ஜப்பானில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாம்....!
சமீப காலமாக மதங்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ள பல்வேறு மதம், கலாச்சார நம்பிக்கை கொண்ட மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
உலகின் அனைத்து மூலைகளிலும் இஸ்லாம் பரவியதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்து அதற்கான விடை தேடுதல் உலக மக்களிடையே தற்போது ஏற்பட்டுள்ளது.
சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இஸ்லாம்:
உலகின் அனைத்து மதங்களும் சமூகத்தை நேர்மறையான வழிகளில் வடிவமைக்க உதவும் அறநெறிகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு அடித்தளமாக உள்ளன. உண்மையில், இஸ்லாம் சமூகப் பிரச்சனைகளை, இனவெறி, சமத்துவமின்மை மற்றும் பாலின வேறுபாடு போன்றவற்றைத் தீர்க்கும் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.
இதனால் உலக மக்கள் இஸ்லாத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாக இஸ்லாம் அமைந்துள்ளது.
ஜப்பானில் இஸ்லாமிய எழுச்சி:
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், கிட்டத்தட்ட 1 லட்சத்து 12 ஆயிரம் முதல் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இஸ்லாம் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் முஸ்லிம்களை, ஜப்பான் அவ்வளவாக வரவேற்கவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, ஜப்பானியர்கள் வித்தியாசமான நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வதில் அதிகமாக ஆர்வம் கொண்டுள்ளனர்.
ஜப்பானில் உள்ள முஸ்லிம்கள் தேசியம், இனம், கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்ற பல்வேறு பின்னணியில் இருந்து வருகிறார்கள். மேலும் ஜப்பானிய முஸ்லிம்கள் தொழுகை மற்றும் நோன்பு போன்ற அவர்களின் பாரம்பரியங்களை கண்டிப்பாக பின்பற்றுகிறார்கள். மற்றவர்களுக்கு மிகவும் தாராளமாக உதவி செய்யும் குணம் கொண்டவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
முஸ்லீம் மக்கள் தொகை ஜப்பானில் அதிகரித்து வருவதற்கு இரண்டாவது பெரிய காரணம் அந்நாட்டில் வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகும். ஈரான், பாகிஸ்தான், இந்தோனேசியா, பங்களாதேஷ் போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானுக்கு தொழிலாளர்களாக வந்தனர்.
பொருளாதாரம் பின்தங்கி இருந்த காலத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்ட கட்டுமானத் தொழிலில் அவர்களில் பலர் பணிபுரிந்தனர். பல நாடுகளில் இருந்து வந்த முஸ்லீம்கள், தங்களுடைய இஸ்லாமிய நெறிமுறைகளை உறுதியாக கடைப்பிடித்து, ஜப்பான் மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.
இதனால் ஜப்பானியர்கள் மத்தியில் இஸ்லாம் கவரப்பட்டு, அந்நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அத்துடன் மட்டுமல்லாமல் ஜப்பான் முழுவதும் மசூதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தது.
இளம் முஸ்லிம் மக்கள் தொகை:
ஜப்பானில், நிரந்தர முஸ்லீம் குடியிருப்புகளில் பாதி பேர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், எதிர்காலத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை இளம் முஸ்லீம்கள் கொண்ட நாடாக ஜப்பான் இருக்கும். புதிய முஸ்லீம்கள் பல்வேறு கலாச்சார மற்றும் சமூக பின்னணியில் வெளிப்படுவார்கள் என்றும், பாரம்பரிய ஜப்பானிய சமுதாயத்தை முஸ்லீம் சமூகத்துடன் இணைக்கும் திறவுகோலாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மசூதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு:
முஸ்லீம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜப்பானில் அதிகமான மசூதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மசூதிகளுக்கு முஸ்லீம் அல்லாத ஜப்பானிய சுற்றுப்பயணிகள் அடிக்கடி சென்று பார்த்து வருகின்றனர். இதன்மூலம் சமூகத்தில் புதிய நம்பிக்கை சரியாக வெளிப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுகள் பரப்பட்டு வரும் நிலையில், இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் ஜப்பான் மக்கள் மத்தியில் எழுந்தது. இஸ்லாம் வன்முறையை தூண்டுகிறதா, அல்லது அமைதி, சகோதரத்துவத்தை போதிக்கிறதா என்பது குறித்து அறிய ஜப்பானியர்கள் ஆவல் கொண்டனர்.
எனவே மசூதிகள் வளாகத்தில் முஸ்லீம் அல்லாத ஜப்பானிய பார்வையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரித்தது. இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறிய ஜப்பானிய மக்களிடம் உள்ள ஆர்வத்தையே இது காட்டுகிறது.
மேலும், இஸ்லாம் குறித்து ஜப்பானில் முந்தைய காலங்களில் இல்லாத ஒரு புதிய கண்ணோட்டம் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமிய சுற்றுலாப் பயணிகள்:
இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற சில முஸ்லீம் நாடுகளின் பயணிகளுக்கு ஜப்பான் செல்ல விசா தேவையில்லை. குறைந்த கட்டண விமானப் பயணத்தின் மூலம், முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் சென்று ஜப்பானின் அழகை ரசித்தது வருகின்றனர்.
ஜப்பானுக்கு வரும் முஸ்லிம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக , முஸ்லீம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்காக, பல உணவகங்கள் தங்களிடம் ஹலால் உணவு வகைகளை உறுதிப்படுத்துக் கொண்டு முஸ்லிம் பயணிகளை கவர்ந்து வருகின்றன. அத்துடன் முஸ்லிம்கள் மீது மிகவும் நடுநிலை மற்றும் வரவேற்கும் மனப்பான்மையைப் பேணுவதில் ஒரு சிறந்த சேவையை ஜப்பான் வணிக நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
ஜப்பான் முஸ்லிம்களின் ஈமான்:
ஜப்பானில் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பௌத்தம் உள்ளிட்ட பிற மதங்களில் மாறும் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியில் குறைவாகவே உள்ளது. பொதுவாக, முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்த முஸ்லிம்கள், இஸ்லாத்தை உறுதியாக கடைபிடித்து வருகிறார்கள்.
மசூதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், அங்கு பல சமூக சேவைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் முஸ்லீம் அல்லாத ஜப்பானியர்களுக்கு இஸ்லாம் குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
முஸ்லிம்களின் ஈமான், ஒழக்க நெறிமுறைகள், சகோதரத்துவம், பொருளாதார கொள்கைகள், அனைத்து மக்களிடம் அன்பை வெளிப்படுத்துவது, தீவிரவாதத்திற்கு எதிரான முழக்கம் உள்ளிட்ட அம்சங்கள் ஜப்பான் மக்களை வெகுவாக கவர்ந்து வருவதால், அந்நாட்டில், இஸ்லாம் வேகமாக வளர்ச்சி அடையவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment