Wednesday, November 13, 2024

உர்தூ மொழி....!

 "உர்தூ" முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான மொழியா?

உலகின் பல நாடுகளில் உர்தூ மொழி பேசப்பட்டு வந்தாலும், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் உர்தூ மொழி பேசுவோரின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருந்து வருகிறது. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பீகார், பஞ்சாப், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் உர்தூ மொழி அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தென்மாநிலங்களை எடுத்துக் கொண்டால், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உர்தூ மொழி பேசுபவர்கள் அதிகமாகவே இருந்து வருகிறார்கள்.

உர்தூ மொழியும் முஸ்லிம்களும்:

இந்தியாவில் உர்தூ மொழி, முஸ்லிம்கள் பேசும் மொழி என்ற ஒரு தவறான புரிதல் சகோதரச் சமுதாய மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. உர்தூ மொழியை அதிகளவு முஸ்லிம்கள் பயன்படுத்தினாலும், அது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான மொழி கிடையாது.

நான் டெல்லியில் வசித்தபோது, ஒரு பஞ்சாபி தோழரை சந்தித்தேன். அந்த தோழர் என்னை விட மிக  அழகிய முறையில் உர்தூ மொழியை பேசியும், எழுதியும் என்னை வியப்பில் ஆழ்த்தினார். அவருடைய உர்தூ மொழி பற்று குறித்து கேட்டபோது, ' பஞ்சாபிகள் பெரும்பாலானோர் உர்தூ மொழி பேசுவார்கள். எழுதுவார்கள்' என கூறி என்னை வியப்பு அடையச் செய்தார். பல புகழ்பெற்ற பஞ்சாபி எழுத்தாளர்கள் உர்தூ மொழியில் அழகிய நவீனங்களை, கவிதைகளை எழுதி உர்தூ இலக்கியத்துக்கு சேவை ஆற்றி இருக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்தபோது உண்மையில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

பஞ்சாபி தோழர்கள் மட்டுமன்றி, இந்து மத தோழர்களும் உர்தூ மொழியை நேசித்து அதை கற்று அதனுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது நிஜமான உண்மையாகும். இதன்மூலம் உர்தூ மொழி முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான மொழி கிடையாது என்ற உண்மை எனக்கு புரிந்தது.

உர்தூ மொழி மீது காதல்:

இந்தியாவின் நைட்டிங்கேல் என அன்புடன் அழைக்கப்படும் மறைந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் உர்தூ மொழி மீது காதல் கொண்டு அதை கற்று தேர்ந்து, தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் அழகான முறையில் பயன்படுத்தி வந்தார். தன்னுடைய வெற்றிக்கு உர்தூ மொழி மிகவும் பக்கப்பலமாக இருந்து என ஒருமுறை லதா மங்கேஷ்கர் கூறி இருக்கிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தன்னுடைய வசீகரமான குரலால் மக்கள் மனங்களை கவர்ந்த லதா மங்கேஷ்கர், தன்னுடைய வெற்றியின் ஒரு அங்கமாக உர்தூ மொழி இருந்தது என்று கூறியதை கேட்டபோது உண்மையில் வியப்பு ஏற்பட்டது.

இதன்மூலம் உர்தூ மொழி முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான மொழி இல்லை என்பது உறுதியாக தெரிய வருகிறது.

யுனானி படிப்புகளில் உர்தூ:

இந்திய மருத்துவ முறைகளில் முக்கிய மருத்துவமாக யுனானி மருத்துவம் இருந்து வருகிறது. டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் யுனானி மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு என பல படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. அந்த படிப்புகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேர்ந்து படிக்கிறார்கள். யுனானி படிப்புகளில் சேர வேண்டுமானால், உர்தூ மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். உர்தூ எழுதவும் படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் யுனானி  மருத்துவக் கல்வியை சிறப்பாக பெற முடியும். தேர்ச்சி அடைய முடியும்.

யுனானி மருத்துவக் கல்வியை தற்போது முஸ்லிம்கள் மட்டும் அல்லாமல், சகோதரச் சமுதாயச் சேர்ந்த மாணவர்களும் விரும்பி படிக்கிறார்கள். உர்தூ மொழி தெரியாத அவர்கள், யுனானி மருத்துவக் கல்வி மீது இருக்கும் ஆர்வம் காரணமாக உர்தூ மொழியை கற்றுக் கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழியை மட்டுமே பேசும் முஸ்லிம்கள் கூட உர்தூ மொழியை அறிந்து கொள்ள ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளார்கள். யுனானி மருத்துவக் கல்வி மூலம், உர்தூ மொழி அனைத்து சமுதாய மக்களிடம் பரவலாக பயன்படுத்தப்படும் மொழியாக தற்போது மாறி வருகிறது.

வேதனையான உண்மை:

அழகிய உர்தூ மொழி அனைத்து மக்களும் பயன்படுத்தும்  மொழியாக மெல்ல மெல்ல மாறி வந்தாலும் உர்தூ மொழி பேசும் மக்களிடையே அதன் பயன்பாடு தற்போது வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. வீட்டில் உர்தூ மொழியை பேசிக் கொண்டாலும், அதை கற்றுக் கொள்வதில் முஸ்லிம்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. வீட்டில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவதில் காட்டும் ஆர்வம், உர்தூ மொழியை கற்றுத் தருவதில் பெற்றோர்கள் காட்டுவதில்லை. அதற்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல சாக்கு போக்குகள் சொல்லப்படுகின்றன.

இதன் காரணமாக, உர்தூ மொழி வாசிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பழைய டெல்லியில்  உர்தூ மொழி நூல்களை விற்பனை செய்யும் நூற்றுக்கணக்கான விற்பனை நிலையங்கள் இருந்தன. ஆனால் தற்போது விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே உர்தூ கடைகள் உள்ளன. ஏராளமான கடைகள் உணவகங்களாக மாறிவிட்டன. சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் கூட இதே நிலைமை தான்.

தீர்வு என்ன?

உர்தூ மொழி இசுலாமியர்களுக்கு மட்டுமே சொந்தமான மொழி இல்லை. அது ஒரு இந்துஸ்தானி மொழி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உர்தூ மொழியில் அழகிய வரலாற்று நவீனங்கள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், அறிவியல் உண்மைகள் என அரிய பொக்கிஷங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை நாம் அறிய வேண்டுமானால், உர்தூ மொழியை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். உர்தூ மொழி நமது மொழி, அனைவருக்குமான மொழி என்ற கருத்தை மனதில் வாங்கிக் கொண்டால், உர்தூ மொழியில் புலமை பெறலாம். உர்தூ மொழியை இரசிக்கலாம். சுவைக்கலாம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: