செல்போன்களுக்கு அடிமையாகும் இளம் குழந்தைகள்……!
மனநலம் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு..!!
நவீன யுகத்தில் பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை செல்போன் இல்லாமல் வாழவே முடியாத என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. சாதாரண செல்போன்கள் மிகப்பெரிய அளவுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தயாரிக்கப்படும் நவீன ஸ்மார்ட்போன்கள் சமூக பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றன.
இத்தகைய விதவிதமான ஸ்மார்ட்போன்கள் நாள்தோறும் சந்தையில் விற்பனைக்கு குவிந்து வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்படுத்துவதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் செலுத்துவதால், அவற்றின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
மாறிவரும் காலத்திற்கு ஏற்ப மனிதனின் பழக்க வழக்கங்களும் மாறிக் கொண்டே செல்வதால், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடும் அனைத்துத் தரப்பு மக்களிடம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாழ்க்கைக்கு செல்போன் கட்டாயம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளிடம் செல்போன்:
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இளம் குழந்தைகள் செல்போனை அதிகமாக பயன்படுத்தி வருவது ஒருசில புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது. மூன்று வயது முதல் 10 வயதுக்கு உட்பட குழந்தைகள், செல்போனை தொடர்ந்து உபயோகிப்பது பெற்றோர்களை கவலை அடையச் செய்துள்ளது. வீட்டில் உள்ள பெரியவர்கள் செல்போனை பயன்படுத்துவதை பார்க்கும் குழந்தைகளும், அதன் மீது ஆர்வம் கொண்டு, தங்களுக்கும் சொந்தமாக செல்போன் வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள். இதனால் வேறு வழியில்லாமல், அவர்களின் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனை வாங்கி தர வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
சாதாரண செல்போனில் மிகப்பெரிய அளவுக்கு ஆபத்தும் பிரச்சினைகளும் ஏற்படுவது மிகக்குறைவு. ஆனால் ஸ்மார்ட்போன்கள், குழந்தைகளின் மன ஆற்றலை சிதைத்து விடுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். தொடர்ந்து செல்போனை பயன்படுத்துவதால், அதற்கு அடிமையாகும் கட்டாய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். செல்போன் இல்லாமல் வாழவே முடியாது என்ற இக்கட்டான நிலை உருவாகி, அதன்மூலம் ஒருவித மன நோய்க்கு குழந்தைகள், இளைஞர்கள் தள்ளப்படுகிறார்கள். இதனால் குடும்பங்களில் அமைதி சீர்குலைகிறது.
பெற்றோர்கள் கவலை:
தொழில்நுட்பத்திற்கான ஆரம்ப அணுகலின் விளைவாக குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் சமூக பழக்கவழக்கங்கள் மாறுவது பெற்றோர்களை கவலை அடையச் செய்கிறது. தங்கள் குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகி அதன்மூலம் சமூக ஊடகங்கள், இணைய மிரட்டல் போன்ற ஆபத்துகளுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் இருந்து வருகிறது. ஸ்மார்ட்போன்களின் தாக்கம் குறித்து உலகளாவிய ஆய்வு, ஒன்று நடத்தப்பட்டது. அதில், டிஜிட்டல் உலகம் பல்வேறு எதிர்மறை விளைவுகளை உறுதிப்படுத்துகிறது. 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் மனநலம், குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், செல்போன் பயன்படுத்தாமல் இருப்பர்கள் சிறந்த மன ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆய்வில் அதிர்ச்சி தகவல்:
இளம் வயதில் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டைப் பயன்படுத்தும் இளைஞர்களின் உடல்நலம் பல்வேறு நிலைகளில் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 6 முதல் 10 ஆண்டுகள் வரை தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திய இளைஞர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அந்த இளைஞர்கள் மத்தியில் தற்கொலை எண்ணங்கள் அதிகரிப்பு, பெற்றோர்கள் நலனில் அக்கறை இல்லாமல் இருப்பது, சமூக சிந்தனை இல்லாமல் செயல்படுவது, எப்போதும் ஒருவித குற்ற உணர்ச்சியுடன் இருப்பது உள்ளிட்ட செயல்கள் அதிகரித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர்களுக்கு எச்சரிக்கை:
எனவே, செல்போன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனித்து வர வேண்டும். பிரச்சினை ஸ்மார்ட்போன்களில் இல்லை. ஆனால் அவை எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதில்தான் உள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 10-14 வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகள் அதிகளவு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சர்வதேச சராசரியை விட ஏழு சதவீதம் அதிகமாகும்.
புதிய கண்டுபிடிப்புகள் அனைத்து மட்டங்களிலும் மிக கவனமாக கையாள வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதை மறந்துவிடக் கூடாது. குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் செல்போன் பயன்படுத்தும் விவகாரத்தில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செயல்பட்டால் மன, உடல்நல பாதிப்புகளில் தப்பித்துக் கொள்ளலாம். அத்துடன், பிற சமூக பிரச்சினைகள் வராமல் பாதுகாப்புடன் இருக்க முடியும் என உறுதிப்பட கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment