Thursday, November 21, 2024

உயர் இரத்த அழுத்தம்.....!

உடல்நலத்தில் கவனம் தேவை:

"உயர் இரத்த அழுத்தம் கடுமையான பக்கவாதத்தை ஏற்படுத்துவம்"

ஆய்வில் அதிர்ச்சி தகவல்....!

உலகம் முழுவதும் தற்போது வயது வித்தியாசம் பார்க்காமல், இரத்த அழுத்தம், நீரிழவு நோய் ஆகியவை அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அண்மையில் கூட, பள்ளிக்கூடத்திற்கு வந்த மாணவி ஒருவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தித்தாள்களில், செய்திகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. 

இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணம் என்ன? என கேள்வி எழுப்பினால், தங்களுடைய உடல்நலத்தில் இளைஞர்கள் போதிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பது பதிலாக கிடைக்கிறது. சரியான தூக்கம், சரியான உணவுப் பழக்கவழக்கங்கள், சரியான நேர மேலாண்மை, சரியான பணி செய்யும் போக்கு ஆகியவை இளைஞர்கள் மத்தியில் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. தங்களுடைய உடல்நலத்தில் அலட்சியமாக இருந்தால், பல விபரீதமான விளைவுகளை இளைஞர்கள் சந்திக்க நேரிடும் என சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.  

இரத்த அழுத்தமும், பக்கவாதமும்:

உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சீரற்ற இதயத்துடிப்பு அல்லது புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால், கடுமையான பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விரிவாகவும் ஒருங்கிணைந்தும் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள் நரம்பியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஆய்வு, நீரிழிவு நோய், உடல் செயலற்ற தன்மை, மன அழுத்தம் மற்றும் மது அருந்துதல் போன்ற பிற ஆபத்து காரணிகளைக் கொண்டவர்களிடம் எடுக்கப்பட்டது. 

இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து வரும் அவர்களுக்கு, நரம்பியல் நிலையில் பாதிக்கப்பட்டால், கடுமையான அறிகுறிகளின் ஆபத்து ஏற்பட்டு இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது,. இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு மூளையின் ஒரு பகுதிக்கு இரத்த சப்ளை துண்டிக்கப்படும் போது, ​​மூளைக்கு இரத்த விநியோகத்தில் அடைப்பு (இஸ்கிமிக் ஸ்ட்ரோக்) அல்லது மூளையில் உள்ள வெடிப்பு பாத்திரத்தில் இருந்து இரத்தம் கசிவு (இரத்தப்போக்கு பக்கவாதம்) காரணமாக பக்கவாதம் ஏற்படுகிறது. இது விழுங்குவதில் சிரமம், பக்கவாதம், நினைவாற்றல் இழப்பு, குழப்பம் மற்றும் பார்வை இழப்பு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 

கட்டுப்பாட்டின் அவசியம்:

மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்ட நரம்பியல் ஆய்வு மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகள் பக்கவாதத்தைத் தடுப்பதில் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் விகிதங்கள் இளைய வயதில் வேகமாக அதிகரித்து வருகின்றன.

உலக பக்கவாதம் அமைப்பின் கூற்றுப்படி, தொடர்ந்து அதிக அல்லது உயர்ந்த இரத்த அழுத்தம் இரத்த ஓட்ட அமைப்பை - இதயம், தமனிகள் மற்றும் இரத்த நாளங்கள் - உடல் முழுவதும் இரத்தத்தை நகர்த்துவதில் கடினமாக உழைக்கச் செய்கிறது. "இந்த கூடுதல் வேலை உங்கள் மூளையில் உள்ள இரத்த நாளங்கள் உட்பட உங்கள் இரத்த நாளங்களை காலப்போக்கில் கடினமாக்கும் மற்றும் குறுகலாக்கும் சேதத்தை ஏற்படுத்துகிறது. பெருந்தமனி தடிப்பு எனப்படும் இந்த செயல்முறை, உங்கள் மூளையில் உள்ள இரத்த நாளங்களில் அடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. மூளையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது அல்லது கட்டுப்படுத்தப்பட்டது. அது நிரந்தர மூளை சேதத்திற்கு வழிவகுக்கும். அல்லது பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியானது மூளையில் உள்ள இரத்த நாளங்கள் வழியாக இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் வெடிப்பு மற்றும் இரத்தப்போக்கு, இது ஒரு ரத்தக்கசிவு பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது. இது மூளை அல்லது மரணத்திற்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். 

மருத்துவர்கள் எச்சரிக்கை:

டெல்லியைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் காமேஷ்வர் பிரசாத் இப்படி எச்சரிக்கை செய்துள்ளார். அதாவது " உயர் இரத்த அழுத்தம் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை நீரிழிவு போன்ற பிற காரணிகளுடன் ஒப்பிடும்போது கடுமையான பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் அவை சிறிய தமனிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நீரிழிவு நோய்க்கு மாறாக பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தமனிகளை பாதிக்கின்றன. அனைத்து பெரியவர்களும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதிற்குப் பிறகு ஒரு வருடத்திற்கு ஒரு முறையும் கடுமையான பக்கவாதத்தைத் தவிர்ப்பதற்கு இரத்த அழுத்தத்தைப் (BP) பரிசோதிக்க வேண்டும் என்பது பொதுமக்களுக்கான செய்தி" என்று மருத்துவர் காமேஷ்வர் பிரசாத் அறிவுறுத்துகிறார். 

தில்லியில் தங்கள் உலகளாவிய ஆய்வின் ஒரு பகுதியாக, பக்கவாதம் மற்றும் டிமென்ஷியாவின் பின்னணியில் உள்ள வாழ்க்கை முறை, மரபணு மாற்றங்கள் மற்றும் பிற காரணிகளை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பை மருத்துவர் காமேஷ்வர் பிரச்த் மேற்கொண்டார். அதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏறக்குறைய 70 சதவீதம் பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. பதிலளித்தவர்களில் 20 சதவீதம் பேரில் புகைபிடித்தல் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அசாதாரணமானது ஆனால் வயது அதிகரிக்கும் போது அதன் அதிர்வெண் அதிகரிக்கும். இரத்த உறைவைக் கரைக்க மருந்துகளை சரியான நேரத்தில் வழங்குவதன் மூலம் பல நோயாளிகளைக் காப்பாற்ற முடியும். சில நோயாளிகள் இரத்த உறைதலை அகற்ற குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய அறுவை சிகிச்சை மூலம் பயனடையலாம் என்பது டாக்டர் பிரசாத்தின் ஆலோசனையாக உள்ளது. 

வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும்:

வாழ்க்கையின்  ஒவ்வொரு நொடியையும் நாம் அனுபவித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம், நீரழிவு உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்தாலும், ஏக இறைவன் நமக்கு தந்துள்ள வாழ்க்கையை சரியான திசையை நோக்கிச் செல்ல முயற்சி செய்ய வேண்டும். நல்ல சிந்தனைகள், நல்ல பழக்க வழக்கங்கள், பிறர் நலனின் அக்கறை, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அம்சங்கள் ஆகிய அனைத்தையும் நாம் வாழ்க்கையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். 

நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மன ரீதியாக நாம் பாதிக்கப்பட்டால், அது நமது உடலில் எதிரொலிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. மருத்துவர்களின் ஆலோசனைக் கேட்டுக் கொண்டு, சரியான முறையில் உடல் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். சரியான திட்டமிடல், சரியான வாழ்க்கை நெறிமுறை, சரியான உணவு, சரியான உடற்பயிற்சி என இனை அனைத்தும் இருந்தால், இரத்த இழுத்தம், நீரழிவு போன்றவற்றால் ஏற்படும் கடுமையான பக்கவாதத்தை நிச்சயம் தடுத்து நிறுத்த முடியும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: