கல்வி நிறுவனங்களில் படிப்பை பாதியில் நிறுத்தும் போக்கு முஸ்லிம் சமுதாயத்தில் அதிகரிப்பு.....!
அதிர்ச்சி தகவல்....!!
நாடு முழுவதும் முஸ்லிம் மாணவ-மாணவியர் இடையே கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு, இதன்மூலம் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
பல தடைகளை உடைத்து முஸ்லிம் மாணவ-மாணவியர் கல்வியில் சாதனை புரிந்து வருகின்றனர். இது மற்றவர்களுக்கு ஒரு உத்வேகம் அளித்து வருகிறது.
கல்வியை பாதியில் நிறுத்தம் அதிகரிப்பு:
கல்வியில் முஸ்லிம் மாணவ-மாணவியர் சாதித்து வரும் நிலையில், கல்வி நிறுவனங்களில் இருந்து படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு செல்லும் போக்கு முஸ்லிம் சமுதாயத்தில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக டெல்லியில் அண்மையில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது.
ஜனாபா ரூபினா தபசும் என்பவர் தயாரித்துள்ள இந்த நூலில், பல அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விவரங்கள் தெரிய வந்துள்ளன.
முஸ்லிம்கள் மத்தியில் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது என்று நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கல்வியை பாதியில் நிறுத்தம் போக்கு விகிதம் அதிகரித்து வருகிறது.
முஸ்லிம்கள் மத்தியில் கல்விக்கான உந்துதல் கணிசமாக அதிகரித்து இருந்தாலும், அவர்களிடையே படிப்பை பாதியில் நிறுத்தும் விகிதம் மிக அதிகமாக உள்ளது.
தேசிய அளவில் படிப்பை பாதியில் நிறுத்தம் சராசரி 18.96 சதவீதமாக உள்ளது.
இதை ஒப்பிடும்போது முஸ்லிம்களின் விகிதம் 23.1 சதவீதமாக உள்ளது.
கல்வி உரிமை பிரகடனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும் நாட்டில் படிப்பை பாதியில் நிறுத்தம் செய்யும் விகிதம் இன்னும் குறையவில்லை.
கடைசி இடத்தில் முஸ்லிம்கள்:
ஒன்றிய கல்வி அமைச்சகம் உள்ளிட்ட அரசு வட்டாரங்களிலிருந்து திரட்டப்பட்ட உண்மைத் தரவுகளின் அடிப்படையில் கல்வி, சமூக, பொருளாதாரக் குறியீடுகளில் முஸ்லிம்கள் கடைசி இடத்தில்தான் இருக்கிறார்கள் என்பது உறுதிப்பட தெரிகிறது.
ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் தங்களுடைய வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை தங்கள் குழந்தைகளின் கல்விக்காக செலவழிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
பலவீனமான முஸ்லிம் சமூகம் அவர்களின் சமூக பொருளாதார நிலைமை காரணமாக கல்வி வாய்ப்புக்களை அணுகுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.
வறுமை மிக முக்கிய காரணம்:
முஸ்லிம்கள் கல்வியை பாதியில் நிறுத்துவதற்கு வறுமை உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றன.
படிப்பை இடையில் நிறுத்துவதால் பல முஸ்லிம் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புகளை இழக்கிறார்கள்.
முஸ்லிம் மாணவர்கள் கல்வியை பாதியில் நிறுத்தி விடுவதால், அது, நாட்டின் சமூக-பொருளாதார பின்னடைவுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
சமுதாயம் விழித்துக் கொள்ள வேண்டும்:
கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவ-மாணவியர் படிப்பை பாதியில் கைவிடுவதை தடுக்க சமுதாயம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கல்வியின் முக்கியத்துவம், அதன்மூலம் கிடைக்கும் நீண்ட கால பலன்கள், சமுதாயத்தில் ஏற்படும் மாற்றம், மறுமலர்ச்சி ஆகியவை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
கல்வியில் ஆர்வம் உள்ள ஏழை, நடுத்தர முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு பல்வேறு வகையிலும் உதவிக்கரம் நீட்டி, ஊக்கப்படுத்தி, உற்சாகம் அளிக்க வேண்டும்.
இதன்மூலம் மட்டுமே படிப்பை பாதியில் நிறுத்தம் போக்கு முஸ்லிம்கள் மத்தியில் குறையும்.
இந்துத்துவ அமைப்புகளின் சதி திட்டங்களை முறியடிக்க முஸ்லிம் சமுதாயம் தங்கள் முன் உள்ள இந்த மிகப்பெரிய சவாலை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.
No comments:
Post a Comment