சல்மான் கானும் டி.எஸ்.பி. சந்தோஷ் பட்டேலும்....!
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் வசிப்பவர் சல்மான் கான். சாதாரண முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சல்மான் கானிடம், இஸ்லாமிய மார்க்கம் சொல்லி தந்த ஈகை குணம் கொஞ்சம் அதிகமாகவே இருந்து வருகிறது. போபாலில் உள்ள முக்கிய வீதியில் சாலையோர கடை ஒன்றை நடத்தி வரும் இவர், காய்கறி, பழம் உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறார். வணிகத்தில் நேர்மையுடன் செயல்படும் சல்மான், ஏழை, எளிய மக்களிடம் காசு வாங்காமல் பொருட்களை கொடுத்து விடுவார். அவர்கள் விரும்பி கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சி அடைவார்.
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அவர்களிடம் பணத்தை வாங்காமல் காய்கறி, பழம் ஆகியவற்றை இலவசமாக கொடுத்து அவர்களின் இலட்சியப் பயணம் தொடர உதவுவார்.
இப்படி சல்மான் கான் உதவி செய்த பலரில் ஒருவர், தற்போது இந்தூரில் டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்துள்ளார்.
டி.எஸ்.பி. சந்தோஷ் பட்டேல்:
போபாலில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த இளைஞர் தான் சந்தோஷ் பட்டேல். அவரிடம் கைகளில் காசு இல்லை. ஆனால் உயர்ந்த லட்சியம் மட்டுமே பட்டேலிடம் இருந்தது. அப்போது தான் சல்மான் கானின் அறிமுகம் சந்தோஷ் பட்டேலுக்கு கிடைத்தது.
சல்மான் கானின் சாலையோர கடைக்கு வந்த இளைஞர் சந்தோஷ் பட்டேல், அவரிடம் காய்கறி, பழம் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்று, தன்னுடைய அறையில் சமைத்து சாப்பிடுவார். லட்சிய இளைஞர் சந்தோஷ் பட்டேலிடம் பணம் இல்லை என்பதை அறிந்து கொண்டு, அவருக்கு கொடுக்கும் பொருட்களுக்கு சல்மான் கான் காசு வாங்கியதே இல்லை. இப்படி நீண்ட நாட்கள் தொடர்ந்த போதும் சல்மான் கான், இளைஞர் சந்தோஷ் பட்டேலிடம் தாம் விற்பனை செய்த பொருட்களுக்கு பணம் கேட்டதே இல்லை.
காலம் விரைவாக ஓடியது. சந்தோஷ் பட்டேல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்தூரில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) நியமிக்கப்பட்டார்.
இன்ப அதிர்ச்சி:
இலட்சியத்தை அடைந்து உயர் பதவியில் அமர்ந்த டி.எஸ்.பி. சந்தோஷ் பட்டேலுக்கு, தன்னுடைய நெருக்கடியான நேரங்களில் உதவி செய்த சல்மான் கானை சந்திக்க வேண்டும் என மனதில் ஆவல் இருந்து கொண்டே இருந்தது. போபாலுக்கு சென்று சல்மான் கானை சந்திக்க முடிவு செய்த பட்டேல், 14 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் சல்மான் கானை சந்தித்தார். போபாலில் உள்ள அதே சாலையோர கடையில் வழக்கம் போல் வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சல்மான் கானை அழைத்து "என்னை அடையாளம் தெரிகிறதா? என்ற கேள்வியை முன் வைத்தது தான் தாமதம், சல்மான் கான், புன்னகையுடன் " நன்றாக அடையாளம் தெரிகிறது. பட்டேல் பாய் தானே நீங்கள் " என்று சொன்னது தான் தாமதம், டி.எஸ்.பி. சந்தோஷ் பட்டேல், சல்மான் கானை கட்டித் தழுவி தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தார்.
ஒரு காவல்துறை அதிகாரி, சாதாரண சாலையோர முஸ்லிம் வணிகரை கட்டித் தழுவி நலம் விசாரிப்பதை அங்கு கூடியிருந்த மக்கள் கண்டு வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர்.
அப்போது டி.எஸ்.பி. சந்தோஷ் பட்டேல் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் மனிதநேயம் கொண்டவை.
"போபாலில் நான் கஷ்டப்பட்ட போது எனக்கு உதவி செய்த சல்மான் கானை எப்படி என்னால் மறக்க முடியும்? என்னிடம் பணம் இல்லாத போதும் அதைப் பற்றி கவலைப்படாமல், எனக்கு உணவுப் பொருட்களை தந்த மனிதநேய புனிதர் சல்மான் கான், எப்போதும் என் மனதில் உயர்ந்த இடத்தில் இருந்து வருகிறார். வாழ்க்கையில் நல்ல மனிதர்களை நாம் காண்பது அரிதாகி போன இந்த காலத்தில் சல்மான் கான் எனக்கு செய்த உதவிகளை நான் எப்படி மறக்க முடியும்? அப்படி மறந்தால் நான் மனிதனே இல்லை" இப்படி டி.எஸ்.பி. சந்தோஷ் பட்டேல் கூறியதை கேட்ட மக்கள், அவரது பெருந்தன்மைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
சல்மான் கானை 14 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த டி.எஸ்.பி. சந்தோஷ் பட்டேல், அவருடைய தற்போதைய நிலை, பழைய இடத்திலேயே வணிகம் செய்கிறாரா, போன்ற விவரங்களை கேட்டு அறிந்து கொண்டு, அவரை அழைத்துக் கொண்டு அந்த சாலையோர கடைக்குச் சென்று, காய்கறி, பழம் ஆகியற்றை வாங்கி மகிழ்ச்சி அடைந்தார். அத்துடன், எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேட்க வேண்டும் என்று அன்பு கட்டளையிட்ட சந்தோஷ் பட்டேல், தன்னுடைய தனிப்பட்ட செல்பேசி எண்ணையும் சல்மான் கானிடம் கொடுத்தது மட்டுமன்றி, அவருடைய செல்பேசி எண்ணையும் கேட்டு வாங்கிக் கொண்டார். விடை பெறுவதற்கு முன்பு, மீண்டும் ஒருமுறை சல்மான் கானை, டி.எஸ்.பி. சந்தோஷ் பட்டேல் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினார்.
மக்கள் மத்தியில் வரவேற்பு:
இந்த அற்புதமான அன்பை வெளிப்படுத்தும் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு இந்து சகோதரர், தனக்கு உதவி செய்த முஸ்லிம் தோழரை 14 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து, நன்றி கூறி, அன்பை வெளிப்படுத்திய சம்பவம், பா.ஜ.க. போன்ற கட்சிகள் மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்தாலும், நாட்டில் சல்மான் கான், சந்தோஷ் பட்டேல் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை இந்துத்துவ அமைப்புகளின் எண்ணங்கள் நிச்சயம் நிறைவேறாது என உறுதியாக கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment