"சம்பல் ஷாஹி ஜும்ஆ மஸ்ஜித்தும், உண்மை நிலவரமும்"
உத்தரபிரதேசத்தின் சம்பலில் உள்ள ஷாஹி ஜும்ஆ மஸ்ஜித் ஒரு கோவிலின் இடத்தில் கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்புகள் பிரச்சினையை கிளப்பியதைத் தொடர்ந்து அங்கு இரண்டாவது முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த நவம்பர் 24ஆம் தேதி சம்பலில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சம்பல் ஷாஜி ஜும்ஆ மஸ்ஜித் குறித்தும், உண்மை நிலவரம் குறித்தும் 'தி இந்து ஆங்கில நாளிதழில் சம்ரிதி திவாரி என்பவர் விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கத்தை மணிச்சுடர் வாசகர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இன்றைய இதழில் (01.12.2024) தருகிறோம்.
சம்பல் துப்பாக்கிச் சூடு:
சம்பலில், ஷாஹி ஜும்ஆ மஸ்ஜித் ஒரு கோவிலின் இடத்தில் கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்புகள் பிரச்சினையை கிளப்பியதைத் தொடர்ந்து அங்கு இரண்டாவது முறையாக ஆய்வு நடத்திய பிறகு, கடந்த நவம்பர் 24ஆம் தேதி வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 31 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஷாஹி ஜும்ஆ மஸ்ஜித் அருகே பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வரலாற்று தகவல்கள்:
சம்பல் நகரின் மையத்தில் பாபரின் ஆட்சியின் போது கட்டப்பட்ட 16ஆம் நூற்றாண்டின் பிரம்மாண்டமான கட்டடமான வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் நான்கு மினாரட் கொண்ட ஷாஹி ஜும்ஆ மஸ்ஜித் உள்ளது. இப்படிப்பட்ட மஸ்ஜித் பகுதியில் பச்சைக் குவிமாடம் கொண்ட அமைப்பில் ஒன்றிணைந்த மூன்று பாதைகளில் வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை காலை (நவம்பர் 26, 2024). மக்கள் கூட்டம் அலைமோதியதாகக் கூறப்படும் மத்தியப் பாதையில், அனைத்து வீடுகளும் பூட்டப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்களில் இருந்த கம்பிகள் அறுந்துவிட்டன. மசூதி வன்முறைக்கு சாட்சியமளிக்கிறது. மஸ்ஜித்தில் புதிதாகக் குறிக்கப்பட்ட சேதங்கள் அதன் வர்ணத்தை காயப்படுத்துகின்றன, மேலும் இரும்பு கம்பிகள் மற்றும் உடைந்த கான்கிரீட் அதன் நுழைவு பகுதியில் சரிந்து கிடைக்கின்றன.
மஸ்ஜித் பகுதியிலும் அதன் அருகே உள்ள பகுதிகளிலும் இருக்கும் சில வீடுகளும் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நகராட்சியைச் சேர்ந்த வாகனம் ஒன்று அங்கு வந்து சேதம் அடைந்த பொருட்களை சேகரித்து அப்பகுதியை சுத்தம் செய்தது. அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்த குர்தா பைஜாமா அணிந்து நடுத்தர வயதான நபர், வீட்டிற்கு வெளியே வந்து, குப்பையை நகராட்சி வாகனத்திடம் கொடுத்துவிட்டு, மீண்டும் அவசரமாக வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டின் கதவை மூடி மறைந்துவிட்டார்.
அந்த பகுதியில் ஒருசில வீடுகளின் கட்டுமான பணியும் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியை போன்று இங்கு சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், சம்பலின் பல பகுதியில் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் மக்களிடம் இருக்கும் பயமும் அச்சமுமாகும். மஸ்ஜித்தின் கிழக்குப் பகுதியை ஒட்டியுள்ள கோட் பூர்வி என்ற பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு வணிகமும் நடைபெற்று வருகிறது. அங்கு வழக்கம் போல மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் காவி நிற கொடிகள் கட்டப்பட்டுள்ளன. சுவர்கள் கூட காவி நிறத்தில் உள்ளன. அத்துடன் ஹனுமான் சிவா மற்றும் கணேஷ் ஆகியோரின் படங்கள் ஒவியமாக வரையப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் கோட் கர்பி என்ற முக்கிய சந்தை பகுதியில் இருக்கும் கடைகள் திறக்கப்படாமல் மூடிக் கிடக்கின்றன. இந்த பகுதியில் வணிகம் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்பதை அங்குள்ள விளம்பர பலகைகள் மூலம் அறிய முடிகிறது. இந்த பகுதியில் நுழைய போலீசார் அனுமதி அளிப்பது இல்லை. அத்துடன் சம்பலைச் சேராதவர்கள் இங்கு வர அனுமதி இல்லை. அரசியல் கட்சித் தலைவர், சமூக ஆர்வலர்கள் என யாருக்கும் சம்பல் வர அனுமதி இல்லை. ஒவ்வொரு 100 மீட்டர் தொலைவுக்கும் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இணையதள சேவையையும் அரசு முடக்கியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் கூட இதுபோன்று இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. கிழக்கு உத்தரப் பிரதேச பகுதியில் நடந்த வன்முறையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒரு பிரச்சினை உருவாக்கம்:
சம்பலில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் மற்றும் வன்முறை, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு கற்கள் வீசி தாக்குதல் நடத்தியது ஆகியவை தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஆய்வு நடத்த சென்றவர்கள் தடுத்த நிறுத்தியவர்களை போலீசார் வெளியே தள்ளுவது உள்ளிட்ட காட்சிகள் அதில் உள்ளன. மஸ்ஜித் பகுதியில் இருக்கும் "வசு கானா" தண்ணீர் இல்லாமல் காய்ந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மஸ்ஜித் தொடர்பான போலியான, பொய்யான செய்தியை பரப்பும் நோக்கமாக உள்ளது.
ஆய்வு நடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, மக்கள் ஒன்றாக திரண்டார்கள். மஸ்ஜித்தின் தலைவர் ஜாபர் அலி மற்றும் கமிட்டி நிர்வாகிகள் ஆகியோர் அங்கு கூடினார்கள். போலீசாரும் திரண்டு இருந்தார்கள். அப்போது, மஸ்ஜித்தின் தலைவர் ஜாபர் அலி, மஸ்ஜித்திற்கு வெளியே வந்து மஸ்ஜித் மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை என்றும் மஸ்ஜித் சேதம் அடையவில்லை என்றும், அங்கு திரண்டு இருந்தவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட மக்கள் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள். இருந்தும் ஒருசிலர் அங்கிருந்து கலைந்து போகாமல் திரண்டு இருந்தார்கள். அவர்களுடன் போலீசாரும் கூடி இருந்தார்கள். அதன் பிறகு நடந்த வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர். 31 பேர் படுகாயம் அடைந்தனர். 2 ஆயிரத்து 500 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களின் 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சமாஜ்வாதி எம்.பி. ஜியால் உல் ரஹ்மான் பார்க், சட்டமன்ற உறுப்பினர் இக்பால் மசூத் ஆகியோர் இதில் அடங்குவார்கள்.
சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சமாஜ்வாதி எம்.பி. ஜியால் உல் ரஹ்மான் பார்க் பெங்களூரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதாக அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது. ஆனால், பொய்யான குற்றச்சாட்டின் பேரில் பார்க் மீது உத்தரப் பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேநேரத்தில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி மஸ்ஜித் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜியால் உல் ரஹ்மான் பார்க் சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாகவும், அதனை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பியதாகவும், அதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆய்வு நடந்த சமயத்தில் அங்கு வந்த போலீசார், திரண்டு இருந்த மக்கள் வன்முறையை தூண்டியதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சம்பவத்தின்போது நேரில் இருந்த சுஹைல் என்பவர் கூறியுள்ளார். கற்களை வீசியதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் போன்ற தற்போதும் நடைபெற்றுள்ளது. உத்தரப் பிரதேச அரசு போராட்டம் நடத்தியவர்கள் மீது பொய்யான புகாரின் பேரில் வழக்குகளை பதிவு செய்து, அவர்களிடம் இருந்து நஷ்ட ஈடு பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சம்பல் பகுதியில் வசிக்கும் அலி என்பவரின் செல்பேசியை பறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆய்வு தொடர்பாக அலி மற்றவர்களிடம் தகவல்களை தெரிவித்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தொடரும் பதற்றத்தால் அச்சம்:
சம்பலின் ஃபதிஹுல்லா சராய் பகுதியில் உள்ள தனது இனிப்பு கடையை திறக்க சென்று வணிகத்தில் ஈடுபட்ட நஹீம் என்ற இளைஞர் எண்ணெய் தீர்ந்துவிட்டால் அதை வாங்கச் சென்றபோது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இர்ஷாத் ஜஹான் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். எந்தவித வன்முறையில் ஈடுபடாத நஹீமை போலீசார் வேண்டும் என்றே சுட்டுக் கொன்றனர். எனினும் ஒரு வன்முறை கும்பல் போலீசார் மீது தாக்குதல் நடத்த தொடங்கியபோது, போலீசார் எதிர் நடவடிக்கையை எடுத்தாக காவல்துறை கண்காணிப்பாளர் குமார் சிங் விளக்கம் அளித்துள்ளார். வன்முறை மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்றும் அவர்கள் எதிர்வினையை அறியாமல் இருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்கள் கூட கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நஹீமின் மனைவி தற்போது தன்னுடைய சிறிய வீட்டில் இத்தா இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அத்துடன் 12 வயதுக்கும் குறைவான நான்கு குழந்தைகள் வைத்துக் கொண்டு எதிர்காலம் கேள்விக்குறியான நிலைக்கு நஹீமின் மனைவி ஆளாக்கப்பட்டுள்ளார். தனது குழந்தைகளை மருத்துவராகவும் பொறியளாளராகவும் காண விரும்பிய நஹீமின் கனவு தற்போதை சிதைந்துவிட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் தொடர்ந்து தங்களை துன்புறத்திய வருவதாக நஹீமின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். நஹீம் எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு:
சம்பல் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சம்பல் பகுதியில் வசிக்கும் மக்களை மிரட்டி, வெற்று தாள்களில் கையெழுத்து வாங்கி போலீசார் வரம்பு மீறி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வன்முறை மற்றும் கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபடாத பிலால் அன்சாரி உள்ளிட்ட இளைஞர்களும் பலியாகியுள்ளன. உத்தரப் பிரதேச அரசு முஸ்லிம்களுக்கு எதிராக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நியாயமா என்று பிலால் அன்சாரியின் சகோதரர் சல்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடரும் வன்முறை பதற்றம்:
கடந்த 1975ஆம் ஆண்டு திருமணம் முடித்து சவீதா ரஸ்தோகி என்ற பெண்மணி சம்பலுக்கு வந்தபோது, இதேபோன்ற வன்முறை வெடித்தது என்றும் அப்போது மஸ்ஜித் மவுலானா பலியானதாக அவர் நினைவு கூர்ந்துள்ளார். இந்த வன்முறை தொடர்ந்து ஒரு மாதம் வரை நீடித்து என்றும் அதில் இருந்து தப்பிக்க அருகில் இருந்த கோவில் தாம் தஞ்சம் அடைந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பகுதி 300 ஆண்டுகள் பழமையான பகுதியாகும். ஒருசில வணிக நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது நன்கு வளர்ச்சி அடைந்த பகுதியாக மாறியுள்ளது. மத ரீதியான பிரச்சினைகள் தொடர்வதால் தாம் ஏன் மீரட்டில் இருந்து சம்பலுக்கு வந்தேன் என்று கேள்வி தற்போது எழுந்து கொண்டு இருப்பதாகவும் ரஸ்தோஷி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1980 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் நடந்த கசப்பான சம்பங்களை தொடர்ந்து மக்கள் சம்பலில் இருந்து வெளியே பிற பகுதிகளுக்கு சென்றுவிட்டார்கள். இதனால் சந்தையின் சூழ்நிலையை மாறிவிட்டது. சிறிய கடைகள் மட்டுமே இங்கு இயங்கி வருகின்றன. இந்து மக்களுக்கு எராளமான கோவில்கள் இருக்கும் நிலையில், மஸ்ஜித் பகுதியில் கோவில் இருப்பதாக புகார் கூறி, அதனை ஏன் பிரச்சினையாக கிளப்ப வேண்டும் என்றும் ரஸ்தோஷி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது ஊடகத்தினர் இங்கு வந்து இருக்கிறார்கள். நாளை அவர்கள் சென்று விடுவார்கள். ஆனால், இந்து-முஸ்லிம்கள் எப்படி ஒருங்கிணைந்து வாழ முடியும் என்றும் அவர் வினா எழுப்பியுள்ளார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் யாரிடமும் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.
தொடரும் சர்ச்சைகள்:
நவம்பர் 19 அன்று மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் சிவில் நீதிபதி சம்பல் நீதிமன்றத்தில் ஹரி சங்கர் ஜெயின் மற்றும் பலர் ஒரு மனு தாக்கல் செய்தனர். சம்பலில் உள்ள 16 ஆம் நூற்றாண்டு ஜும்ஆ மஸ்ஜித் பழமையான ஹரி ஹர் இடத்தில் கட்டப்பட்டதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டினர். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஈத்கா மஸ்ஜித் மதுரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கமால்-மௌலா மஸ்ஜித் ஆகியவற்றில் கூறப்பட்ட கூற்றுக்கு ஒத்ததாக இருந்தது. ஜெயின் வாரணாசி, மதுரா மற்றும் தார் வழக்குகளிலும் மனுதாரர் ஆவார். சம்பல் மசூதி ஒரு பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவுச்சின்னமாகும். இத்தகைய சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் ஆய்வு நடத்துவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.
வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991ஐ பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஆரிப் உத்தீன் அகமது வலியுறுத்தியுள்ளார். இபோன்று,, சம்பல் ஜும்ஆ மஸ்ஜித்தில் அனைத்து களஆய்வு நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். நவம்பர் 24-ன் கலவர சம்பவங்கள், குறிப்பாக போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் காவல்துறையினரின் தவறான நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 நபர்கள் அடங்கிய விசாரணை குழுவை உத்தரப் பிரதேச அரசு நியமித்துள்ளது. எனினும் சம்பலில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். சம்பவம் தொடர்பாக வரம்பு மீறி செயல்படும் சமூக வலைத்தளங்களை கட்டுப்பத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்துள்ளது.
- நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ்
- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment