Thursday, September 26, 2024

கே.ரகுமான் கான் உரை....!

 நாட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்  நோக்கில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது....!

வக்பு சொத்துக்களை பாதுகாக்கும் போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின் வாங்கக் கூடாது....!!

முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.ரகுமான் கான் பேச்சு....!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவில் ஏகப்பட்ட குழப்பங்கள் மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத அம்சங்கள் இடம்பெற்று இருப்பதாக முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மாநிலங்களவைத் துணைத் தலைவருமான கே.ரகுமான் கான் குற்றம்சாட்டியுள்ளார். 

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, தொடர்ந்து கருத்துகளை கூறி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ரகுமான் கான், அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உர்தூ மொழியில் பேசினார். அப்போது, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். 

தொடர்ந்து பேசிய ரகுமான் கான், “இந்த மசோதாவில் எந்தவித சிறப்பு அம்சங்களும் இடம்பெறவில்லை. ஒவ்வொரு அம்சமும் குழப்பம் வகையில் இருக்கிறது. மசோதா தொடர்பாக சிறப்பான முறையில் ஆலோசனைகள் நடத்தப்படவில்லை. யாரிடமும் கருத்துகள் கேட்கப்படவில்லை என்று அடுக்கடுக்கான குற்றம்சாட்டினார். ஏற்கனவே வக்பு வாரிய சட்டம் குறித்து 2013ஆம் ஆண்டு சிறப்பான முறையில் ஆலோசனைகள் பெறப்பட்டு, எதிர்க்கட்சிகளின் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சட்டம் நிறைவேறியது. ஆனால், இந்த அருமையான சட்டத்தை தற்போதைய ஒன்றிய அரசு முற்றிலும் சீர்குலைக்கும் வகையில் திருத்தியுள்ளது. ஆனால், முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை செய்யும் வகையில் இந்த திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக அரசு விளக்கம் அளிக்கிறது. 

குழப்பம் ஏற்படுத்த முயற்சி:

உண்மை என்னவென்றால், நமது சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தி, முஸ்லிம் மக்களிடையே பீதியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வக்பு வாரிய நிலங்கள் குறித்து தவறான தகவல்களை அரசு தெரிவித்துள்ளது. அரசு கூறும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் தவறானவை. 9 லட்சம் ஏக்கர் நிலங்கள் வக்பு வாரியத்திடம் இல்லை. சுமார் 3 முதல் நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் தான் இருக்கும். நான் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்துள்ளேன். வக்பு வாரிய சொத்துக்கள் குறித்து தகவல்களை சேகரித்து இருக்கிறேன். 2009ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வக்பு வாரிய சொத்துக்கள் குறித்த சரியான புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

உண்மை இப்படி, இருக்க, ஒன்றிய பா.ஜ.க. அரசு வக்பு வாரிய சொத்துக்கள் குறித்து தொடர்ந்து தவறான, பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது. வக்பு வாரிய சொத்துக்கள் குறித்தும், மஸ்ஜித், கபரஸ்தான் ஆகியவை குறித்து ஒன்றிய அரசு தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறிக் கொண்டே இருக்கிறது. இதன்மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் ஆகும்.

உண்மையை விளக்க வேண்டும்:

இத்தகைய சூழ்நிலையில், நமது சகோதர சமுதாய மக்களிடம் வக்பு வாரியம் குறித்தும், அதன் நோக்கங்கள் குறித்தும், அதன் பணிகள் குறித்தும், அதன் சொத்துக்கள் ஏப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து நாம் சரியான முறையில் எடுத்துக் கூற வேண்டும். அவர்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்க வேண்டும். இதற்காக சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆலோசனைகள் மற்றும் கருத்தரங்கங்களுக்கு ஏற்பாடு செய்து, சகோதர சமுதாய மக்களை அழைத்து அவர்களிடம் வக்பு வாரியம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அவர்களிடம் உள்ள சந்தேகங்களை போக்க வேண்டும். இது முஸ்லிம் சமுதாயம் முன் உள்ள மிகப்பெரிய கடமையாகும். 

வக்பு வாரிய சட்டத் திருத்தம் குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டுக் குழு எடுத்த முடிவு குறித்து நாட்டு மக்கள் மத்தியில் நாம் எடுத்துக் கூற வேண்டும். இதற்காக சிறப்பான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நீண்ட போராட்டம்:

வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாப்பது என்பது ஒரு நீண்ட நெடிய போராட்டம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த போராட்டத்தை ஒருபோதும் சமுதாயம் கைவிடக் கூடாது. போராட்டத்தில் இருந்து பின்வாங்கினால், நமது வக்பு சொத்துகள் அனைத்தையும் நாம் இழந்துவிட நேரிடும். நல்ல நோக்கத்திற்காக வக்பு செய்யப்பட்ட சொத்துகளை இழந்துவிட்டால், பின்னர், எதையும் நாம் சரியான முறையில் செய்ய முடியாது. முஸ்லிம் சமுதாயம் மிகவும் பின்தங்கிவிடும். 

வக்பு சொத்துக்களை குறிவைத்து, நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களை நாம் சரியான முறையில் அணுகி, தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு ஒரே வழி, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களிடம், வக்பு சொத்துக்கள், வக்பு வாரியம் ஆகியவை குறித்து மிகவும் ஆக்கப்பூர்வமான முறையில் எடுத்துக் கூறி விளக்கம் அளிக்க வேண்டும். தொடர்ந்து ஆலோசனைகளையும், கருத்தரங்கங்களையும் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடத்த வேண்டும். அதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களிடையே வக்பு வாரிய சொத்துக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

இப்படி தொடர்ந்து சமுதாயம் செயல்பட்டால் தான், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான எண்ணங்களை உடைக்க முடியும். வக்பு சொத்துகளை கைப்பற்றும் முயற்சிகளை தடுத்த நிறுத்த முடியும். இதை சமுதாயம் நன்கு உணர்ந்துகொண்டு, விழித்துக் கொண்டு, தொடர்ந்து செயல்புரிந்து கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய போராட்டங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கி விடக் கூடாது. ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து சமுதாயம் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு கே.ரகுமான் கான் உரையாற்றினார். 

சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: