அதிகரித்து வரும் பணவீக்கம்.....! வீட்டு பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்கள்....!!
- ஜாவீத் -
மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உண்மையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதா என்ற கேள்விக்கு, பொதுவாக பதில் இல்லை என்றே மக்கள் கூறி வருகிறார்கள். நாட்டு மக்கள் தற்போது சந்தித்து வரும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. ஆனால் தொடர்ந்து வெற்று முழக்கங்கள் மட்டும் எழுப்பட்டு வருகின்றன.
கடந்த 10 ஆண்டு கால மோடி தலைமையிலான ஆட்சியில், அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து, பிளவுப்படுத்தி, அதன்மூலம் அரசியல் இலாபம் பெறும் முயற்சிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகள் பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு ஓரளவுக்கு பலனை அளித்துக் கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக, உண்மையான பிரச்சினைகளில் தனது கவனத்தை செலுத்த மத்திய பா.ஜ.க. அரசு தவறிவிட்டது.
அதிகரிக்கும் பணவீக்கம்:
பா.ஜ.க. தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, 'பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை என்றும், ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் வீழ்ச்சி அடைகிறது' என்றும் அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, நாடு முழுவதும் மேடைப் போட்டு கேள்வி எழுப்பினார். ஆனால், தாம் பிரதமர் பொறுப்பு வந்தபிறகு, இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தி, மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாரா என்றால், அந்த கேள்விக்கு பதில் சொல்ல பா.ஜ.க. தலைவர்கள் மறுக்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 85 ரூபாயாக உயர்ந்து விட்டது. இது வரலாறு காணாத பெறும் வீழ்ச்சி என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் அளவுக்கு குறைந்துவிட்டதால், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துவிட்டன.
தற்போது, காய்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், குறிப்பாக நகரங்களில், மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்கறி சந்தைக்கு பூண்டு வாங்க சென்றபோது கடைக்காரர்கள் ஒரு கிலோ பூண்டு 600 ரூபாய் என சொன்னபோது, மிகவும் அதிர்ச்சி அடையும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள்.
இதேபோன்று, கிலோ 28 அல்லது 30 ரூபாய்க்கு கிடைத்த கோதுமை மாவு தற்போது 35 முதல் 40 ரூபாய் வரை கிடைக்கிறது. அதேபோல், கடுகு எண்ணெய்யும் ஒரு கிலோ 175 ரூபாயை எட்டியுள்ளது. மேலும் பாலும் 65 முதல் 70 ரூபாய் வரை கிடைக்கிறது. பிற அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் கூட, எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துவிட்டன. வெங்காயத்தின் விலையை சொல்லவே வேண்டாம். அந்தளவுக்கு உயர்ந்து உள்ளது.
நாட்டு மக்கள் ஏமாற்றம்:
பண்டிகைக் காலம் முடிந்து விட்டதால், காய்கறிகள் விலைவாசி உயர்வு போன்றவற்றால் பணவீக்கத்தில் இருந்து ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மக்கள், ஏமாற்றமடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மொத்த சந்தைகளில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.30-40 ஆக இருந்தது. ஆனால் தற்போது ரூ.70-80 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் உள்ள உள்ளூர் கடைக்காரர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், வெங்காயத்தின் சராசரி விலை கிலோவுக்கு 60-70 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆனால் இன்னும் விற்பனையில் எந்த குறையும் இல்லை என்று கூறினார். வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 60 ரூபாவிலிருந்து 70 ரூபாவாக அதிகரித்துள்ளதாக மற்றுமொரு கடைக்காரர் தெரிவித்தார். 'நாங்கள் அதை சந்தையில் இருந்து வாங்குகிறோம். எனவே அங்கு கிடைக்கும் விலைகள் விற்பனை விலையை பாதிக்கிறது. விலை உயர்வால், விற்பனை குறைந்துள்ளது. ஆனால், இங்குள்ள உணவுப் பழக்கவழக்கங்களில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதால் மக்கள் இன்னும் வாங்கிச் செல்கின்றனர்' இப்படி வெங்காய வியாபாரிகள் கூறுகிறார்கள்.
பிற ஊடக அறிக்கைகளும் டெல்லி சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.80 ஆக இருந்தது என சுட்டிக் காட்டுகின்றன. ஒரு வாடிக்கையாளர் ஏஜென்சியிடம் கூறுகையில், 'குளிர்காலத்தை கருத்தில் கொண்டு விலைகள் குறையும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், ஆனால், விலை உயர்வு சமையலறை பட்ஜெட்டை சிரமப்படுத்தியதாகவும்' கூறினார்.
இதேபோன்று, ஒரு பெண், 'நான் வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கு வாங்கினேன்' என்று கூறினார். 'இதனால் வீட்டில் உணவு பழக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் நுகரப்படும் இந்த காய்கறிகளின் விலையையாவது குறைக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்' என்றும் அந்த பெண்மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் மட்டுமல்லாமல், நாட்டின் பிற நகரங்களில் கூட காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. மும்பையில் வெங்காயம் கிலோவுக்கு ரூ.72 வரை விலை உயர்ந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். மும்பையைச் சேர்ந்த டாக்டர் கான் என்ற ஒரு வாடிக்காயளர், 5 கிலோ வெங்காயத்தை ரூ.360க்கு வாங்கியதாகவும், அதேநேரத்தில் பூண்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். வெங்காயம், பூண்டு விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக கான் தெரிவித்தார். இதனால் குடும்ப வரவு செலவுத் திட்டத்தில் முன்னேற்றம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கான் உள்ளிட்ட பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர்.
பிறப் பொருட்களின் விலைகள் உயர்வு:
பிறப் பொருட்களின் விலைகளும் இதே நிலையில் உள்ளன. உருளைக்கிழங்கு, தக்காளி விலை கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகரித்து, கிலோ ரூ.64 ஆக உள்ளது. அக்டோபர் 2023 முதல் உருளைக்கிழங்கு விலை 51 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பிசினஸ் இன் சைடர் தெரிவித்துள்ளது. செப்டம்பரில் பெய்த மழையால் காரீஃப் பயிர் வருவதில் தாமதம் ஏற்பட்டது, மேலும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் பணவீக்கம் 5 புள்ளி எட்டு ஒன்று சதவீதமாக உயர்ந்துள்ளது.
மறுபுறம், நாம் பங்குச் சந்தையைப் பற்றி பேசினால், இங்கே சரிவு ஏற்பட்டது, மறுபுறம், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.35 சதவீதம் அதிகரித்து 72.14 டாலராக இருந்தது. புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் மாதத்தில் பணவீக்க விகிதம் 6 புள்ளி இரண்டு ஒன்று சதவீதத்தை எட்டியுள்ளது, இது 14 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும். பணவீக்கம் அதிகரித்ததால், அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையில் இருந்து வெளியேறியதால், பங்குச் சந்தை சரிந்தது. டெண்டர்களின்படி, பலவீனமான காலாண்டு முடிவுகள் மற்றும் உலகளாவிய சந்தையின் பலவீனமான சமிக்ஞைகள் காரணமாக பங்கு சந்தை சரிந்தது. இந்த சரிவு தொடரலாம்.
பணவீக்க விகிதத்தை 4 சதவீதத்திற்கு அருகில் வைத்திருக்க இந்திய ரிசர்வ் வங்கியை (ஆர்பிஐ) அரசாங்கம் பணித்துள்ளது. இருப்பினும், 2 சதவீத மார்ஜினும் வழங்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக அக்டோபர் , நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்தது.
நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் பாதிப்பு:
பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், பெரிதும் பாதிக்கப்படுவது நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் தான். தினக் கூலி, மாத வருவாய் பெறும் மக்கள், தங்களுடைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் கணக்கு போட்டு, செலவழித்து வருகிறார்கள். ஆனால், திடீரென அதிகரிக்கும் விலைவாசி உயர்வு அவர்களின் கண்களை பிதுங்க வைத்து விடுகிறது. இதனால் வங்கி உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் அவர்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். இதனால், கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது நடுத்தர மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுகிறது. இதனால் நடுத்தர வருவாய் பிரிவு பல்வேறு சுகாதார சீர்கேடுகளை சந்திக்கும் கட்டாய நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள், வீட்டின் பொருளாதாரத்தை மட்டும் பாதிக்காமல், அமைதியையும் சீர்குலைத்து விடுகிறது. இதனால் வீட்டுப் பெண்களின் நிம்மதி பறிபோய் விடுகிறது.
படித்துவிட்டு, திருமணத்திற்கு தயாராக இருக்கும் இளம் பெண்களின் திருமணங்கள், பொருளாதார சூழ்நிலை காரணங்களால், தடைப்படுகின்றன. இதனால், பெண்களின் வாழ்வில் சரியான நேரத்தில் ஒளி கிடைப்பது இல்லை. இது பல்வேறு மன ரீதியாக தொல்லைகளுக்கு வழி வகுக்கின்றன. ஒரு நல்ல அரசு, மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும். ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு அப்படிப்பட்ட ஒரு நல்ல நிலையை நாட்டு மக்களுக்கு தரவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால், பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது தான் தற்போதைய உண்மை நிலையாகும்.
===============================