Monday, September 30, 2024

வரம்பு மீறும் அசாம் முதலமைச்சர்....!

 

மீண்டும், மீண்டும் வரம்பு மீறும் அசாம் முதலமைச்சர்

அசாம் மாநில முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களுக்கு எதிராக அசாம் மாநில முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா சர்மா அனைத்து வகையான சட்டங்களையும், நடத்தை விதிகளையும் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து வெறுப்பு பேச்சுகளை அரங்கேற்றி வருகிறார் என்பதை நாடு நன்றாக அறிந்து இருக்கிறது. இத்தகைய வன்முறையை தூண்டும் வகையான பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இதுவரை கண்டிக்கவில்லை. அவர்கள் வெறும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக ஹேமந்த் பிஸ்வா சர்மாவின் நடவடிக்கைகள் இன்னும் வரம்பு மீறும் வகையில் தொடர்கின்றன.

மீண்டும் எல்லையைத் தாண்டிய பேச்சு:

அரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா சர்மா, மீண்டும் தனது வரம்பு மீறும் பேச்சுக்களை கொட்டியுள்ளார். ஹரியானாவின் சோனேபட்டில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அசாம் முதல்வர், தமது மாநிலத்தில் பெரும்பாலான மதரஸாக்களை மூடிவிட்டதாகவும், மீதமுள்ளவற்றையும் மூட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆத்திரமூட்டும் வகையில் எல்லையைத் தாண்டி விஷத்தனமான பிரச்சாரம் செய்துள்ளார். .

முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து அரியானாவில் பிரச்சாரம் செய்த சர்மா, தங்களுக்கு டாக்டர்கள்,  இன்ஜினியர்கள் மட்டுமே தேவை என்றும், மௌலவிகள் தேவையில்லை என்றும் தெரிவித்து, மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தினார். மௌலவிகள் தேவையில்லை என்பதால், அசாமில் 600 மதரஸாக்களை தாம் மூடியுள்ளதாகவும் மீதமுள்ளவற்றையும் மூடுவேன் என்றும் கூறியிருப்பது முஸ்லிம்களை மட்டுமல்ல, மதசார்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கும் மற்றவர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

காங்கிரஸ் மீதும் தாக்குதல்:

சர்மா அதோடு நிற்கவில்லை. “நாட்டின் மூலை முடுக்கெல்லாம் காங்கிரஸ் பாபர்பாலை வைத்துள்ளது” என்று கூறினார். இன்னும் சிறிய பாபர்கள் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் அனைவரையும் இந்த நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்" என்றும் அவர் விஷம் கக்கியிருக்கிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறார் என்று சர்மா கூறியது மட்டுமல்லாமல், “இந்தியாவுக்கு மருத்துவர்களும் பொறியாளர்களும் தேவை. முல்லாக்கள் அல்ல. நாடு முழுவதும் சுற்றித் திரியும் பாபர்களை தூக்கி எறிய வேண்டும். அதிகளவான மதரஸாக்களை ஏன் மூடினீர்கள் என்று காங்கிரஸார் என்னிடம் கேட்டார்கள். மீதியையும் மூடுவேன் என்று அவர்களிடம் தெரிவிக்கிறேன்” என்றும் காங்கிரஸைத் தாக்கிய அசாம் முதல்வர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்து 370 வது பிரிவை மீண்டும் கொண்டு வர விரும்புகிறார் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி ஒரே அரசியல் சாசனம் மற்றும் ஒரு தலைவரின் அடிப்படையில் இந்த நாடு இயங்கும் என்றும் உறுதிப்பட கூறினார்.

முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து வன்மம்:

அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாத்தில் ஈடுபட்ட ஹேமந்த் பிஸ்வா சர்மா, அங்கு பா.ஜ.க. ஆட்சியில் எந்த பலன்கள் மாநில மக்களுக்கு கிடைத்தது, கடந்த பத்து ஆண்டுகளாக மக்கள் பல்வேறு திட்டங்கள் மூலம் எப்படி பயன் அடைந்தார்கள் என்பதை விளக்கமாக கூறாமல், முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து, பிரச்சாரம் செய்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அசாம் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் சர்மா, தற்போது, மற்ற மாநிலங்களிலும் விஷத்தை பரப்பி, அதன்மூலம் அரசியல் லாபம் பெறலாம் என நினைக்கிறார்.

மதசார்பற்ற நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ விரும்புகிறார்கள் என்பதை நன்கு அறிந்துகொண்ட சர்மா, மக்கள் மத்தியில் இருக்கும் சகோதரத்துவ பாசத்தை உடைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதை அசாம் மாநிலத்தில் அவர் தொடர்ந்து செய்துவரும் நிலையில், தற்போது பிற மாநிலங்களிலும் செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் பிற சமூக அமைப்புகள் அசாம் முதலமைச்சரின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்து விமர்சனம் செய்துவரும் நிலையில், கூட, அவர் தனது செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வரவில்லை. மாறாக, இன்னும் முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். முஸ்லிம்கள் எப்போதும் அன்பை விதைப்பவர்கள். அமைதியை விரும்புகிறவர்கள். சகோதர நேசத்துடன் பழகும் குணம் கொண்டவர்கள் என்பதை அசாம் முதலமைச்சர் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். முஸ்லிம்கள் குறித்து திறந்த மனதுடன் அவர் ஆய்வு செய்ய வேண்டும். விஷம எண்ணத்துடன் முஸ்லிம்களை நோக்கக் கூடாது. அப்போது தான், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அசாம் முதலமைச்சரிடம் இருந்து விலகும். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

-             எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: