Tuesday, June 27, 2023

குழந்தைகளுக்காக தியாகம்....!

குழந்தைகளின் கல்விக்காக புர்கா அணிந்துகொண்டு ஆ


ட்டோ ஓட்டும் முஸ்லிம் பெண்....!

வேகமாக வளர்ந்து வரும் சென்னை மாநகரில், ஆயிரக்கணக்கான ஆண் ஆட்டோ ஓட்டுநர்கள் இருந்து வருகிறார்கள். இந்த ஆயிரக்கணக்கான ஆண் ஓட்டுநர்களுக்கு மத்தியில், 100க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். அதேநேரத்தில், பெண்கள் ஆட்டோ ஓட்டுவது மிகவும் சவால்கள் நிறைந்தவை. இவர்களுக்கு முறையான பொது கழிப்பறைகள் இல்லை. அவர்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து ஆட்டோ ஸ்டாண்டிலிருந்தும் சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை. மேலும், பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயனாளிகளுக்கான திட்டங்களும் இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சென்னையின் பரபரப்பான வீதிகளில், பர்தா அணிந்த முஸ்லீம் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை பயணிகள் கண்டு வியப்பு அடைந்து வருகிறார்கள். ஃபாத்திமா என்ற அந்த முஸ்லிம் பெண்மணி, ஆட்டோ ஓட்டுவது ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொழில் என்ற பிம்பத்தை தனது செயல் மூலம் உடைத்துள்ளார். அத்துடன், தன்னுடைய முஸ்லிம் என்ற அடையாளத்தையும் அவர் விட்டுக் கொடுக்காமல், ஆட்டோ ஓட்டுவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்ந்தியுள்ளது. 

குழந்தைகளின் கல்விக்காக எடுத்த முடிவு:

சென்னையில் பிறந்த வளர்ந்த ஃபாத்திமா, சென்னை மாநகரத்தைப் பற்றி நன்கு அறிந்து இருப்பதால், அவருக்கு ஆட்டோ ஓட்டுவதில் எந்தவித சிரமமும் இருக்கவில்லை. திருமணம் முடிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஃபாத்திமா, கொரோனா நெருக்கடி காலத்தில், பல பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது. கொரோனா காலத்தில் அவரது கணவர் வேலை இழக்க நேரிட்டது. இதனால் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது. 

இதையடுத்து, குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட ஃபாத்திமா முடிவு செய்தார். இதன்மூலம் கணவருக்கு கிடைத்து வந்து குறைந்த வருமானம் சரி செய்யப்பட்டு, குடும்பத்தின் பொருளாதார பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. அத்துடன், தனது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என விருப்பம் கொண்ட அவர், அதற்காக பணம் சம்பாதிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார். எனவே தனக்கு வாகனம் ஓட்டுவது பிடிக்கும் என்பதால், ஆட்டோ ஓட்டுநர் தொழிலை தேர்வு செய்தார். இதன்மூலம் தனது வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தை ஈட்ட முடிகிறது என்றும் ஃபாத்திமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனது குழந்தைகளை, பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவது, பின்னர் டியூஷனுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளையும் செய்ய தமக்கு சுதந்திரம் கிடைப்பதாக அவர் கூறியுள்ளார். 

பயணிகள் வியப்பு:

ஆட்டோவில், ஓட்டுனர் இருக்கையில் தன்னைப் பார்த்து பல பயணிகள் ஆச்சரியமும் வியப்பும் அடைந்ததாக  ஃபாத்திமா தெரிவித்துள்ளார்.  முஸ்லீம் பெண்கள் வீட்டில் மட்டுமே இருப்பார்கள், சமைப்பதில் மும்முரமாக இருப்பார்கள் அல்லது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த சில பயணிகள், பர்தா அணிந்த முஸ்லீம் பெண் ஆட்டோ ஓட்டுநரைப் பார்ப்பது இதுவே முதல் முறை என்றும் ஃபாத்திமாவிடம் கூறி, உண்மையிலேயே தங்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் வியப்பு தெரிவித்துள்ளனர். 

ஃபாத்திமா கருத்து:

பெண்கள் தங்களின் பாதுகாப்பு கருதி, பெண் ஆட்டோ ஓட்டுநர்களை அதிகமாக விரும்புகிறார்கள். எனவே, ஃபாத்திமாவின் ஆட்டோவில் பெரும்பாலும் பெண் வாடிக்கையாளர்கள் பயணம் செய்கிறார்கள். அத்துடன் பல பெண்கள் தங்களின் பிரச்சினைகளைப் பற்றி அவரிடம் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். பெண்களின் பிரச்சினைகளை நட்பாக கேட்கும் ஃபாத்திமா, பின்னர் அவர்களுக்கு தரும் ஒருசில யோசனைகள்  பலன் அளிப்பதாக பல பெண்கள் கருத்து கூறியுள்ளனர். 

உண்மையாகவும், நேர்மையாகவும் பணிபுரிவதால், பெண் பயணிகளை தாம் மிகவும் கவர்ந்து வருவதாக ஃபாத்திமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதன்மூலம் தனக்கு அதிக பெண் பயணிகள் கிடைப்பதுடன் நல்ல வருவாயும் கிடைத்து வருவதாக அவர் கூறியுள்ளார். 

புர்காவின் அடையாளம் பெருமை:

சென்னையில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் அணியும் காக்கி உடையை தாம் அணிய முடியாமல் போனதற்கு வருந்தும் ஃபாத்திமா,  இருப்பினும், புர்கா அணிவது தனது அடையாளம் என்றும் அது தனக்கு  மிகப்பெரிய பெருமையை அளிக்கிறது என்றும்  பெருமிதத்துடன் கூறுகிறார். 

புர்கா அணிந்த பெண்கள் மத வெறியர்கள் அல்ல என குறிப்பிடும் ஃபாத்திமா, சாதாரண பெண்கள் வீதிகளில் வியர்வை சிந்தி, ஆட்டோ  ஓட்டினாலும் கூட, அடக்கத்துடன் சம்பாதிக்க முடியும் என்பதை தாம் குறிப்பிட விரும்புவதாக தெரிவிக்கிறார். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: