நூல் மதிப்புரை
நூல் : இன்றைய இஸ்லாம்
தொகுப்பாசிரியர் : முனைவர் அ.பிச்சை
வெளியீடு : நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்,
குருவிக்காரன் சாலை,
அண்ணா நகர்,
மதுரை - 625 020.
செல்பேசி: 90803 30200, 98430 08113
விலை : ரூ.250/-
திண்டுக்கல் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற அருண் பிச்சை என்கிற முனைவர் அ.பிச்சை, "இன்றைய இஸ்லாம்" என்ற தலைப்பில் தொகுத்துள்ள இந்த நூலை, மதுரை நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. மொத்தம் 248 பக்கங்கள் கொண்ட இந்த நூல் முதற்பாகம், இரண்டாம் பாகம் இரண்டு பாகங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. முதற்பாகத்தில் மதம், கலை, ஆட்சி, இலக்கியம் என நான்கு தலைப்புகளில் இஸ்லாமிய மதம், இஸ்லாமிய உணவு, ஐரோப்பியாவில் முஸ்லிம் ஆட்சி, மற்றும் இஸ்லாமிய இலக்கியம் குறித்த பல்வேறு அரிய தகவல்கள் நல்ல முறையில் முனைவர் அ.பிச்சை தொகுத்துள்ளார்.
இரண்டாம் பாகத்தில், 'இந்தியா பாகிஸ்தான் பிரிவு' என தொடங்கி, 'தமிழுக்குத் தொண்டு செய்த முஸ்லிம்கள்' என மொத்தம் 78க்கும் மேற்பட்ட தலைப்புகளில், சுவையான தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 'காயிதே மில்லத் மறைவு' 'நாகூர் இ.எம்.ஹனிபா' 'இஸ்லாமிய மேதை அஸ்கர் அலி' 'தோப்பில் முகமது மீரான்" ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தகவல்களும், செய்திகளும் தமிழர்கள் அனைவரும் படித்து அறிந்துகொள்ள வேண்டியவை. 'பாஸ்த்தினத்தின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள செய்திகள், அங்குள்ள மக்கள் எத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறார்கள் என்பதை அழகாக படம் பிடித்து காட்டும் வகையில் உள்ளது.
மிகவும் அழகான முறையில் தொகுக்கப்பட்டுள்ள 'இன்றைய இஸ்லாம்' எனும் இந்த நூலை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும். அதன்மூலம், வாசகர்கள் மத்தியில் இஸ்லாம் குறித்தும், இஸ்லாமிய அறிஞர்கள், இலக்கியங்கள் குறித்தும் ஒரு நல்ல புரிதல் உருவாகும். அத்துடன், பள்ளி, கல்லூரி நூலகங்களிலும் இந்த நூலை இடம்பெறச் செய்தால், மாணவச் சமுதாயம் பல அரிய தகவல்களை அறிந்துகொண்டு விளக்கம் பெற முடியும் என உறுதியாக கூறலாம்.
- ஜாவீத்
No comments:
Post a Comment