இந்திய அரசியலில் அதிரடி ஆதிக்கம் செலுத்தும் ஒரு முஸ்லிம் பெண் ஆளுமை இக்ரா ஹசன்....!
இந்திய அரசியல் மற்றும் ஜனநாயகம் குறித்து பிரபல பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ராஜ்தீப் சர்தேசாய் 'இந்தியாவை ஆச்சரியப்படுத்திய தேர்தல் 2024 - ஜனநாயகம் உயிரோடு உள்ளது' என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் பல நம்பிக்கையின் கதைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் சுவையான தகவல்களை மிக அருமையாக ராஜ்தீப் சர்தேசாய் எழுதியுள்ளார். சமநிலை இல்லாத ஒரு அரசியல் சூழலில் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல், மக்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் ஒரு சண்டையாக மாறியபோது, இந்திய வாக்காளர்கள் அரசியல் நிலைத்தன்மையை முன்னிறுத்த போராடினார்கள் என்று ராஜ்தீப் சத்தேசாய் வாதாடுகிறார். இந்த அருமையான புத்தகத்தில், முஸ்லிம் பெண் எம்.பி. இக்ரா ஹசனின் போராட்டங்கள், அவர் சந்தித்த சவால்கள், எதிர்கொண்ட அடக்குமுறைகள் ஆகியவற்றை மிகவும் சுவையான முறையில் தகவல்களாக அள்ளி வழங்கியுள்ளார் எழுத்தாளர் ராஜ்தீப் சத்தேசாய். முஸ்லிம் பெண் எம்.பி. இக்ரா ஹசன் குறித்து நூலில் இடம்பெற்றுள்ள அத்தியாத்திலிருந்து ஒரு பகுதியை இப்போது பார்க்கலாம்.
இக்ரா ஹசன் எம்.பி.:
தனது இருபது வயதின் நடுப்பகுதியில் ஒரு முஸ்லிம் இளம் பெண், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸில் (SOAS) அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று கனவு காண்கிறார். ஆனால், வாழ்க்கையின் விசித்திரம் வேறு மாதிரியாக இருக்க, சில ஆண்டுகளிலேயே மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள கைரானாவில் பரந்து விரிந்த கரும்பு வயல்களுக்குச் சென்று தேர்தலை சந்திக்கிறார். அரசியல் களத்தில் நிலைத்து நின்று சில ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைக்கு. 30 வயதான இக்ரா ஹசன் தேர்வான கதை மிகவும் அசாதாரணமானது.
SOAS இல் முதுகலைப் படிப்பை முடித்த நிலையில், கல்வியில் ஆர்வம் கொண்ட ஹசன், 2021 கோடையில், கோவிட்-19 தொற்று நோய் காரணமாக அவரை தாயகம் திரும்பும்படி கட்டாயப்படுத்தியபோது, மேலும் படிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டார். அவருடைய கவலைகள் அங்கு முடிவடையவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கைரானாவில் இருந்து மூன்று முறை சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த அவரது சகோதரர் நஹித் ஹசன், உத்தரப் பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1986 இன் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள இக்ரா ஹசன், "எனது முழு உலகமும் ஒரே இரவில் சிதைந்தது போல் இருந்தது. என் தந்தை வெகு காலத்திற்கு முன்பே இறந்துவிட்டார், என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, யோகி ஆதித்யநாத் அரசுக்கு சவால் விட்டதால்தான் என் சகோதரர் சிறையில் இருந்தார், எங்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன, எங்கள் சொத்துக்கள் வழக்கின் கீழ் வைக்கப்பட்டன. எனவே கல்வியை மறந்துவிட்டு, குடும்பத்தை ஒன்றாக நடத்துவதில் நான் கவனம் செலுத்த வேண்டியிருந்தது,” என்று தான் சந்தித்த சவால் மற்றும் சந்திக்கபோகும், அடுக்குமுறைகள் மற்றும் சவால்கள் குறித்து இப்படி தெரிவித்து இருந்தார்.
சவால்கள் முறியடிப்பு:
லண்டன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, உத்தரப் பிரதேசம் திரும்பிய இக்ரா ஹசன், சந்தித்த முதல் அரசியல் சவால் மிகவும் புகழ்பெற்ற ஒரு வரலாற்று சம்பவமாகும். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, சிறையில் இருந்த நஹித் ஹசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த இக்ரா ஹசன், தனது சகோதரரின் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார். பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் செயல் மற்றும் மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து தேர்தல் காலங்களில் அறுவடை செய்யும் போக்கு ஆகியவற்றை அவர் வாக்காளர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். இக்ரா ஹசனின், புதிய பிரச்சார பாணி, மக்கள் வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாக சிறையில் இருந்தபடி அவரது சகோதரர் நஹித் ஹசன், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
தாம் சந்தித்த முதல் அரசியல் சவால் மிகவும் நெருக்கடியாக இருந்தபோதும், அதை துணிச்சலுடன் எதிர்கொண்டு முறியடித்த இக்ரா ஹசனுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிட்டியது. ஆம் 2024ஆம் ஆண்டு மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி கட்சி அவருக்கு வாய்ப்பு அளித்தது. கைரானா மக்களவைத் தொகுதியில் போட்டியிட சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ யாதவ், உத்தரவிட்டபோது, இக்ரா ஹசன் அதனை மறுக்கவில்லை. கைரானா மக்களவைத் தொகுதி முஸ்லிம் வாக்காளர்கள் மிகவும் குறையாக உள்ள தொகுதியாகும். இந்த தொகுதியில் அனைத்து சமுதாய வகுப்பைச் சேர்ந்த வாக்காளர்கள் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு தொகுதியில் முஸ்லிம் இளம் பெண்ணான இக்ரா ஹசன் எப்படி வெற்றி பெற முடியும்? என கேள்விகள் எழுந்தன.
ஆனால், மீண்டும் துணிச்சலுடன் அரசியல் சவாலை எதிர்கொண்ட இக்ரா ஹசன், மக்கள் மத்தியில் அன்பு விதைக்கும் வகையில் பிரச்சாரம் செய்தார். பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியல், மக்களை பிரித்தாளும் போக்கு, சகோதரத்துவத்தின் முக்கியத்துவம், அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் இருப்பதால் கிடைக்கும் பலன்கள், நன்மைகள், முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் ஆகியவை குறித்து மிகச் சிறந்த முறையில், தனது அழகான உர்தூ மொழி மற்றும் ஆங்கில அறிவு திறமையை பயன்படுத்தி, மக்களின் கவனத்தை கவர்ந்தார். இதன் காரணமாக கைரானா மக்களவைத் தொகுதியில் சுமார் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை அவர் தோற்கடித்தார். இப்படி மகத்தான வெற்றி பெற்ற இக்ரா ஹசனை, "கைரானா தொகுதியின் செல்ல மகள்" என அனைத்து தரப்பு மக்களும் அழைக்க ஆரம்பித்தனர்.
18வது மக்களவைத் தேர்தலில் மூன்று முஸ்லிம் பெண் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவராக இக்ரா ஹசன், கைரானா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, இளம் முஸ்லிம் பெண் எம்.பி. என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நாம் ஏற்கனவே குறிப்பிட்ட போல, கைரானா தொகுதி, முஸ்லிம் வாக்காளர்கள் பெரும்பான்மையாக இல்லாத தொகுதியாகும். அந்த தொகுதியில் அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், வெறுப்பு பிரச்சாத்தை விதைக்காமல், அன்பு வழியில் மக்களின் மனங்களை கவர்ந்து, மக்களவைத் தேர்தலிலும் இக்ரா ஹசன், வெற்றி பெற்று இருப்பது மிகவும் வியப்பான ஒன்றாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
மகத்தான பணி:
மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட இக்ரா ஹசன், தன்னுடைய பணிகளை தற்போது மேலும் விரிவுப்படுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச பா.ஜ.க. அரசுக்கு சிம்மான சொப்பனமாக விளங்கி வரும் இக்ரா ஹசன், மக்கள் விரோத பா.ஜ.க. அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார். முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதுடன், அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கும், அரசின் திட்டங்கள் போய் சேர வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் இக்ரா ஹசன், ஆற்றிவரும் பணிகள், கைரானா தொகுதி மக்களை மட்டுமல்லாமல், உத்தரப் பிரதேச மாநில மக்களையும் கவர்ந்து வருகின்றன.
மக்களவையில் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் மட்டும் பேசாமல், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து பலன் அடையும் போக்கையும் இக்ரா ஹசன் கண்டித்து தனது உரையை ஆற்றுகிறார். இதன் காரணமாக மற்ற எம்.பி.க்களின் கவனத்தையும் அவர் தற்போது கவர்ந்து வருகிறார். இந்திய அரசியலில் அதிரடி ஆதிக்கம் செலுத்தும் ஒரு முஸ்லிம் பெண் ஆளுமை இக்ரா ஹசன் என்றால் அது மிகையாகாது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment