ஒற்றுமையை சீர்குலைத்து, ஜனநாயகத்திற்கு வேட்டு வைக்கும் பா.ஜ.க.....!
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 11வது ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்கள் இன்னும் நிற்கவில்லை. சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் இந்து-முஸ்லிம்கள் இடையே பிளவை உருவாக்கி, தொடர்ந்து அரசியல் இலாபம் பெற்றுவரும் முயற்சிகளில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருந்து வந்தாலும் அண்மையில் நடைபெற்ற நான்கு மாநில தேர்தல்கள் மிகச் சிறந்த உதாரணங்களாக இருக்கின்றன.
நான்கு மாநில தேர்தலில் பா.ஜ.க.வின் முகம்:
அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் பா..ஜ.க. அங்குள்ள மக்கள் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக, அரியானாவில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை கைப்பற்றும் என அரசியல் நிபுணர்கள் மற்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் முடிவுகள் வேறுமாதிரியாக அமைந்தன. அரியானா மக்கள் மட்டுமல்ல, ஊடகவியலாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் அரியானாவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இதேபோன்று, மகாராஷ்டிராவில், பா.ஜ.க. தலைமையிலான அணி, அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை உடைத்துவிட்டு, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அதுவும் முன்எப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை அந்த அணி கைப்பற்றியது. தேர்தலில் மிகப்பெரிய அளவுக்கு குளறுப்படிகள் நடைபெற்று இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றும், அதில் ஆளும் பா.ஜ.க. தனது அதிகாரத்தை வைத்துக் கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மகாராஷ்டிராவில் கணக்கில் வராமல், 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருப்பதாக புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்சி, அரசியல் நோக்கர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஒரு கிராமத்தில் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே மக்கள் வாக்குகளை அளித்துவரும் நிலையில் இந்த முறை கூட அப்படி வாக்களித்தார்கள். ஆனால், அந்த கிராமத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை என வாக்கு எண்ணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டு, அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் கூட ஈடுபட்டனர். இப்படி, பல தொகுதிகளில் முறைகேடுகள் நடைபெற்று மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைமையிலான அணி ஆட்சியை கைப்பற்றி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் எதுவும் கூறிவில்லை. விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியாது என்று மட்டும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது.
கவனத்தை திசை திருப்பும் செயல்:
இப்படி, நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பல சம்பங்களை அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலம் சம்பாலில் உள்ள மஸ்ஜித் பிரச்சினையை தற்போது கையில் எடுத்து அங்கு ஆய்வு என்ற பெயரில் இந்து-முஸ்லிம் மக்களிடையே இருந்து வரும் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இங்குள்ள பழமையான மஸ்ஜித் குறித்து பிரச்சினையை எழுப்பிய சிலர், நவம்பர் 19 ஆம் தேதி முதல் ஜமா மசூதியில் ஹரிஹர் கோவில் இருப்பதாக ஒரு மனுவைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் முதலில் ஆய்வு செய்யப்பட்டபோது சம்பாலில் பதற்றம் நிலவியது. மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொள்ள சென்றபோது, முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் முஸ்லிம்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதனால் சம்பால் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பாபரி மஸ்ஜித் விவகாரத்திற்குப் பிறகு, வழிப்பாட்டுத் தலங்கள் சட்டம் 1991ன் படி எந்த மஸ்ஜித் பகுதிகளிலும் ஆய்வு நடத்தக் கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்து-முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் இலாபம் பெற பா.ஜ.க. தொடர் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அதற்கு உத்தரப் பிரதேச பா.ஜ.க. அரசு நல்ல தீனியை போட்டு, சம்பால் மஸ்ஜித் விவகாரத்தை கையில் எடுத்து, நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல்களில் நடத்தப்பட்ட முறைக்கேடுகளை மூடி மறைக்க இதுபோன்ற செயல்கள் தற்போது அரரங்கேற்றப்பட்டு வருகின்றன.
ராகுல் காந்தி கண்டனம்:
சம்பால் மஸ்ஜித் விவகாரம் குறித்து கருத்து கூறியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "உத்தரப்பிரதேசத்தின் சம்பலில் சமீபத்தில் ஏற்பட்ட தகராறில் மாநில அரசின் பக்கச்சார்பான மற்றும் அவசரமான அணுகுமுறை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு." நிர்வாகம், அனைத்து தரப்பினரின் பேச்சையும் கேட்காமல், உணர்ச்சியற்ற நடவடிக்கையை மேற்கொண்டு, சூழலை மேலும் சீர்குலைத்து, மக்கள் உயிரிழக்க வழிவகுத்தது இதற்கு பா.ஜ.க அரசுதான் நேரடிப் பொறுப்பு" என்று சாடியுள்ளார்.
மேலும் "இந்து-முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே பிளவு மற்றும் பாகுபாட்டை உருவாக்க பாஜகவின் அதிகாரத்தைப் பயன்படுத்துவது மாநில அல்லது நாட்டின் நலனுக்காக அல்ல. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் விரைவில் தலையிட்டு நீதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியா ஒற்றுமை மற்றும் அரசியலமைப்பின் பாதையில் முன்னேறுவதை உறுதி செய்ய வேண்டும், வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு மூலம் எதையும் சாதிக்க முடியாது. நாட்டின் அமைதி சீர்குலைந்துவிடும்" என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம் லீக் குழுவிற்கு அனுமதி மறுப்பு:
இதுஒருபுறம் இருக்க, சம்பால் பகுதியில் ஏற்பட்ட வன்முறை குறித்தும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இ.டி.முஹம்மது பஷீர் தலைமையில் 5 முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் கடந்த 27ஆம் தேதி சம்பால் சென்றனர். ஆனால், அவர்களை உத்தரப் பிரதேச யோகி அரசு மக்களை சந்திக்க அனுமதி வழங்கவில்லை. இதேபோன்று, சம்பால் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கூட பேச வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜமா மஸ்ஜித் சர்வேயை எதிர்த்த போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டதால் மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் வாகனங்களை எரித்தனர். போலீசார் மீது கற்களை வீசினர், அதேநேரத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் கும்பலைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி நடத்தினர். அப்பாவிகளைக் கொன்றதற்கு ஆதித்யநாத் நிர்வாகமே முழுப்பொறுப்பு என்றும், சம்பாலில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு தீ வைத்ததற்கு பாஜக-ஆர்எஸ்எஸ் மட்டுமே காரணம் என்றும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. எதிர்ப்பாளர்கள் மீது நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தும் வீடியோக்கள் ஆதித்யநாத் மற்றும் பாஜக-ஆர்எஸ்எஸ் ஆகியோரின் "நன்கு திட்டமிடப்பட்ட சதி"யின் பயங்கரமான விளைவை சித்தரிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
அதிகார பசியால் முஸ்லிம்கள் மீது வெறுப்பு:
இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் எப்போதும் நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள். அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்துச் செல்லும் மனப்பான்மை கொண்டவர்கள், நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து சேவை ஆற்றும் நல்ல குணம் கொண்ட முஸ்லிம்களால், இந்துக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என ஒரு பொய்யான வதந்தியை தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பரப்பிக் கொண்டே இருக்கின்றன. இதன்மூலம் அப்பாவி மக்களை குழப்பி, மக்களிடையே அமைதியை சீர்குலைத்துக் கொண்டே வருகின்றன.
பா.ஜ.க.வின் அதிகார பசிக்கு முஸ்லிம் மீதான வெறுப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தல்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராகவே பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ்.க. தலைவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி பிரச்சாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தட்டி கேட்க மறுத்துவிடுகிறது. சகோதரச் சமுதாய மக்களை தூண்டிவிட்டு, அதன்மூலம் வெற்றியை பெறலாம் என்ற நோக்கதுடன் பா.ஜ.க. செயல்படுகிறது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைக்கேடுகளை செய்து, தொடர்ந்து வெற்றியை பா.ஜ.க. பெற்று வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, மேலை நாடுகளில் உள்ளது போன்று மீண்டும் வாக்குச்சீட்டு முறைப்படி, தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.இதற்கு தீர்வு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகத்ன் உள்ளது.
நாட்டை நேசிக்கும் முஸ்லிம்கள் மீது வெறுப்பு என்ற ஆயுதத்தை வைத்துக் கொண்டு, பா.ஜ.க. மற்றும் பாசிச அமைப்புகள் நடத்தும் வேட்டைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும். அமைதியை சீர்குலைத்து ஜனநாயகத்திற்கு வேட்டு வைக்கும் காரியங்கள் நின்றால் மட்டுமே, இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்து நிற்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இது உண்மை தான். ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால், நாட்டில் மக்கள் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அப்போது தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.
============================
No comments:
Post a Comment