Saturday, November 16, 2024

முஸ்லிம் பெண் மருத்துவர்...!

ஜான்சி மருத்துவமனையில் முஸ்லிம் பெண் மருத்துவரின் மனிதநேய சேவை....!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள புகழ்பெற்ற மஹாராணி லஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த அதிர்ச்சியான, மிகவும் சோகமான சம்பவம் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை (15.11.2024) அன்று மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு (வார்டு) பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, சிகிச்சை பெற வந்த குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோரை பதற்றம் அடையச் செய்தது. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஏராளமான குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

முஸ்லிம் இளைஞர்களின் சேவை:

ஜான்சி மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தின் போது, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் தங்கள் குழந்தைகளுக்கு சிகிச்சைப் பெற சில முஸ்லிம்களும் வந்து இருந்தார்கள். அவர்களில் சில முஸ்லிம் இளைஞர்கள் தீ விபத்து ஏற்பட்டதும், நிலைமையின் கோரத்தை நன்கு உணர்ந்து, உடனடியாக செயலில் இறங்கினார்கள். வார்டில் இருந்த ஜன்னல்   கண்ணாடிகளை உடைத்து, தீயில் சிக்கிய குழந்தைகள் மற்றும் பொதுமக்களை உயிருடன் மீட்க தேவையான அனைத்து முயற்சிகளும் செய்தார்கள். இதன்மூலம் பல குழந்தைகள் இலேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். 

தங்களது உயிரைப் பணயம் வைத்து முஸ்லிம் இளைஞர்கள் செய்த இந்த அற்புதமான மனிதநேய செயல் ஜான்சி மக்கள் மறக்கவே மாட்டார்கள். முஸ்லிம் இளைஞர்களின் இத்தகைய உதவிக்கரம் நீட்டிய சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி, முஸ்லிம்கள் எப்போதும் மனிதநேயம் கொண்டவர்கள், ஆபத்து  காலங்களில் ஓடோடி வந்து உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என சகோதரச் சமுதாய மக்கள் மீண்டும் நினைக்கும் வகையில் அவர்களது மனங்களில் நல்ல எண்ணங்கள் தோன்றியுள்ளன.

முஸ்லிம் பெண் மருத்துவரின் சேவை:

இது ஒருபுறம் இருக்க, ஜான்சி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் முஸ்லிம் பெண் மருத்துவர் ஒருவர் (பெயர் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை) ஹிஜாப் அணிந்து கொண்டு காயம் அடைந்த குழந்தைகளுக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவம் என்பது மதம், மொழி, சாதி, ஏழை, பணக்காரன் என பார்த்து செய்யும் சேவை இல்லை. இதை நன்கு உணர்ந்து கொண்ட அந்த முஸ்லிம் பெண் மருத்துவர், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் உயிரை காப்பாற்ற போராடிக் கொண்டு இரவு பகல் பாராமல், மருத்துவச் சேவை செய்துக் கொண்டு இருக்கிறார்.

அந்த முஸ்லிம் பெண் மருத்துவர், காயம் அடைந்த குழந்தைகளுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கும் காட்சிகள் ஒருசில இந்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.  அத்துடன் முஸ்லிம் பெண் மருத்துவரின் சேவை தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவின. அதைப் பார்த்த மக்கள், முஸ்லிம் பெண் மருத்துவரின் சேவையை பெரிதும் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், உத்தரப் பிரதேசம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்த போது, தனது சொந்த செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்த பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் கஃபில் கான் நமது நினைவுக்கு வருகிறார். இந்த மனிதநேய செயலுக்காக உத்தரப் பிரதேச பா.ஜ.க. அரசால் அவர் எப்படி பழி வாங்கப்பட்டார் என்பதை நாடு நன்கு அறியும். அத்தகைய நெருக்கடியான நேரங்களில் மருத்துவர் கஃபில் கானுக்கு ஆதரவு கரம் நீட்டியது தமிழ்நாடு என்பது மறக்க முடியாத உண்மையாகும்.

மருத்துவர் கஃபில் கானுக்கு நிகழ்ந்த சோகம் நன்கு அறிந்து இருந்தும், ஜான்சி மருத்துவமனை முஸ்லிம் பெண் மருத்துவர் எந்தவித தயக்கமும், அச்சமும் இல்லாமல் குழந்தைகளின் உயிர்களை மனிதநேயச் சேவை மூலம் காப்பாற்றியுள்ளார்.

தவறான புரிதல் கைவிட வேண்டும்:

இந்திய முஸ்லிம்கள் குறித்து வட மாநில மக்கள் மத்தியில் தவறான கருத்து மற்றும் புரிதல் இருந்து வருகிறது. இந்திய முஸ்லிம்கள் தங்கள் தாய் நாட்டை நேசிப்பவர்கள். பேரிடர் காலங்களில் நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள். மதம், மொழி பார்க்காமல் சேவை செய்யும் குணம் கொண்டவர்கள். அதை அவ்வப்போது முஸ்லிம்கள் தங்களுடைய மனிதநேய சேவை மூலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். எனவே தான், பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் மக்கள் மத்தியில் வெறுப்பு பிரச்சாரம் செய்து தேர்தல் காலங்களில் அறுவடை செய்து வருகிறது. இதை வட மாநில மக்கள் புரிந்துகொண்டு, முஸ்லிம்கள் குறித்து தங்களிடையே உள்ள தவறான கருத்து மற்றும் புரிதலை உடனே கைவிட வேண்டும். நாடு உண்மையான முன்னேற்றம் அடைய வேண்டுமானால், வெறுப்பு வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். அனைவரின் உள்ளங்களிலும் அன்பு குடியேற வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: