Thursday, June 29, 2023

முஸ்லிம் மாணவன் சாதனை....!


ஏழ்மையிலும் சாதித்த முஸ்லிம் மாணவன் முகமது இர்பான்....!

உ.பி. சமஸ்கிருத வாரியத் தேர்வில் 

முதலிடம் பிடித்து அசத்தல்...!! 

உத்தரபிரதேச மத்தியமிக் சமஸ்கிருத சிக்ஷா பரிஷத் வாரியத்தின் 12-ஆம் வகுப்பு தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 13 ஆயிரம் மாணவ மாணவியர் கலந்துகொண்டு தேர்வை எழுதினர்.  இந்த தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தேர்வில் யார் முதலிடம் பிடிப்பார்கள் என்ற கேள்வி அனைத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பாக இருந்து வந்தது. இதனால் தேர்வு முடிவை  மிகவும் ஆர்வத்துடன் மாணவ-மாணவியர் எதிர்நோக்கி இருந்தனர். 

முகமது இர்பான் முதலிடம் பிடித்து சாதனை:

இந்த தேர்வில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முஸ்லிம் மாணவன் முகமது இர்பான் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். 17 வயதான முகமது இர்பான், உத்தரபிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்தில் வசிக்கும் தினசரி கூலித் தொழிலாளியான சலாவுதீனின் மகன் ஆவார்.  சமஸ்கிருத வாரியத் தேர்வில் கலந்துகொண்ட 13 ஆயிரம் பேரில்  முகமது இர்பான்  82.71 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்து இருப்பது அனைவரையும் வியப்பு அடையச் செய்துள்ளது. 

சமஸ்கிருத ஆசிரியராக வர வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட இர்பான், 10 மற்றும் 12 வகுப்புகளிலும்  தேர்ச்சி பெற்ற முதல் 20 மாணவர்களில் ஒரே முஸ்லீம் மாணவராக தேர்ச்சி பெற்று  தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

வறுமையான குடும்ப சூழ்நிலை:

தினசரி 300 ரூபாய் மட்டுமே ஊதியம் பெறும் முகமது இர்பானின் தந்தைக்கு கடும் பண நெருக்கடி இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது மகனை நல்ல தனியார் பள்ளியில் அவரால் சேர்க்க முடியவில்லை. எனவே சம்பூர்ணானந்த் சமஸ்கிருத அரசுப் பள்ளியில் தனது மகனை சேர்க்க வேண்டிய  கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது. 

சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்ற இர்பானின் விருப்பத்தை அறிந்த அவரது தந்தை  அதற்கு தடையாக இருக்காமல், கல்வி தொடர எப்போதும் ஊக்குவித்து வந்துள்ளார்.

இர்ஃபான் வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ள அவரது தந்தை, ஆரம்பத்திலிருந்தே சமஸ்கிருதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த தனது மகன் அதை மேலும் படிக்க விரும்பியதாகவும் அதனால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான தனது மகனின் முயற்சிக்கு ஊக்கம் அளித்ததால்,அவரது விடாமுயற்சிக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும்  சலாவுதீன் கூறியுள்ளார். ஒரு முஸ்லீம் சமஸ்கிருதம் படிக்க முடியாது என்ற கருத்து தற்போது உடைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஜூனியர் வகுப்புகளில் சமஸ்கிருதம் ஒரு கட்டாயப் பாடமாக இருந்தது. அங்கிருந்துதான்  இர்பானுக்கு அந்த மொழியின் மீது விருப்பம் ஏற்பட்டது. அவர் இப்போது சாஸ்திரி (BA-க்கு சமமானது) மற்றும் ஆச்சார்யா (MA-க்கு சமமானது) செய்ய திட்டமிட்டுள்ளார்.

பின்னர் சமஸ்கிருத ஆசிரியர்  வேலையில் சேரவும் இர்பான் முடிவு செய்துள்ளார். 

இஸ்லாத்தில் உறுதி:

சமஸ்கிருதம் படிப்பதில் ஆர்வத்துடன் இருந்தாலும், முகமது இர்பான்  இஸ்லாமிய மார்க்க ஒழுக்க நெறிகளை உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறார். ஒரு உண்மையான முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவராக எப்போதும் தம்மை அடையாளப்படுத்தி கொண்டு வருகிறார். 

இர்பான் கருத்து:

குறிப்பிட்ட மொழியை ஒரு மதத்துடன் தொடர்புபடுத்துவது தமக்கு புரியவில்லை என கூறியுள்ள இர்பான்,  ஒரு இந்து மாணவர் உருது மொழியைக் கற்றுக்கொள்வதில் மிகச் சிறந்தவராக இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோன்றுதான்  ஒரு முஸ்லீம் மாணவர் சமஸ்கிருதத்தைப் படிப்பதில் மிகச் சிறந்தவராக இருக்க முடியும் என்றும் தான் கல்வியின் மதிப்பைப் புரிந்துகொண்ட ஒரு மாணவன் என்றும் அவர் கூறியுள்ளார். 

இர்பான் தொடர்ந்து விடாமுயற்சியும், கடின உழைப்பும் கொண்ட மாணவராக இருந்ததாகவும், தனது சாதனைகள் மூலம் கல்லூரிக்கு மதிப்பைக் கொண்டு வந்ததாகவும் அவர் படித்த கல்லூரியின் முதல்வர் ஜெய் ஷ்யாம் திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார். 

முஸ்லிம்களிடையே அதிகரித்து வரும் கல்வி ஆர்வம்:

ஏக இறைவனின் வாக்கான திருக்குர்ஆன் சமஸ்கிருத மொழியிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த மொழி  தெரிந்தவர்கள், திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள ஏக இறைக் கொள்கை, வாழ்க்கை நெறிகள், இம்மை, மறுமை குறித்து  அறிந்து கொள்ள முடிகிறது.

இந்நிலையில், முகமது இர்பானை போன்ற மற்ற முஸ்லிம்களும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொண்டு தேர்ச்சி பெறுவதில் எந்த வியப்பும் இல்லை. 

அந்த வகையில் சமீப காலமாக, முஸ்லீம் சமூகத்தினரிடையே பல்வேறு மொழிகளை கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதற்காக இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் வருகிறது. முஸ்லிம் மாணவ-மாணவியர் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த ஆர்வத்திற்கு சமூகம் நல்ல வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட்டு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: