Thursday, June 29, 2023

கல்வியில் சாதனை....!


சதிகளையும் தடைகளையும் உடைத்து கல்வியில்  சாதிக்கும் இஸ்லாமிய மாணவ-மாணவியர்....!

இந்தியாவில் வாழும் சிறுபான்மையின மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே.

எனினும், தற்போது முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் கல்வி குறித்த ஓர் விழிப்புணர்வு ஏற்பட்டு, அதன்மூலம் எப்படியாவது படித்து வாழ்க்கையில் முன்னேற  வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்ப சூழ்நிலைகளையும் தாண்டி முஸ்லிம் மாணவ-மாணவியர் கல்வியில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அதற்கு அவர்களின் குடும்பத்தினரும் ஆதரவு வழங்கி வருகிறார்கள்.

முஸ்லிம்களின் கல்விக்கு எதிராக சதி வலை:

கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம் சமுதாயம் தற்போது விழித்துக் கொண்டு முன்னேறி வருவதை கண்டு இந்துத்துவ அமைப்புகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

எனவே, பல்வேறு சதிகளை செய்து முஸ்லிம்கள் கல்வியறிவு பெறுவதை தடுக்கும் காரியங்களில் அதிரடியாக இறங்கியுள்ளன.

அதன்படி பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை, முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு செயல்திட்டங்களை பாஜக அரசுகள் அரங்கேற்றி வருகின்றன.

இதனால் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவ-மாணவியர் பள்ளி, கல்லாரிகளுக்கு செல்வது தடைப்பட்டுள்ளது.

ஹிஜாப் பிரச்சினையால் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் முஸ்லிம் மாணவிகள் தங்களுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டனர்.

முஸ்லிம்களின் இந்த போக்கு இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாஜகவை மகிழ்ச்சி அடைய செய்தது. தங்களுடைய செயல்திட்டம் நிறைவேறி வருவதைக் கண்டு பாஜக ஆனந்தம் அடைந்தது.

சதிகளை உடைத்து சாதித்த  முஸ்லிம் மாணவி தபசும் ஷேக்:

இந்துத்துவ அமைப்புகளின் சூழ்ச்சியை உணர்ந்து கொண்ட முஸ்லிம் சமுதாயம், கல்விதான் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் என்பதை நினைவில் கொண்டு அதில் கவனம் செலுத்த தொடங்கியது.

"சீனாவிற்கு சென்றாவது சீர்கல்வி பெறு" என்ற நபி மொழியை உள்வாங்கி கொண்டு, "இறைவா என்னுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக" என்ற திருக்குர்ஆனின் பிரார்த்தனைக்கு ஏற்ப ஏக இறைவனிடம் துஆ கேட்டுவிட்டு முஸ்லிம் மாணவ-மாணவியர் கல்வியில் கவனம் செலுத்த தொடங்கினர்.

கர்நாடகாவில் சென்ற ஆண்டு ஹிஜாப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தபோதும், அதை பொருட்படுத்தாமல் படிப்பில் தனிக் கவனம் செலுத்தி பி.யூ.சி. தேர்வில் மாணவி தபசும் ஷேக் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதித்துள்ளார். அந்த மாணவி பெற்ற மதிப்பெண்ணின் சதவீதம் 98.3 ஆகும்.

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த தபசும் ஷேக், ஹிஜாப் விவகாரம் எழுந்தபோது, கல்வி, ஹிஜாப் ஆகிய இரண்டில் ஒன்றை நான் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. நாங்கள் கல்வி கற்க கூட பல தியாகங்களை செய்ய வேண்டி உள்ளது.

அந்த நேரத்தில் என் பெற்றோர் என்னிடம் கல்விதான் சரியான பாதை என்றும் நீ ஒரு நிலை அடையவும் உன்னை போன்று மற்றவர்களை உயர்த்தவும் இதுபோன்ற அநீதிகள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் கல்வியே ஓரே வழி என்றும் அறிவுரை கூறினர்.

அதனால், கல்விக்காக கல்லூரியில் மட்டும் நான் ஹிஜாப்பை துறந்தேன் என தபசும் ஷேக் கூறியுள்ளார்.

இதன்மூலம் 600-க்கு 593 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து இந்துத்துவ அமைப்புகளின் கன்னத்தில் ஓங்கி அறைத்துள்ளார்.

உ.பி. மாணவ-மாணவியரும் சாதனை:

தபசும் ஷேக் போலவே நாங்களும் சாதிக்க பிறந்தவர்கள் என பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவி மிஷ்காத் நூர் மற்றும் மாணவன் ஷஹான் அன்சாரி கல்வியில் சாதித்து முஸ்லிம் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

உபியில் மாணவி மிஷ்காத் நூரியின் வெற்றி:

அயோத்தி கனோஸா கான்வன்ட்டில் பத்தாம் வகுப்பு படித்த மிஷ்காத், நடந்து முடிந்த மாநிலத் தேர்வில் மாநிலத்தின் இரண்டாவது மாணவியாக வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற மதிப்பெண் 600-க்கு 587. சதவீதம் 97.83%.

மிஷ்காத் நூரியின் தந்தை அயோத்தியிலுள்ள ஹஸ்னு பகுதியில் இருக்கும் ஒரு மதரஸாவில் ஆசிரியராக உள்ளார். மிஷ்காத்தும் அதே மதரஸாவில் எட்டாம் வகுப்பு வரை பயின்ற பிறகே ஒன்பதாம் வகுப்பில் கனோஸா கான்வென்ட்டில் சேர்ந்துள்ளார்.

தினமும் அதிகாலை நான்கு மணி முதல் தொடர்ந்து ஆறு மணிநேரம் படிக்கும் பழக்கமுடைய மிஷ்காத், தனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவின் முதல் அடித்தளமாக இதனை அல்லாஹ் நிறைவேற்றித்தந்துள்ளதாக கூறுகிறார்.

ஷஹான் அன்சாரி அசத்தல்:

இதேபோன்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஷஹான் அன்சாரி 10-ஆம் வகுப்பு தேர்வில் 96.83 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பல்வேறு நெருக்கடிகள், தொல்லைகள், மிரட்டல்கள் என பல தடைகளை தாண்டி முஸ்லிம் மாணவ-மாணவியர் இன்று கல்வியில் சாதித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்துத்துவ அமைப்புகளின் மிரட்டல்களுக்கு அச்சாமல் முஸ்லிம் மாணவ-மாணவியர் கல்வியில் முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும். கல்விதான் வாழ்க்கையில் முன்னேற மிகப்பெரிய மூலதனம் என்பதை உணர்ந்து கொண்டு தங்களுடைய குழந்தைகளுக்கு பெற்றோர்களும், சமூதாயமும் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்பதை மறந்து விடக் கூடாது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: