Tuesday, June 27, 2023

மூளையை சீர்குலைக்கும் குடிப்பழக்கம்....!

குடிப்பழக்கம் மூளையை சீர்குலைத்துவிடும்.....!

மருத்துவ ஆய்வில் தகவல்....!!


மனித வாழ்வைச் சீர்குலைப்பதில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். உடலுக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் மது என்ற கொடூர விஷம், பல குடும்பங்களை  வறுமை நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அண்மையில், வேலூரில் தன்னுடைய தந்தை தொடர்ந்து மது அருந்தி வந்தால் மனம் உடைந்து போன பள்ளி மாணவி ஒருவர், தன்னுடைய தந்தை மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இப்படி மது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தி வரும்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பல இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கை அழித்துக் கொண்டே செல்கிறார்கள். மதுவினால் எப்படிப்பட்ட பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன., அதனால், எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் என்ன என்பது குறித்து இளைஞர்கள் கொஞ்சமும் உணர்ந்துக் கொள்வதில்லை. 

மது குறித்து இஸ்லாம் எச்சரிக்கை:

மது அருந்துவதற்கு இஸ்லாத்தில் ஒருபோதும் அனுமதி இல்லை. எனவே, மது அருந்தும் மனிதர்களை முஸ்லிம்கள் கொஞ்சமும் மதிப்பதில்லை. 

மது குறித்து ஏக இறைவனின் வாக்கான திருக்குர்ஆனில் இப்படி எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக! 

  -  அல்குர்ஆன் 2:219

இதேபோன்று மற்றொரு வசனத்தில், "மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?"          

- அல்குர்ஆன் 5:90

என இறைவன் எச்சரித்துள்ளான். 

அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் மது குறித்து எச்சரிக்கை செய்துள்ளார்கள். 

மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் . 

- அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: இப்னு மாஜா 3371

ஆக, மது விஷயத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது நமக்கு உறுதியாக தெரிய வருகிறது. 

மூளையை சீர்குலைக்கும் மது:

மதுவினால் ஏற்படும் விளைவுகள் குறித்து அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக உயிரியல் மற்றும் மருத்துவத்துறை சார்பில் அண்மையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த புதிய ஆய்விவில், அதிக ஆல்கஹால் உட்கொள்வது, இளம்பருவத்தில் நியூரான்கள் அல்லது மூளை செல்களை நிரந்தரமாக சீர்குலைத்துவிடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மது அருந்துவதன் மூலம் மூளையின் வெளிப்புற அடுக்கான புறணியில் உள்ள நியூரான்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து எலிகளை வைத்து 30 நாட்கள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த 30 நாட்களுக்கு எலிகளுக்கு மது கொடுக்கப்பட்டது. இப்படி நடத்தப்பட்ட ஆய்வில், அதிகமாக மது குடித்த எலிகளின் நியூரான்கள் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.  அதேநேரத்தில் மதுக் குடிக்காத எலிகளின் நியூரான்கள் மிகவும் உற்சாகமாக இருந்தன. பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இந்த ஆய்வின் முடிவுகள், நியூரோஃபார்மகாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  இளமைப் பருவத்தில், மூளை வேகமாக வளர்ச்சியடையும் போது, அதிக அளவு ஆல்கஹால் உட்கொள்வது, மூளையின் சமிக்ஞை மற்றும் தொடர்பு கொள்ளும் திறனில் நீண்டகால மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளம் பருவத்தைச் சேர்ந்தவர்கள் அதிகப்படியான குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, அதன்மூலம்  நியூரான்களை அழித்துக் கொண்டபிறகு, மது அருந்துவதை நிறுத்தினாலும்,  அவர்களால் அதை மீண்டும் திரும்பப் பெற முடியாது என பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் நிக்கி குரோலி எச்சரித்துள்ளார். 

மூளையின் வளர்ச்சி பாதிக்கும்:

மனிதர்களின் வாழ்க்கையில் இளமைப் பருவம் மிகவும் முக்கியமானது. ஒருவரின் வாழ்க்கையில், முதல் 25 வயது வரை, மூளை மெல்ல மெல்ல முதிர்ச்சி அடைந்து வருகிறது. இந்த காலத்தில் மூளையின்  வலிமைக் கூடிக் கொண்டே செல்கிறது. இப்படி மூளை நல்ல வளர்ச்சி அடைந்துவரும்  நேரத்தில், இளைஞர்கள் மூளையின் வளர்ச்சிக்கு இடையூறுகள் செய்யும் வகையில், மது உள்ளிட்ட போதைப் பொருட்களை உட்கொண்டால், அதனால் நீண்ட கால பாதிப்புகள் ஏற்படும் என  மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். 

மது அருந்துவதே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம், குடிப்பவருக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் என  மருத்துவ பேராசிரியர் குரோலி கூறியுள்ளார்.  அத்துடன், இளம் வயதில் மூளை பாதிக்கப்பட்டால், அதன் விளைவுகள் பல ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  

மதுப்பழக்கம் கைவிட வேண்டும்:

எனவே, குடிப்பழக்கத்தை இளைஞர்கள் மட்டுமல்ல, அனைவரும் கைவிட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஒருவரின் இளமையையே பாழ்படுத்திவிடுகிறது என்பதை மறுந்துவிடக் கூடாது. மதுப்பழகத்திற்கு ஆளான பலரின் வாழ்க்கை, சீர்குலைந்து சின்னபின்னமாகி விட்டதை நாம் நாள்தோறும் கண்டு வருகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. மது என்ற அரக்கணை தொடவேக் கூடாது என்ற உறுதியுடன் எப்போதும் இருக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே, உடலுக்கும் வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: