Friday, November 29, 2024

குல்லுபாய்.....!

 "மணிச்சுடரின் வைரம் குல்லுபாய்"

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

சிறப்புச் செய்தியாளர், மணிச்சுடர் நாளிதழ்

தமிழக முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களின்   ஒரே தமிழ் நாளிதழாக 'மணிச்சுடர்' விளங்கிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் சகோதரச் சமுதாய மக்களுக்கும் பயன்படும் வகையில் மிகவும் தரமான உண்மைச் செய்திகளை தருவதில் 'மணிச்சுடர்' எப்போதும் முன்னிலையில் இருந்து வருகிறது. இப்படி தமிழ் சமுதாயத்திற்காக, ஊடக நெறிமுறைகளை உறுதியாக பின்பற்றி செய்திகளை தரும் 'மணிச்சுடர் நாளிதழின்' வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், நாளிதழ் தொடங்கிய ஆரம்பம் முதல் தற்போது வரை, பலர் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

இப்படி மணிச்சுடருக்காக உழைத்த, மணிச்சுடரை சமுதாய மக்களிடம் கொண்டு சேர்த்த நல்ல பண்பாளர்களில் ஒருவர் தான் 'ஆற்காடு சையத் அகமத் என்ற குல்லு பாய்' ஆவார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் நிருபராக பல ஆண்டு காலம் பணிபுரிந்த குல்லு பாய், மணிச்சுடர் நிறுவனர் சிராஜுல் மில்லத் அவர்களின் மிகுந்த அன்பை பெற்றவர். தற்போதைய ஆசிரியர் பேராசிரியர்  கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் பாசத்திற்குரிய ஊடக மாணவராக இருந்தவர். 

பீகாருக்கு லாலு, மணிச்சுடருக்கு குல்லு:

நிருபர் சையத் அகமத் அவர்களை "பீகாருக்கு லாலு, மணிச்சுடருக்கு குல்லு" என்று சிராஜுல் மில்லத் அவர்கள், எப்போதும் செல்லமாகவும் அன்பாகவும் அழைத்து மகிழ்ச்சி அடைவார். அதற்கு முக்கிய காரணம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், ராணிப்பேட்டை, மேல் விஷாரம், வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணம்பட்டு, பள்ளிகொண்டா, அணைக்கட்டு என பல முக்கிய ஊர்களில்  சமுதாய மக்களிடம் மணிச்சுடர் நாளிதழை கொண்டு சேர்த்த பெருமை குல்லு பாய்க்கு உண்டு. மணிச்சுடரை சமுதாய மக்களிடமும் சகோதர சமுதாய மக்களிடம் கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல், மணிச்சுடரின் நிதி சுமையை குறைக்கும் வகையில் விளம்பரங்களை வாங்கி கொடுத்த அற்புதமான ஒரு நிருபர் தான் குல்லு பாய்.   

ஒரு சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குல்லு பாய், தனது வறுமையான நிலையில் கூட, அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், எப்போதும் சிரித்த முகத்துடன் சபாரி உடையை அணிந்துகொண்டு, மிடுக்காக செய்திகளை சேகரிக்க களத்திற்குச் செல்வார். விளம்பரங்களை வாங்க சமுதாய பிரமுகர்களை சந்தித்து பேசுவார். குல்லு பாயின் சிரித்த முகம், அவர் அணுகும் முறை, எப்போதும் பண்புடன் பழகும் குணம் ஆகியவற்றால் கவரப்பட்டு, பலர், அவருக்காகவே மணிச்சுடர் நாளிதழக்கு சந்தா அளித்து இருக்கிறார்கள். விளம்பரங்களையும் தந்து இருக்கிறார்கள். 

இப்படி, விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் தொகையை எந்தவித தயக்கமும் இல்லாமல், உடனடியாக மணிச்சுடர் அலுவலகத்தில் கொண்டு சேர்க்கும் நல்ல குணம் குல்லு பாயிடம் இருந்தது. விளம்பரங்கள் மூலம் பெரிய தொகை கிடைத்துவிட்டால், அதை நேரில் கொண்டு சென்று மணிச்சுடர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு தான் மறு வேலையை அவர் பார்ப்பார். அதற்கு முக்கிய காரணம், மணிச்சுடரின் நிதிநிலையை நன்கு அறிந்து இருந்ததால், பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கொடுக்க தாம் சேர்த்த விளம்பரங்கள் மூலம் கிடைத்த தொகை உதவும் என குல்லு பாய் உறுதியாக நம்பினார். 

பல நேரங்களில் மணிச்சுடர் ஊழியர்கள் குல்லு பாயின் வருகைக்காக காத்திருந்த சம்பவங்களை நான் நேரில் பார்த்து இருக்கிறேன். 'வாங்க குல்லு பாய். உங்களுக்காக தான் காத்திருக்கிறோம். இன்று சம்பளம் உறுதியாக கிடைத்துவிடும்' சிலர் மகிழ்ச்சியுடன் கூறியதையும் நான் கேட்டு இருக்கிறேன். வேலூரில் இருந்து பேருந்து மூலம் சென்னை புறப்பட்டு செல்லும் குல்லு பாய், மணிச்சுடர் ஊழியர்களுக்காக 'ஆற்காடு மக்கன் பேடா' உள்ளிட்ட பலகாரங்களையும் மறக்காமல் கொண்டு செல்வார். அவற்றை மணிச்சுடர் அலுவலத்தில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ச்சி அடைவார். குடும்பத்தில் ஏழ்மை நிலவினாலும், விருந்தோம்பல் என்ற குணத்தில் குல்லு பாய் எப்போதும் ஒரு பணக்காரர் என்றே கூற வேண்டும். 

வேலூர் மாவட்ட தலைவர்:

மிகப்பெரிய அளவுக்கு படிப்பு இல்லை என்றாலும், ஊடகத்துறை குறித்து ஒரு நல்ல புரிதல் குல்லு பாயிடம் இருந்தது. அதன் காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்த மாவட்ட நிருபர் சங்கத்திற்கு அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அனைத்து ஊடகத் தோழர்களிடமும் அன்பும் பாசமும் காட்டி பழகியதால், சங்கத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், அனைவரும் குல்லு பாயை ஒரு மனதாக தலைவராக தேர்வு செய்தனர். தனது பதவி காலத்தில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், நிருபர்களுக்கும் என்ன உதவிகள் செய்ய முடியுமா அத்தகைய உதவிகளை குல்லு பாய் செய்து அனைவரின் பாராட்டுதல்களை பெற்றார். 

அனைத்து பத்திரிகை நிருபர்களையும் ஒருங்கிணைந்து அவர்கள் மூலம், மற்றவர்களுக்கு எப்படி பணியாற்ற வேண்டும் என்ற ஒரு அற்புதமான பணிகளையும் குல்லு பாய் செய்து, பெரும் நன்மதிப்பு பெற்றார். அரசு மூலம் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், பலன்கள் ஆகியவற்றை பெற அரிய முயற்சிகளையும் குல்லு பாய் செய்து பாராட்டுகளை அள்ளிச் சென்றார். 

நானும் குல்லு பாயும்:

டெல்லியில் இருந்து நான் வேலூர் வந்தபிறகு, சிராஜுல் மில்லத் அவர்கள் குல்லு பாய் மூலம் என்னை சென்னைக்கு வரும்படி சொல்லி அனுப்பி இருந்தார். அப்போது என்னை தேடி வீட்டிற்கு வந்த குல்லு பாய், "நீங்கள் தான் அஜீஸ் பாயா. தலைவர் அவர்கள் உங்களை சென்னைக்கு வரும்படி கூறி இருக்கிறார். உடனே சென்று பாருங்கள்" என்று கூறி, தன்னை என்னிடம் அறிமுகம் செய்துக் கொண்டது இன்னும் என் மனக் கண் முன் வந்து செல்கிறது. பிறகு, பலமுறை அவருடன் சேர்ந்து நான் செய்திகளை சேரிக்கச் செல்லும்போது, அவருக்கு கிடைக்கும் சிறிய அள்பளிப்பு மற்றும் பணத்தை என்னிடம் கொடுத்து, 'செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள். நான் எப்படியாவது சமாளித்துக் கொள்வேன். நீங்கள் தான் வேலையில்லாமல் இருக்கிறீர்கள் ' எனக் கூறி என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். 

என்னிடம் இருந்த எழுத்து திறமையை அறிந்துகொண்டு, அதை பலமுறை அனைத்து சிராஜுல் மில்லத் அவர்களிடமும், தற்போதைய மணிச்சுடர் நாளிதழ் ஆசிரியர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களிடமும் கூறி என்னை புகழ்ந்து பேசியதை நான் அறிந்தபோது, உண்மையில் என்னுடைய மனம் மகிழ்ச்சி அடைந்தது. மணிச்சுடர் செய்திப்பிரிபு குழுவினரிடமும் என்னைப் பற்றி பெருமையாக பேசியதை,  அவர்கள் கூறிக் கேட்டபோது, நான் குல்லு பாயின் பெருந்தன்மையை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். 

கே.எம்.கே. காட்டிய அன்பு:

சிராஜுல் மில்லத் அவர்களின் மறைவுக்குப் பிறகு, மணிச்சுடர் நாளிதழின் பொறுப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். சிராஜுல் மில்லத் அவர்களின் காலத்திலேயே பேராசிரியர் கே.எம்.கே.வுடன் நல்ல தொடர்பும் அன்பும் கொண்டிருந்த குல்லு பாய், சிராஜுல் மில்லத் மறைவுக்குப் பிறகு, அந்த தொடர்பையும் அன்பையும் மேலும் வளர்த்துக் கொண்டார். பேராசிரியர் அவர்கள், வேலூர் மாவட்டத்திற்கு வரும்போது, அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கும் பணியை குல்லு பாய் செய்து வந்தார். இ.யூ.முஸ்லிம் லீக் மற்றும் சமுதாய மக்களை சந்திக்க செல்லும்போது, பேராசிரியர் அவர்களுடன் கட்டாயம் குல்லு பாய் இருப்பார். சமுதாய பிரமுகர்களிடம் குல்லு பாயை பேராசிரியர் அவர்கள் மிகவும் சிறப்பான முறையிலும் அற்புதமான மொழிகளை கூறியும் அறிமுகம் செய்துவைத்ததை நான் பலமுறை நேரில் கண்டு வியப்பு அடைந்து இருக்கிறேன். 

நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டியிட்டபோது, முதல்முறையாக தொகுதிக்கு வந்தார். அப்போது, ஆற்காடு பாலாற்று பாலம் வழியாக பேராசிரியர் மற்றும் முஸ்லிம் லீக் ஊழியர்கள் பயணம் செய்த வாகனங்கள் வந்தபோது, அதன் எல்லையில் நின்று பிரமாண்ட வரவேற்பை, குல்லு பாய் அளித்தது மட்டுமல்லாமல், தன்னுடைய குடிசை வீட்டிற்கு பேராசிரியர் அவர்களை அழைத்துச் சென்று, அங்கும் தனது அன்பை பொழிந்து வரவேற்பு அளித்து மகிழ்ச்சி அடைந்தார். குல்லு பாயின் வீட்டில், பேராசிரியர் மற்றும் அவருடன் வந்த அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. குல்லு பாய் அளித்த வரவேற்புக்குப் பிறகு, பேராசிரியர் அவர்கள் வேலூருக்கு புறப்பட்டு சென்று, திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 

குல்லு பாயிடம் பேராசிரியர் அவர்களுக்கு எப்போதும் தனி மதிப்பு இருந்தது. அதன் காரணமாக, நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அனைத்து செய்திகளையும் ஊடகங்களுக்கு அளிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைத்தார். அவருக்கு துணையாக என்னையும் நியமித்தார். கடுமையான வெயில் காலத்தில், கோடை அக்னி நட்சத்திரம் தொடங்கிய காலத்தில் நடந்த தேர்தல் அது. அப்படிப்பட்ட தேர்தலில் பம்பரமாக சுழன்று வேலை செய்த குல்லு பாய், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, விஷாரம் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு நல்ல சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சைக்குப் பிறகு, வீடு திரும்பிய குல்லு பாய், தேர்தல் பணி ஆர்வம் காரணமாக மீண்டும், வீட்டை விட்டு வெளியே வந்தபோது, கடும் வெப்பம் அவரை மயக்கம் அடையச் செய்தது. மயக்கம் அடைந்த விழுந்த குல்லு பாயை மருத்துவமனையில் அனுமதிதபோது, அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு விட்டது என மருத்துவர்கள் கூறினார்கள். எனினும் சில நாட்களிலேயே ஏக இறைவனின் நாட்டத்தின்படி, அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தார். 

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெறுவார் என முன்பே கணித்த குல்லு பாய், அந்த வெற்றியை காண வாய்ப்பு பெறவில்லை. இது பேராசிரியர் அவர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதேபோன்று,  வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பீரங்கி எச்.அப்துல் பாசித் அவர்கள் கூட, குல்லு பாயை மிகவும் நேசித்த மனிதர்களில் ஒருவராவார். ஆம்பூருக்கு சென்றால், குல்லு பாய், பாசித் அவர்களின் வீட்டில் தான் மதிய உணவு சாப்பிடுவார். அப்துல் பாசித் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதை கூட,  கொண்டாடும் வகையில் குல்லு பாய் நம்மிடம் இருக்கவில்லை. இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள், குல்லு பாயிடம் பாசத்துடன் பழகியதை என்னால் இன்னும் மறக்க முடியாது. 

மணிச்சுடரின் வைரம் குல்லுபாய்:

சையத் அகமது என்ற குல்லு பாய், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினராக மட்டுமல்லாமல், மணிச்சுடர் நாளிதழின் நிருபராக மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி, அனைவரின் நன்மதிப்பு பெற்றதால், அவரை மணிச்சுடரின் வைரம் என அழைப்பதில் எந்த குற்றமும் இல்லை என்றே கூறலாம். ஏழ்மையில் கூட, எப்படி தாளார மனதுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை குல்லு பாயிடம் இருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ளலாம். மணிச்சுடர் நாளிதழ் பல அற்புதமான செய்தியாளர்களை தந்து இருக்கிறது. அந்த செய்தியாளர்களில் ஒரு வைரம் தான் ஆற்காடு குல்லு பாய். 

மணிச்சுடர் நாளிதழ் தற்போது 40வது ஆண்டில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. அந்த பயணத்தில் குல்லு பாய் ஆற்றிய பங்களிப்பை மணிச்சுடர் நிர்வாகம் மட்டுமல்ல, ஊடகவியலாள்ர்கள் கூட மறக்கவே முடியாது. பொதுவாக யாராவது மரணம் அடைந்துவிட்டால், அவரது உடலை பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வராது. துக்கம் மட்டுமே வரும். ஆனால், குல்லு பாய் அவர்கள் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டபோது, நான் அடைந்து துயரத்திற்கு அளவே இல்லை. ஆற்காட்டில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த குல்லு பாயின் உடலை பார்த்தபோது, என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்து விழுந்தது. அதற்கு முக்கிய காரணம், குல்லு பாய் என்மீது காட்டிய பாசம். அன்பு ஆகியவற்றை கூறலாம். பல நேரங்களில் அவர் எனக்கு செய்த அன்பு உதவிகள், பாசத் தொல்லைகள் ஆகியவற்றை கூறலாம். மணிச்சுடர் நாளிதழ் மறக்க முடியாத ஒரு சிறந்த நிருபர் குல்லு பாய் என்றால் அது மிகையாகாது. 

======================================

No comments: