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். முதியோர் இல்லங்களில் அடைக்கப்பட்டு விடுகிறார்கள். 

முதியோர்களும், தங்களை இளமையாக எப்போதும் நினைத்துக் கொள்வதில்லை. தங்களுக்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்ற எண்ணம் அவர்களிடம் வந்துவிட்டதால், அவர்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முதுமை ஒரு தடையில்லை என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். நட்புகளையும் உறவுகளையும் அதிகமாக வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். அதன்மூலம் நிச்சயம் மகிழ்ச்சி கிடைத்துக் கொண்டே இருக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: