மணிச்சுடர் ரமளான் மலர் - 2023
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா சிறப்பிதழ்....!
ஓர் பார்வை....!!
மணிச்சுடர் நாளிதழ் 2023-ஆம் ஆண்டுக்கான தனது ரமளான் சிறப்பிதழை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மலராக வெளியிட்டுள்ளது. 532 பக்கங்களை கொண்ட இந்த சிறப்பிதழ் ஒரு வரலாற்று பொக்கிஷமாக மலர்ந்துள்ளது.
நாட்டில் நல்லிணக்கம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சென்னையில் கடந்த ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் தேச-நேச திருப்பயணம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, கேரள மாநில தலைவர் நபிவழித் தோன்றல் செய்யது சாதிக் அலி சிஹாப் தங்ஙள், தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் இஸ்லாம், இந்து, கிறிஸ்துவம்,ஜெனம் உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆன்மிக தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
உலகின் மாபெரும் வல்லரசாக இந்தியா திகழ்வதற்கான முதல் அம்சம் நாட்டு மக்களின் ஒற்றுமைதான் என இந்த கூட்டத்தில் பேசிய பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் அருமையான உரை விரிவாக இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. இதேபோன்று, நாட்டில் நல்லிணக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டுக் கொண்டு இருப்பதாகவும், அதை பாதுகாக்க நம் சமுதாயத்திற்கு வரலாற்றை எடுத்துக் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி ஆற்றிய அருமையான உரையும் இந்த இதழில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அருட்திரு டாக்டர் மேன்யல் எஸ்.டைட்டஸ், குலாம் முஹம்மது மெஹ்திகான், பிரம்மகுமாரி நீலிமா, டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, பிரம்மஸ்ரீ ஜெகதீசன் என பல ஆன்மிக சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் மலரில் இடம்பெற்று, மலருக்கு அழகு சேர்க்கின்றன.
தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் ஆற்றிய ஒவ்வொரு உரையும் வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதிலும், பாரத் மாதா கி ஜே., ஜெய்ஹிந்த் ஆகிய முழக்கங்களை எல்லாம் முதலில் எழுப்பியவர் ஒரு முஸ்லிம் என பீட்டர் அல்போன்ஸ் குறிப்பிட்டது, அத்துடன் இந்திய அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட அடித்தளமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள் என அவர் கூறியதை, முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்துச் சமுதாய மக்களும் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த அருமையான வரலாற்று பொக்கிஷ மலரில், சென்னையில் கடந்த மார்ச் 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75வது பவள விழா மாநாட்டு செய்திகள் மிகச் சிறப்பான முறையிலும் விரிவாகவும் இடம்பெற்றுள்ளன. மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில், நாடு முழுவதும் இருந்து வந்து கலந்துகொண்டு முஸ்லிம் லீக் தலைவர்கள் ஆற்றிய உரைகள், வீர முழக்கங்கள், முஸ்லிம் லீகின் வரலாற்றுப் பயணம் குறித்து கட்சியின் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆற்றிய கம்பீர உரைகள், எழுதிய கட்டுரைகள், இ.யூ.முஸ்லிம் லீகின் வரலாற்றை அனைவரும் அறிந்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியின் புகைப்படங்கள் ஆகியவை இந்த மலரில் இடம்பிடித்துள்ளன.
இ.யூ.முஸ்லிம் லீக் பவள விழா மாநாட்டின் நிறைவு நாளில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என பல சுவையான தகவல்கள் மலரில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், இ.யூ.முஸ்லிம் லீகின் 75 ஆண்டு கால வரலாறு, முஸ்லிம் லீக் சார்பில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இடம் பெற்ற தலைவர்கள், அவர்கள் ஆற்றிய உரைகள், செய்த பணிகள், மதநல்லிணக்கத்தை தழைக்க தொகுதியில் சாதி, மதம் பார்க்காமல் ஆற்றிய மக்கள் நலப்பணிகள் என ஏராளமான செய்திகள், புகைப்படங்கள் மலரில் காணும்போது இவ்வளவு பணிகள் செய்யப்பட்டுள்ளதா என ஆச்சரியம் அடைய செய்கிறது. இ.யூ.முஸ்லிம் லீக் குறித்து பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகள், சுவையான தகவல்கள் ஆகியவையும் மலரில் இடம்பெற்று இருப்பது மலருக்கு மெருகு ஊட்டுகிறது.
மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலருக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பொறுப்பாசிரியராக இருந்து, தனது கடினமாக உழைப்பின் மூலம் பவள விழா சிறப்பிதழை, எக்காலத்திலும் பாதுகாக்க வேண்டிய பவள பொக்கிஷமாக தயாரித்துள்ளார். அவருடைய கடின உழைப்பு, பணி, அர்ப்பணிப்பு ஆகியவைதான், 37வது ஆண்டு மணிச்சுடர் ரமளான் மலரை மிகச்சிறப்பான முறையில் வெளிவர முக்கிய காரணம் என்பதை மலரின் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும்போது அறிய முடிகிறது.
மணிச்சுடர் ரமளான் மலர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா சிறப்பிதழ், முஸ்லிம் லீக் தொண்டர்கள் மட்டும் படிக்க வேண்டிய நூல் கிடையாது. இந்த பொக்கிஷ மலரை சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் படிக்க வழி வகை செய்ய வேண்டும். அதன்மூலம் இ.யூ.முஸ்லிம் லீகின் 75 ஆண்டு கால வரலாற்றை அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்துக் கொண்டால், நாட்டில் மத நல்லிணக்கம் தழைத்து வளரும் என்பது உறுதி.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment