"பாக்தாத்தில் நடைபெற்ற திருக்குர்ஆனின் கையெழுத்து பிரதிகள் கண்காட்சி" - பார்வையாளர்கள் கண்டு வியப்பு -
ஏக இறைவனின் திருவாக்கான திருர்குர்ஆன் ஒரு பாதுகாக்கப்பட்ட பொக்கிஷம் என்பதை இஸ்லாமியர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தையும், ஒவ்வொரு எழுத்தையும் அழகிய முறையில் கையெழுத்து முறையில் எழுதுவதை ஒரு பாக்கியமாக உலகில் வாழும் பல இஸ்லாமிய எழுத்துக் கலைஞர்கள் கருதி வருகிறார்கள். உள்ளதை கவரும் வகையில் இந்த எழுத்துவடிவங்கள் இருப்பதால், அவற்றை பார்க்கும்போது, மனதில் அமைதி உருவாகிறது. திருக்குர்ஆனின் உண்மையாக நோக்கத்தை அறிந்துகொள்ள பெரும் ஆவல் ஏற்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் உட்பட உலகின் பல நாடுகளில் கையெழுத்து பிரதிகள் கொண்ட திருக்குர்ஆன் பிரதிகள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய பெண்கள் உட்பட பலர், திருக்குர்ஆன் முழுவதையும், தங்கள் கையால் அழகிய முறையில் எழுவதை பாக்கியமாக கருதி, அதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். திருக்குர்ஆனின் ஒவ்வொரு எழுத்தையும் அழகிய முறையில் கைகளால் எழுதும்போது, உள்ளத்தில் இனம்புரியாத ஒருவித மகிழ்ச்சி, ஆனந்தம் ஏற்படுகீறது. எனவே, அரபி எழுத்துக்கலையில் வல்லுநர்களாக உள்ள பலர், திருக்குர்ஆனை, தங்களை கைகளால் அழகிய முறையில் எழுதி வருகிறார்கள். இப்படி, கைகளால் எழுதப்படும் கையெழுத்து பிரதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், உலகின் பல நாடுகளில் அவ்வப்போது, திருக்குர்ஆனின் கையெழுத்து பிரதிகள் கொண்ட கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.
பாக்தாத்தில் நடைபெற்ற கண்காட்சி:
அந்த வகையில், புனித குர்ஆனின் எழுத்துக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கண்காட்சி ஈராக் தலைவர் பாக்தாத்தில் அக்டோபர் மாதத்தில் நடைபெற்றது. ஈராக் கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், ஒரு பெண் கலைஞர் உட்பட சிறந்த ஈராக்கிய கையெழுத்து கலைஞர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு கையெழுத்து கலைஞர்களும், குர்ஆனின் ஒரு பகுதியை அழகிய வடிவத்தில் கைகளால் எழுதி தங்களது எழுத்துத் திறமையை வெளிப்படுத்தினர்.
ஈராக் கலாச்சார அமைச்சகம் மற்றும் இஸ்லாமிய கலைகளுக்கான இபின் அல்-பவ்வாப் அறக்கட்டளையின் ஆதரவுடன் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. இத்தகைய கண்காட்சியின் இது 15வது பதிப்பு என நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கண்காட்சியின் பெருமையை வலியுறுத்திய ஈராக் பண்பாட்டு துணை அமைச்சர் ஃபாதில் அல்-பத்ரானி, அனுபவமுள்ள கையெழுத்து கலைஞர்களின் பங்கேற்பு மற்றும் இளைய திறமையாளர்களின் கடுமையான தேர்வு ஆகியவற்றை எடுத்துக்காட்டினார். பங்கேற்பாளர்களில் ஒருவரான அலி அல்-ஜுபூரி, பாரம்பரிய கருவிகளைப் பின்பற்றும் உயர்தர ஜப்பானிய மை மற்றும் உலோகப் பேனாக்களைப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டு, தனது பங்களிப்பில் பெருமிதம் தெரிவித்தார்.
பெண் எழுத்தாளரின் சாதனை:
ஒரே பெண் எழுத்தாளரான மேசுன் ஹாசன், தனது கடுமையான முயற்சியாலும் ஆர்வத்தாலும் குர்ஆனை இரண்டு மாதங்களில் அழகிய முறையில் எழுதி முடித்தார். மேலும் அத்தகைய புனித நூலில் பணியாற்றுவதற்கான ஆரம்ப சவாலை அவர் விவரித்தார். இந்த கண்காட்சி ஈராக்கின் குர்ஆன் எழுத்துக்களின் வளமான பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் அமைந்து இருந்தது. அத்துடன், இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு நாட்டின் கலை பங்களிப்புகளை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கண்காட்சியை கண்டு வியப்பு அடைந்த பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
எழுத்து கலைஞர்கள் கவுரவிப்பு:
கண்காட்சியில் கலந்துகொண்டு, அழகிய கையெழுத்துகள் மூலம், திருக்குர்ஆனை எழுதி, அசத்திய கையெழுத்துக் கலைஞர்களை ஈராக் கலாச்சார அமைச்சகம் கவுரவித்து பெருமை அடைந்தது. இஸ்லாமிய கலைகளில் ஒன்றாக கையெழுத்துக் கலை இருந்து வருகிறது. அந்த கலைக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கம் வகையில், ஈராக் கலாச்சார அமைச்சம் இருந்து வருகிறது. குறிப்பாக, திருக்குர்ஆனை அழகிய முறையில் கையெழுத்து வடிவத்தில் கொண்டு வரும் கலைஞர்கள், வல்லுநர்கள் ஆகியோருக்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில் கலாச்சார அமைச்சம் செயல்பட்டு வருகிறது. இந்த கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் திருக்குர்ஆனின் கையெழுத்து பிரதிகள் கொண்டு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில், கையெழுத்து கலைஞர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு, பெருமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது சிறப்பு அம்சமாக இருந்து வருகிறது. பாக்தாத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற இந்த அழகிய கண்காட்சியை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுவியப்பு அடைந்து, கையெழுத்து கலை வல்லுநர்களை பாராட்டி மகிழ்ந்தனர்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment