சம்பல் ஷாஹி ஜமா மஸ்ஜித் பிரச்சினையில் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய சென்ற இ.டி.முஹம்மது பஷீர் தலைமையிலான இ.யூ.முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் குழுவிற்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி மறுப்பு
உண்மையை மூடி மறைக்க பா.ஜ.க. அரசு முயற்சி செய்வதாக வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் எம்.பி. குற்றச்சாட்டு
போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு இ.யூ.முஸ்லிம் லீக் துணையாக இருக்கும் என்றும் உறுதி
புதுடெல்லி, நவ.28-உத்திர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மஸ்ஜித் பிரச்சினையில் மாநில போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதனால் அங்கு பதற்றமான நிலை நீடித்து வரும் நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி. தலைமையில், 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (27.11.2024) அன்று டெல்லியில் இருந்து சம்பல் சென்றனர்.. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறவும், கள நிலவரங்களை அறிந்து சட்ட உதவிகளை மேற்கொள்ளவும் சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் இ.டி. முகம்மது பஷீர், அப்துல் சமது சமதானி, பி.வி.அப்துல் வஹாப், .நவாஸ் கனி, வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் ஆகியோர் அடங்கிய குழுவை பா.ஜ.க அரசின் காவல்துறை தடுத்து நிறுத்தி‘யது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல விடாமல் குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பாகவே காவல்துறை தடுத்து நிறுத்தி ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்திருக்கிறது.
இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான், சம்பல் சம்பவம் தொடர்பாக சட்ட போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சம்பல் சம்பவம் குறித்தும், உத்தரப் பிரதேச அரசின் செயல்பாடுகள் குறித்தும் ஹாரிஸ் பீரான் அளித்துள்ள நேர்காணலின் முழு விவரங்கள் இதோ:
நிலைமையை நேரில் ஆய்வு செய்ய முடிவு:
சம்பலில் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய நாங்கள் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) முடிவு செய்து அங்கு சென்றோம். இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோருக்கு முழு தகவல் தெரிவித்து இருந்தாம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (27.11,2024) அன்று சம்பல் செல்கிறோம் என்றும், அங்கு நிலைமையை ஆய்வு செய்ய இருக்கிறோம் என்றும் தெரிவித்து இருந்தோம். மாவட்ட ஆட்சித் தலைவர், பிற அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க நாங்கள் முடிவு செய்தோம். இதுகுறித்து முழு விவரங்களையும் மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவருக்கு கூறி இருந்தோம்.
நாங்கள் ரகசியமாக செல்லவில்லை. அனைத்து தகவல்களையும் அதிகாரிகளுக்கு தெரிவித்து சென்றோம். எங்களுடைய வருகையின் முக்கிய நோக்கம் என்ன என்பது குறித்தும் தெளிவாக கூறி இருந்தோம்.
அனுமதி வழங்கப்படவில்லை:
ஆனால் நாங்கள் சம்பல் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஹபூர் பகுதி சுங்கக்சாவடி அருகே போலீசார் எங்களை தடுத்தி நிறுத்திவிட்டார்கள். மிகப்பெரிய அளவுக்கு காவல்துறை அதிகாரிகள் அங்கு திரண்டு இருந்தார்கள். அவர்கள் எங்களிடம் இப்படி கூறினார்கள். 'உங்களை நாங்கள் அனுமதிக்க முடியாது. மீண்டும் நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்' என்று கூறிவிட்டார்கள். சம்பல் பகுதியில் நிலவும் உண்மையை மறைக்க மாநில பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது. அங்கு காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதனால் அங்கு மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே நாங்கள் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து உண்மை நிலையை அறிய முடிவு செய்தோம். அதன்மூலம் பிரச்சினையின் தன்மை நன்கு தெரியவரும் என நினைத்தோம்.
இ.யூ.முஸ்லிம் லீக் துணை நிற்கும்:
சம்பலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? நீதிமன்ற்ததிற்கு செல்ல வேண்டுமா? என்பன உள்ளிட்ட விவரங்கள் எங்களுக்கு தெரியவரும் என நினைத்தோம். உயிரிந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன் அவர்களுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணையாக உள்ளது என கூற முடிவு செய்தோம்.
இந்த கலவரம் குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழநத குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். மஸ்ஜித்தில் ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும். 1991ஆம் ஆண்டு நாடாளுமன்ற்த்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மதிக்க வேண்டும். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வழிப்பாட்டுத்தலங்கள் எப்படி இருந்ததோ அப்படி இருக்க வேண்டும் என்ற சட்டத்தை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். இதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு.
பா.ஜ.க. அரசு தான் முழு பொறுப்பு:
சம்பல் சம்பவத்திற்கு மாநில பாஜக அரசு தான் முழு பொறுப்பு. போலீசார் துப்பாக்கிச் சூடு மூலம் 6 பேரை கொன்றுள்ளார்கள். இதன்மூலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைத்து இருப்பது உறுதியாக தெரிகிறது. மாநில அரசு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தோல்வி அடைந்து விட்டது.
போராட்டத்தில் ஈடுபடட்டவர்கள் மீது கொலை முயற்சி செய்தார்கள் என பொய் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய்யான தகவல் ஆகும். 6 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, அதை நியாயப்படுத்த இப்படி போலியான குற்றச்சாட்டை போலீசார் வைக்கிறார்கள்.
நாங்கள் குழு விவரங்களை அறிக்கையாக தயாரித்து பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில முதலமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் அனுப்ப உள்ளோம்.
சட்ட ரீதியாக நடவடிக்கை:
இந்த பிரச்சினை குறித்து சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பது குறித்து நாங்கள் ஆலோசிக்க உள்ளோம். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எங்கள் கட்சியின் நிர்வாகிகள் எங்களுக்கு முழு விவரங்களை அளிக்க உள்ளார்கள். அதன் அடிப்படையில் நாங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
1991ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். சட்டம் மிகவும் தெளிவாக இருக்கும் நிலையில், நீதிமன்றங்கள் கூட அதை மதித்து உத்தரவிட வேண்டும். சட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். அத்ன்மூலம் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் வராது. பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லாமல், சம்பல் போன்ற பிரச்சினைகளை வேண்டும் என எழுப்பினால், நாடு மிகவும் ஆபத்தான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் இருந்து முஸ்லிம்கள் மெல்ல மெல்ல விடுபட்டு சகஜமான நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் மஸ்ஜித், கோவில் பிரச்சினையை கொண்டு வந்தால், நாட்டு மக்களின் கவனம் இதில் சென்றுவிடும். இது நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லாது. பின்னோக்கி அழைத்துச் செல்லும்.
அமைதியாக இருக்க வேண்டுகோள்:
சம்பல் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். இதை தெரிவிக்கவே நாங்கள் சம்பல் செல்ல முயற்சி செய்தோம். முஸ்லிம்கள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களிடமும் அமைதியான வழியில் பயணிக்க வேண்டும் என சொல்லவே நாங்கள் விரும்புகிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள். அமைதியாக வாழ வேண்டியவர்கள். இந்த கருத்தை தெரிவிக்கவே நாங்கள் சென்றோம். ஆனால் அமைதியை விரும்பாத யோகி அரசு, உண்மையை மூடி மறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எங்களை சம்பல் செல்ல அனுமதிக்கவில்லை.
இவ்வாறு வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் தனது நேர்காணலில் தெரிவித்தார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment