நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக புதிய திட்டம்….!
இந்துத்துவ கொள்கையை தீவிரப்படுத்த முடிவு….!!
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி இன்று பதவியை ஏற்றுக் கொள்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா இரண்டாவது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற பதவி ஏற்றுவிழாவில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்டார். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர.. பெங்களூருவில் நடைபெற்ற பதவி ஏற்பு விழா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பாஜக கடும் அதிர்ச்சி:
கர்நாடக தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று அதன்மூலம் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்தலாம் என பாஜக தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த தேர்தலில் வளர்ச்சிப் பணிகள் குறித்து பாஜக தலைவர்கள் பேசவில்லை. மாறாக சாதி, மதம், தி கேரளா ஸ்டோரி, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மட்டுமே பேசி பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், இதற்கு கர்நாடக மக்கள் ஆதரவு வழங்கவில்லை. இதனால் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, 30 தொகுதிகளில் டெபாசிட் பறிகொடுத்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. கர்நாடக தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.
மேலும் பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி பாஜக பிரச்சாரம் செய்ததால், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடியே பொறுப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. மேலும், ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்கள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பாஜக 50 சதவீதம் பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.
பாஜக அதிரடி திட்டம்:
கர்நாடக தோல்வி பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய பின்னடைவாக கருத்தப்படுகிறது. எனவே, சிறிது காலத்திற்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு எதிரான போக்குகள் மற்றும் நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டு செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் போது மீண்டும் இந்துத்துவ கொள்கையை தூக்கிப் பிடித்து செயல்பட பாஜக திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து துறைகளில் தோல்வி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியப் பொருளாதாரக் குறியீடு மிகவும் மோசமாக இருந்து வருகிறது.
2020 ஆம் ஆண்டின் உலக பட்டினி குறியீடு அட்டவணையில் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் வேலையின்மை விகிதம் பிப்ரவரி 2023-ல் முந்தைய மாதத்தில் 7.14 சதவீத்தில் இருந்து 7.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 15-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை 24.9 சதவீதமாகும். இது தெற்காசியப் பிராந்தியத்தில் மிக அதிகமாக உள்ளது. தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள்- இந்தியாவின் எல்பிஆர் 46 சதவீதமாக உள்ளது, இது உலக அளவை விட மிகக் குறைவு. இந்தியாவில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
குழந்தை வளர்ச்சி விகிதம் இந்தியாவில் 17.3 சதவீதமாக உள்ளது, இது தெற்காசியாவிலேயே மிக மோசமானது. ஏனென்றால், இந்திய குடும்பங்கள் பலவிதமான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன, இதில் மோசமான உணவுப் பன்முகத்தன்மை, குறைந்த அளவிலான தாய்வழி கல்வி மற்றும் குடும்ப வறுமை ஆகியவை அடங்கும். இந்தியாவில் தற்கொலை விகிதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 12 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023-ஆம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, 137 நாடுகளில் இந்தியா 126வது இடத்தைப் பிடித்துள்ளது. கடுமையான வேலையின்மை, அதிக பணவீக்கம் மற்றும் சுகாதார கவலைகள் ஆகியவை மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள் ஆகும். இது இந்தியர்களின் மன ஆரோக்கியத்தை பாதித்துள்ளது.
பாஜகவின் அடுத்த திட்டம்:
அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டு, இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் சாமானிய மக்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்பதை, மேற்கூறிய குறியீடுகள் மிகச் சிறப்பாகச் சுட்டிக்காட்டுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டில் வாழும் பெரும்பான்மை இந்து மக்களின் மத்தியில் தன்னுடைய புகழை எப்படி தக்க வைத்துக் கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 9 ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், பெரும்பான்மை இந்துக்களே. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, உள்ளிட்ட பிரச்சினைகளில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தது இந்து குடும்பங்கள்தான். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு மீண்டும் வாக்கு அளிக்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், தேர்தலுக்கு ஒருசில மாதங்களில் இருந்து மீண்டும் இந்துத்துவ கொள்கையை தீவிரப்படுத்தி சிறுபான்மையின மக்களுக்கு எதிரான எதிர்ப்பு சூத்திரத்தை பயன்படுத்த பாஜக முடிவு செய்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதன்படி வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற ‘ தேர்தலுக்கு முன்னதாக முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சுக்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
என்ன செய்யப் போகின்றன எதிர்க்கட்சிகள்:
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம், நாட்டுக்கு ஒரு நல்ல கருத்தை அம்மாநில மக்கள் உறுதிப்பட கூறியுள்ளனர். நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம்தான் முக்கியம் என்றும், சாதி, மத ரீதியாக மக்களை பிளப்படுத்தி அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் அது. நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்க மக்கள் தயாராக உள்ளனர் என்பது கர்நாடக தேர்தல் முடிவுகள் சொல்லித்தரும் பாடமாகும்.
இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வி நாட்டு மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாஜகவை வீழ்த்தப் போகின்றவா, அல்லது தனித்தனியாக நின்று அதன்மூலம் வாக்குகளை பிரித்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப் போகின்றவா என்ற வினா மக்களிடம் நாள்தோறும் எழுந்துக் கொண்டே வருகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு, நல்ல செயல் திட்டத்தை உருவாக்கி பணியாற்றினால், நாட்டு மக்கள் நிச்சயம் தங்களது முழுமையான ஆதரவை அளிப்பார்கள். மேலும், பாஜக முன்வைக்கும் இந்துத்துவ கொள்கை,யை பெரும்பான்மை இந்து மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாட்டு மக்கள் மிகத் தெளிவாக இருந்து வரும்நிலையில், இனி முடிவு செய்ய வேண்டியது எதிர்க்கட்சி தலைவர்கள்.‘தான் என்று நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்