அல்ஜியர்ஸ் சர்வதேச புத்தகக் கண்காட்சி
சவூதி அரேபியா பங்கேற்பு
அல்ஜீரியாவில் நடைபெறும் அல்ஜியர்ஸ் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், சவூதி அரேபியா தனது அரங்கத்தை வைத்துள்ளது. பின்ஸ் மாரிடைம்ஸில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸில் புதன்கிழமை 28.10.2026 அன்று தேசிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அஸூஸ் நஸ்ரி, இந்த அரங்கத்தைத் திறந்து வைத்தார். அல்ஜீரியாவின் கலாச்சாரம் மற்றும் கலைத்துறை அமைச்சர் மலிகா பெண்டூடா, அல்ஜீரியாவிற்கான சவூதி தூதர் அப்துல்லா அல்-புசைரி, மற்றும் இலக்கியம், பதிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல்அத்தீஃப் அல்வாசெல் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சவூதி அரேபியா தேர்வு :
இந்த புத்தகக் கண்காட்சியில் சவூதி அரேபியா சிறப்பு விருந்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது என்றும், பிராந்திய மற்றும் சர்வதேச கலாச்சாரத் தளத்தில் சவூதி அரேபியாவின் தீவிரமான பங்களிப்பைக் காட்டுகிறது என்றும் இலக்கியம், பதிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல்அத்தீஃப் அல்வாசெல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சவூதி கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை மற்றும் செழுமையை அல்ஜீரிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த நிகழ்வு ஒரு சிறப்பான வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
==================
"சவூதி அரேபியாவின் நிகழ்ச்சி நிரலில் குழு விவாதங்கள், கவிதை மாலைகள், மற்றும் புகழ்பெற்ற சவூதி எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுடனான கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெறும்"
==================
பாரம்பரிய அம்சங்கள் இடம்பிடிப்பு :
கண்காட்சியில் பங்கேற்ற சவூதி அரேபியாவின் பிரதிநிதிகள் குழுவில் பாரம்பரியம், சமையல் கலை, ஆடை அலங்காரம், கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு, அத்துடன் திரைப்படத் துறைகளும் அடங்கும். சவூதி அரேபியாவின் நிகழ்ச்சி நிரலில் குழு விவாதங்கள், கவிதை மாலைகள், மற்றும் புகழ்பெற்ற சவூதி எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுடனான கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று கையெழுத்துப் பிரதிகள் :
மேலும், சவூதி பாரம்பரியக் கலைகள் மற்றும் பொக்கிஷமான வரலாற்று கையெழுத்துப் பிரதிகளின் சிறப்புக் காட்சி ஆகியவை சவூதி அரேபியாவின் இலக்கிய மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும். இந்த அரங்கில் சவூதி வெளியீடுகள், கைவினைப் பொருட்கள், சவூதி அரேபியா முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்ட தொல்பொருள் மாதிரிகள், மற்றும் சவூதி இசைக்கருவிகளின் ஒலிகளும் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 7ஆம் தேதி வரை இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment