Thursday, June 29, 2023

ம.பி. ஹிஜாப்.....!


மத்திய பிரதேசத்தில் வெடித்த ஹிஜாப் பிரச்சினை....!

முஸ்லிம் மாணவிகள் பாதிப்பு.....!!

கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த முந்தைய பாஜக அரசு, ஹிஜாப் பிரச்சினையை கிளப்பி முஸ்லிம் மாணவிகளின் கல்வியை பறித்தது. இந்த செயலுக்கான தண்டனையை அண்மையில் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடக மாநில மக்கள் அளித்து பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றினர். தற்போது புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ள முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு, ஹிஜாப் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வந்த ஹிஜாப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. அத்துடன் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிகளுக்கு மீண்டும் கர்நாடக அரசு வாய்ப்பு அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் வெடித்த ஹிஜாப் பிரச்சினை: 

இந்நிலையில், தற்போது பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஹிஜாப் பிரச்சினை வெடித்து, ஒரு பள்ளியின் அங்கீகாரத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. தாமோவில் உள்ள கங்கா ஜமுனா மேல்நிலைப் பள்ளியில் படித்த முஸ்லிம் மாணவிகள் பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தனர். இப்படி படிப்பில் சாதனை நிகழ்த்திய மாணவிகளை வாழ்த்தி, சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டது. இந்த சுவரொட்டியில், மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு இருந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உடனடியாக செயலில் இறங்கினர். 

இந்த சுவரொட்டியின் படங்களைப் பயன்படுத்தி, வி.எச்.பி. மற்றும் ஏபிவிபி உள்ளிட்ட பல்வேறு வலதுசாரி அமைப்புக்கள், முஸ்லிம் அல்லாத பெண் மாணவிகள் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர். மேலும், மகாகாவி அல்லாமா முஹம்மது இக்பால் எழுதிய  கவிதைகளை  மாணவிகளை பாட வைத்ததாகவும் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதைத் தொடர்ந்து, தாமோ மாவட்ட ஆட்சியர் மயங்க் அகர்வால், பள்ளியின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைத்தார்.

பள்ளியின் அங்கீகாரம் ரத்து:

அதன்படி, தாமோவில் உள்ள கங்கா ஜமுனா மேல்நிலைப் பள்ளியை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, பள்ளியில் குடிநீர் வசதியின்மை, மாணவிகளுக்கான கழிப்பறை வசதியின்மை ஆகியவை இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். 

பின்னர், மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், தாமோவில் உள்ள கங்கா ஜமுனா மேல்நிலைப் பள்ளி, மாநிலக் கல்வித் துறை நிர்ணயித்த விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, பள்ளியின்  பதிவை உடனடியாக ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. எனினும், ஹிஜாப் பிரச்சினை குறித்து எதுவும் பள்ளிக் கல்வித்துறை குறிப்பிடவில்லை. 

சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை:

இந்த பிரச்சினை குறித்து கருத்து கூறியுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இந்து மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டும் தலையை மூடிக்கொண்டும் பள்ளிக்கு வர வற்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது என்றும் இதுபோன்ற செயல்கள்  மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, அமல்படுத்திய தேசிய கல்விக் கொள்கை மட்டுமே மாநிலத்தில் அமலுக்கு வரும் என்றும்,  புதிய கல்விக் கொள்கைக்கு பொருந்தாத எதையும் கற்பிக்கும் பள்ளிகளை அனுமதிக்க முடியாது என்றும் சவுகான் கூறியுள்ளார். அத்துடன், ஹிஜாப் அணிந்து வர கட்டாயப்படுத்தினால், அதற்கு மத்திய பிரதேசத்தில் அனுமதியில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மாணவிகள் பாதிப்பு:

மத்திய பிரதேச பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி இல்லை என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் இந்த அறிவிப்பு, முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முஸ்லிம் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பல முஸ்லிம் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் படிப்பை பாதியிலேயே நிறுத்த முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஹிஜாப் பிரச்சினையால் கர்நாடக மாநில முஸ்லிம் மாணவிகள் எப்படி பாதிக்கப்பட்டார்களோ, அதேபோன்ற நிலைமையை தற்போது மத்திய பிரதேச முஸ்லிம் மாணவிகளும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது சமுக ஆர்வலர்கள், முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் கவலையை உருவாக்கியுள்ளது. 

தேர்தலுக்கான நடவடிக்கை:

மத்திய பிரதேசத்தில் இன்னும் நான்கு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கைப்பற்றிய பாஜக, மக்களின் நலனில் எந்தவித அக்கறையும் கொண்டு திட்டங்களை நிறைவேற்றவில்லை. மேலும், பாஜக ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், 50 சதவீத கமிஷன் பெறப்பட்டதாகவும், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் குற்றம்சாட்டி வருகிறார். 

அத்துடன், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றும்  மத்திய பிரதேச மக்களை அவர் வலியுறுத்தி வருகிறார். கர்நாடக காங்கிரஸ் அரசை பின்பற்றி, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் கமல்நாத் அறிவித்துள்ளார். இது ஏழை, நடுத்தர மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக, தற்போது ஹிஜாப் உள்ளிட்ட பிரச்சினைகளை வேண்டும் என்றே கிளப்பியுள்ளது. பாஜகவின் இந்த வெறுப்பு அரசியலுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேச மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என்பது உறுதி. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: