"அமைதி மற்றும் கருணையின் மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச மாநாடு.....!
- ஒரு சிறப்பு ரிப்போர்ட் -
இஸ்லாமிய மார்க்கம் குறித்து மேற்கத்திய நாடுகளில் தவறான பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தாலும், இஸ்லாமிய மார்க்கம் குறித்தும், அது வழங்கும் அற்புதமான வாழ்க்கை நெறிமுறைகள் குறித்தும் அறிந்துகொள்வதில் உலக மக்களிடையே தொடர்ந்து ஆவல் அதிகரித்து வருகிறது. இதனால், தொடர் விஷமப் பிரச்சாரங்களையும் ஒதுக்கிவிட்டு, இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இத்தயை சூழ்நிலையில், இஸ்லாமிய மார்க்கம் குறித்து உலகின் பல்வேறு நாடுகளில் சர்வதேச அளவில் மாநாடு மற்றும் கருத்தரங்கங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் சார்பில் லண்டனில் 'உலகளாவிய அமைதி மற்றும் ஒற்றுமை விழா 2024' என்ற தலைப்பில் ஒரு அற்புதமான திருவிழா நடத்தப்பட்டது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், சமூக அறிவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இங்கிலாந்தில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலும் இஸ்லாமிய போதனைகளை கொண்டு சேர்க்கும் பணிகளில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்மூலம், இஸ்லாமிய மார்க்கம் எப்படிப்பட்ட மார்க்கம் என்பது குறித்து மக்கள் தெளிவுபெற்று வருகிறார்கள்.
உஸ்பெகிஸ்தான் சர்வதேச மாநாடு:
இப்படிப்பட்ட சூழ்நிலையில், உஸ்பெகிஸ்தான் குடியரசின் மத விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் கடந்த அக்டோபர் மாதத்தில் தாஷ்கண்டில் 'அமைதி மற்றும் கருணையின் மார்க்கம் இஸ்லாம்' என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. தாஷ்கண்ட் மற்றும் கிவாவில் உஸ்பெகிஸ்தான் குடியரசின் மத விவகாரக் குழுவால் நடத்தப்பட்ட இந்த சர்வதேச மாநாட்டிற்கு, இஸ்லாமிய மையத்தின் ஆலோசகர் டாக்டர் ஷோசிம் மினோவரோவ் தலைமையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உஸ்பெகிஸ்தானில் நாகரிகம், மற்றும் பொது மற்றும் மத நிறுவனங்களுடனான ஒத்துழைப்புக்கான உஸ்பெகிஸ்தான் அதிபரின் ஆலோசகர் முசாஃபர் கமிலோவின் வரவேற்புடன் மாநாடு தொடங்கியது. உஸ்பெகிஸ்தான் குடியரசின் அறிவியல் அகாடமியின் துணைத் தலைவர் பேராசிரியர் பஹ்ரோம் அப்துஹலிமோவ்வால் நடத்தப்பட்ட முழுமையான அமர்வில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இஸ்லாமிய வரலாறு, கலை மற்றும் கலாச்சாரத்திற்கான ஆராய்ச்சி மையத்தின் (IRCICA) பொது இயக்குநர் பேராசிரியர் மஹ்மூத் எரோல் கிலிக் அற்புதமான உரையை நிகழ்த்தினார். அப்போது, இஸ்லாமிய வரலாறு, கலை மற்றும் கலாச்சாரம் குறித்து அவர் ஆற்றிய உரையில் ஏராளமான அம்சங்கள் இடம்பெற்று இருந்தன.
மாநாட்டின் முக்கிய அம்சங்கள்:
மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட அமர்வுகள் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. குறிப்பாக "இஸ்லாமிய விழுமியங்களைப் பாதுகாப்பதில் ஹனாஃபி-மாதுரிடி போதனைகளின் சாராம்சம்" என்ற தலைப்பிலும் "உலகமயமாக்கலின் சூழலில் இஸ்லாம்: மிதமான மற்றும் சகிப்புத்தன்மை"; "நவீன சமுதாயத்தில் கருத்தியல் அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கான காரணிகள் மற்றும் நடைமுறை தீர்வுகள்" என்ற தலைப்புகளிலும் நடத்தப்பட்ட அமர்வுகள் மூலம் இஸ்லாமிய மார்க்கம் வழங்கும் வாழ்க்கை நெறிமுறைகள் குறித்தும் தற்போது சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் என்ன? என்பது குறித்து அறிஞர் பெருமக்கள் தங்களது வாதங்களையும் கருத்துக்களையும் எடுத்து வைத்தார்கள்.
இந்த சர்வதேச மாநாட்டில் சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், முஃப்திகள் மற்றும் முக்கிய அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சமகால உலகமயமாக்கலுக்கு முகங்கொடுக்கும் இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பது மற்றும் சகிப்புத்தன்மையின் உணர்வை வளர்ப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு அமைந்து இருந்தது. உலகளாவிய அறிவு மற்றும் ஆன்மீக விழுமியங்களின் முன்னேற்றத்தில் அல்-குவாரிஸ்மி மற்றும் இமாம் புகாரி போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்புகளையும் மாநாட்டில் பங்கேற்ற அறிஞர் பெருமக்கள் எடுத்துரைத்தனர்.
மூன்று முக்கிய அம்சங்கள்:
இந்த மாநாட்டில் மூன்று முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட குழு விவாதங்கள் நடைபெற்றன. ஹனாஃபி மற்றும் மாதுரிடி மரபுகளைப் பாதுகாத்தல், மதத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையிலான சமநிலைக்கான தேடல் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நடைமுறை நடவடிக்கைகள் என்ற தலைப்புகளில் நடைபெற்ற குழு விவாதங்களில் பங்கேற்ற அறிஞர்கள் அற்புதமான முறையில் இஸ்லாமிய மார்க்கத்தில் குவிந்து கிடக்கும் தீர்வுகள் குறித்து எடுத்துரைத்தார்கள்.
மேலும், அமைதி மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதில் தீவிர ஒத்துழைப்பிற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் மாநாட்டில் பங்கேற்ற அறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அமைதி மற்றும் நல்லெண்ணத்தின் மதமாக இஸ்லாத்தின் அடிப்படை மதிப்புகளை வலுப்படுத்தும் அதே வேளையில் நவீன உலகில் உள்ள அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கூட்டு முயற்சியை இந்த மாநாடு அடிக்கோடிட்டுக் காட்டியது. "இஸ்லாம் ஒரு அமைதி மற்றும் கருணையின் மார்க்கம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாடு, ஒரு நிறைவான மாநாடு என்றும், இஸ்லாமிய புரிதல்களை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் செய்யப்பட்ட ஒரு நல்ல முயற்சி என்றும் மாநாட்டில் பங்கேற்ற 22 நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பெருமையுடன் கூறி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment