மகாகவி அல்லாமா முகமது இக்பால் குறித்த பாடம் நீக்கம்.....!
டெல்லி பல்கலைக்கழகம் முடிவு....!!
கடந்த 9 ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியில் நாட்டில் இந்துத்துவ கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தவும், முஸ்லிம்களுக்கு ஏதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அரங்கேற்று வருகின்றன.
நாட்டில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை அமைதியாக தொடரக் கூடாது என்ற ஒரே திட்டத்தின் கீழ் இந்துத்துவ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி வரலாற்றை மாற்றி எழுதுவது, நாட்டின் விடுதலைக்காக இஸ்லாமியர்கள் செய்த தியாகங்களை மூடி மறைப்பது, முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்புகளை பறிப்பது, வணிகம் உள்ளிட்ட தொழில்களில் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பது என பல்வேறு நடவடிக்கைகளை இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து எடுத்து வருகின்றன.
முஸ்லிம்கள் குறித்த பாடங்கள் நீக்கம்:
அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சொல்லித் தரப்படும் படிப்புகளுக்கான பாடங்களில், முஸ்லிம் தலைவர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், விடுதலை போராட்ட வீரர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த பாடங்கள் மிகமிக குறைவு. ஒருசில தலைவர்களின் பாடங்கள் மட்டும் சொல்லித் தரப்பட்டு வருகின்றன. அத்துடன் முஸ்லிம்கள் குறித்த தவறான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் திப்பு சுல்தான் குறித்து தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை இளம் பிஞ்சுகளின் மனதில் பதிய வைக்க பாஜக அரசு நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கு அம்மாநில மக்கள் நல்ல பதிலடி கொடுத்து, பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது புதிதாக வந்துள்ள காங்கிரஸ் அரசு, பாடப் புத்தகங்களில் பாஜக புகுத்திய பாசிக கருத்துகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அல்லாமா முகமது இக்பால் யார் ? :
முஸ்லிம்களின் தியாகங்களை மறைக்கும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது டெல்லி பல்கலைக்கழகம் மகாகவி அல்லாமா முகமது இக்பால் பற்றிய பாடத்தை நீக்க முடிவு செய்துள்ளது.
‘சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் அமாரா' (உலகிலேயே மிகச்சிறந்த நாடு இந்தியா) என்ற பாடலை இயற்றி அனைத்து இந்திய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மகாகவி இக்பால். கடந்த 1877ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் சிலாகோட்டில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர் முகமது இக்பால். அவர் ஏப்ரல் 21, 1938 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் (இப்போது பாகிஸ்தான்) பஞ்சாப், லாகூரில் காலமானார்.
இக்பால் உருது இலக்கியத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். உருது மற்றும் பாரசீக மொழிகளில் அவரது கவிதைப் படைப்புகளுக்காக பிரபலமாக அறியப்படுகிறார். அவரது கவிதைகள் பெரும்பாலும் ஆன்மீகம், தேசியவாதம் மற்றும் தெற்காசியாவில் முஸ்லிம் சமூகத்தின் மறுமலர்ச்சி ஆகியவற்றின் கருப்பொருளை மையமாகக் கொண்டிருந்தன.
இக்பால் தனது இலக்கியப் பங்களிப்புகளைத் தவிர, ஒரு சிறந்த தத்துவஞானி மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் மற்றும் நலனுக்காக வலுவான வழக்கிறிஞரலாக இருந்தார். அவர் தனது தத்துவக் கருத்துக்களில் சுயநலம், சுய கண்டுபிடிப்பு மற்றும் அறிவைப் பின்தொடர்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இக்பாலின் சுயத்துவம் என்ற கருத்து, தனிநபர்கள் தங்கள் முழுத் திறனையும் உணர்ந்து, சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. முகமது இக்பாலின் எண்ணங்கள் மற்றும் எழுத்துக்கள் தொடர்ந்து பரவலாக ஆய்வு செய்யப்பட்டு மதிக்கப்படுகின்றன. அவரது கவிதை மற்றும் தத்துவக் கருத்துக்கள் பிராந்தியத்தின் கலாச்சார, அறிவுசார் மற்றும் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அத்துடன் ‘சாரே ஜஹான் ஸே அச்சா இந்துஸ்தான் அமாரா' என்னும் புகழ்பெற்ற பாடலை இயற்றியதற்காக இவர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்பட்டவர். கவிதைகள் தவிர அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், சமயம் ஆகிய துறைகளில் இவர் எழுதிய நூல்கள் மிகவும் பிரபலமானவை.
டெல்லி பல்கலைக்கழகம் முடிவு:
இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் கவுன்சில் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த வகையில், கவிஞரும் தத்துவஞானியுமான அல்லாமா முகமது இக்பால் குறித்த பாடத்தை பிஏ அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது அல்லாமா முகமது இக்பால் குறித்த பாடம், 'நவீன இந்திய அரசியல் சிந்தனை' (Modern Indian Political Thought) என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஏ. அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 6-வது செமஸ்டரில் இடம்பெற்றிருந்தது. அந்தப் பாடத்தை, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் கவுன்சில் இயற்றியிருக்கிறது. இந்த தீர்மானம் குறித்து இறுதி முடிவு எடுக்க பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில் எடுத்துள்ள இந்த முடிவை ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) வரவேற்றுள்ளது. அல்லாமா முகமது இக்பால் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ள ஏபிவிபி, இந்திய பிரிவினைக்கு அவர் முக்கிய காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
கல்வியாளர்கள் எதிர்ப்பு:
அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து அல்லாமா முகமது இக்பால் பற்றிய பாடத்தை நீக்குவதற்கு டெல்லி பல்லைக்கழகம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு நாட்டில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உலகிற்கு மிகச்சிறந்த இலக்கியப் பங்களிப்புகளை அல்லாமா முகமது இக்பால் வழங்கி இருப்பதாக கூறியுள்ள அவர்கள், குறுகிய கண்ணோட்டத்துடன் டெல்லி பல்கலைக்கழகம் முடிவு எடுத்து இருப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளனர். தன்னுடைய முடிவு டெல்லி பல்கலைக்கழகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment