மணிப்பூர் வன்முறை....!
காங்கிரஸ் குற்றச்சாட்டு.......!
காற்றில் பறவைகளின் குரல் ஒலிக்கும் அழகான மணிப்பூரில், கடந்த மே 3 ஆம் தேதி தொடங்கிய வன்முறையில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகள் பெருமளவில் எரிக்கப்பட்டன. பல ஆயிரம் பேர் உயிரைக் காப்பாற்ற மணிப்பூரை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஆனால், ஒன்றியத்தில் இருந்து மணிப்பூர் வரையிலான பாஜக அரசுகள் நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தன.
வெறுப்புத் தீயில் மணிப்பூர்:
இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்தினருக்கும், குக்கி பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் மணிப்பூரில் தற்போது பதற்றம் நிலவுகிறது. பட்டியல் பழங்குடியினர் பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற மேதி சமூகத்தின் கோரிக்கைக்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கடந்த மே 3ம் தேதி வன்முறை வெடித்தது. இதையத்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட சுமார் 10 ஆயிரம் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், மணிப்பூர் வெறுப்புத் தீயில் மாதக்கணக்கில் எரிந்துக் கொண்டு இருக்கிறது. வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், கலவரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, 7 வயது குழந்தை, அவரது தாயார் மற்றும் உறவினர் ஆகியோர் ஆம்புலன்ஸ் வண்டியில் சென்றுக் கொண்டிருந்தபோது, வன்முறையாளர்களால், தடுத்து நிறுத்தப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்டனர். பாஜகவின் கேவலமான அரசியல், அழகான மற்றும் அமைதியான மலைகளைக் கொண்ட மணிப்பூரை அச்சம் மற்றும் பயங்கரத்தின் தொழிற்சாலையாக மாற்றியுள்ளது. மக்களின் அவலமும், வீடுகளில் இருந்து எழும் புகையும் அரசின் தோல்விகளை எடுத்துக் கூறுகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் மணிப்பூரில், இன்று துப்பாக்கிகளின் சத்தங்கள் கேட்கின்றன. மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு உள்ளது. இணையதளச் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களை குறித்து எப்போதும் பேசி வரும் ஒன்றிய மோடி அரசு, மணிப்பூரில் கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் வன்முறையை தடுக்க தவறிவிட்டது.
அமித்ஷா வேண்டுகோள்:
சில நாட்களுக்கு முன்பு மணிப்பூருக்குச் சென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேதி மற்றும் குக்கி சமூகங்கள் அமைதியை நிலைநாட்டி இயல்பு நிலையைக் கொண்டுவரப் பாடுபடு வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மணிப்பூரில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக, இம்பால்-திமாபூர் தேசிய நெடுஞ்சாலை-2ல் உள்ள சாலைத் தடைகளை அகற்றுமாறு அந்த சமூகங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் காவல்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இருந்தும் வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது அமைதி குழு ஒன்று அமைக்கப்பட்டு நிலைமையை சீர் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காங்கிரஸ் குற்றச்சாட்டு:
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விரும்பினால், நீண்ட காலத்திற்கு முன்பே வன்முறையை நிறுத்தியிருக்கலாம் என்றும், ஆனால் அரசு மணிப்பூரை எரிக்க அனுமதித்தது என்றும் காங்கிரஸ் கட்சி தனது முகநூல் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளது. இம்பாலில் இருந்து சுராசந்த்பூர் வரை, மாநிலம் முழுவதும் கலவரம் பரவியபோது, கர்நாடகாவின் தேர்தல் பேரணிகளில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தனர் என்று கூறியுள்ள காங்கிரஸ், 22 ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பூர் இப்படித்தான் எரிக்கப்பட்டது என்றும், அப்போதும் நாட்டில் பாஜக அரசுதான் இருந்தது என்றும் தெரிவித்துள்ளது. தற்போது மணிப்பூரில் நடக்கும் வன்முறையின்போது ஒன்றியத்தில் பாஜக ஆட்சிதான் இருக்கிறது என்றும் காங்கிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது.
மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கில் வெறுப்பு அரசியலைச் செய்யும் பாஜகவின் ஒவ்வொரு நரம்புகளிலும் வெட்கமற்ற தன்மையும் மனிதாபிமானமற்ற தன்மையும் உள்ளது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. மக்களை பிரித்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற மந்திரத்தில் செயல்படும் பாஜக, முதலில் இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக போராட வைத்தது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
தற்போது மணிப்பூரை பாஜக தீயிட்டுக் கொளுத்தி இருப்பதாகவும், மணிப்பூரின் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக வாழ்ந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, ஆனால் முதல்வர் பிரேன் சிங் இதை விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. எனவே, இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினையை உருவாக்கி ஒருவருக்கொருவர் இரத்த தாகம் கொண்டதான ஒரு வன்முறையை பாஜக திணித்து இருப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
வன்முறை, வெறுப்பு ஊழல்:
நாட்டிற்கு நல்ல நாட்களை தர இருப்பதாக கூறிய பாஜகவை நம்பி மக்கள் வாக்கு அளித்ததாகவும், ஆனால், ஒட்டுமொத்த நாட்டையும் வெறுப்பு, வெறி, வன்முறை, ஊழல் என்ற சதுப்பு நிலத்தில் பாஜக தள்ளி விட்டதாகவும் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. தனது அரசியல் பேராசையை நிறைவேற்ற பாஜக எந்த நிலைக்கும் செல்லத் தயாராக உள்ளது என்றும் நாட்டு மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவின் கொள்கையும் நோக்கமும் நாட்டுக்கு ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளது. இதனை மக்கள் உணர்ந்துக் கொள்ளாவிட்டால், எதிர்கால சந்ததியினர் மோசமான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் காங்கிரஸ் அச்சம் தெரிவித்துள்ளது.
சசிகாந்த் செந்தில் குற்றச்சாட்டு:
மணிப்பூரில் ஒட்டுமொத்த பழங்குடி மக்களையும் கிறிஸ்துவர்கள் என்று டார்கெட் செய்து இந்துத்துவாவை வளர்க்க அரசே துணை போயிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில், குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விளைவு இன அழிப்பு என்ற நிலைக்கு தள்ளிவிட்டது என்றும் இது அரசின் துணையில்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் உறுதிப்பட கூறினார்.
மணிப்பூரில் நடப்பதால் நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று நினைத்துவிடக் கூடாது என்று எச்சரித்த செந்தில், அங்கு நடப்பது, நாளை இங்கேயும் நடக்கலாம் என்றும், மியான்மரில் இப்படித்தான் ரோஹிங்கியா முஸ்லீம்கள் என்ற இனக்குழுவே இல்லாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் கலவரத்தை உண்டு பண்ணும் அமைப்புகளை மணிப்பூரில் அரசே ஏற்படுத்தியுள்ளதாகவும், அந்த வகையில் கடந்த மே 3ஆம் தேதி இனப் படுகொலையை ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். 37 ஆயிரம் பேருக்கு மேல் எந்தவித வசதியும் இன்றி காடுகளில் வசித்து வருவதாகவும், இப்படி ஒரு மோசமான நிகழ்வு நடந்துவரும் போது, புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா, செங்கோல் போன்ற விஷயங்களை வைத்து நாட்டு மக்களை திசை திருப்ப பாஜக அரசு பார்க்கிறது என்றும் சசிகாந்த் செந்தில் குற்றம்சாட்டினார்.
மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும்:
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறை, கலவரம் என்ற மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட மணிப்பூர் மாநிலம், விரைவில் தனது இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அம்மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியாக வாழ வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய, மாநில பாஜக அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்மூலம் மட்டுமே, மணிப்பூரில் இயற்கையின் அழகை மக்கள் மீண்டும் காண முடியும் என்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment