Tuesday, June 27, 2023

வட மாநில தொழிலாளர்கள்...!


வட மாநில தொழிலாளர்களின் சொர்க்கப் பூமி தமிழ்நாடு.....!

உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் வரும் இளம் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு வரும் வட மாநில ரயில்களில் இருந்து கூட்டம் கூட்டமாக தொழிலாளர்கள் வந்து இறங்குகிறார்கள். இதனால் இந்த ரயில் நிலையங்களில் எப்போதும் வடமாநில மக்கள் நிரம்பி வழிகிறார்கள்.

சென்னைக்கு மட்டுமல்ல, கோவை, திருப்பூர், வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் நாள்தோறும் வந்துக் கொண்டே இருக்கிறார்கள். சரி, வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவு தொழிலாளர்கள் வர காரணம் என்ன என ஆராய்ந்தால், இங்கு குவிந்து இருக்கும் வேலைவாய்ப்புகள் முக்கியமாக இருந்து வருகிறது. 

தமிழக வளர்ச்சியில் வடமாநில தொழிலாளர்களின் பங்கு:

தமிழகத்தில் நடைபெற்று வரும் பல உட்கட்டமைப்பு மேம்பாடுகள், பாலங்கள், குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட ஏராளமான திட்டப் பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு கடுமையாக உழைக்கிறார்கள். மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட தமிழகத்திற்கு பயன் தரும் திட்டங்கள் சிறப்பாக நிறைவே வட மாநில தொழிலாளர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது. சென்னை, மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் நிறைவேற்றப்பட்ட அரசின் திட்டங்களில், குறிப்பாக, மதுரை கலைஞர் நூலகம் உள்ளிட்ட திட்டங்களில், வட மாநில தொழிலாளர்களின் உழைப்பு முக்கியமாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் கட்டிட தொழில், பின்னலாடை தொழில் உள்ளிட்ட பல தொழில்களில் வேலைவாய்ப்புகள் குவிந்து இருக்கின்றன. 

இந்த வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் சரியாகவும் முறையாகவும் பயன்படுத்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாக இருந்து வருகிறது. சுய கவுரவம் உள்ளிட்ட பல காரணங்களால், கட்டிட தொழில்களில் ஈடுபட தமிழக இளைஞர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால், வட மாநில தொழிலாளர்களிடம் அத்தகைய தயக்கம் இருப்பதில்லை. 

எங்கும் வட மாநில தொழிலாளர்கள்:

பீகார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்து வருகிறது. அப்படியே வேலைகள் கிடைத்தாலும் மிகக்குறைந்த அளவுக்குதான் அவர்களுக்கு அங்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் வாழ்க்கையை நகர்த்திச் செல்ல போதுமானதாக இருப்பதில்லை. எனவே, நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கும் தமிழ்நாட்டிற்கு, வட மாநில தொழிலாளர்கள், நாள்தோறும் வந்துக் கொண்டே இருக்கிறார்கள்.  

இப்படி நாள்தோறும் வரும் வட மாநில தொழிலாளர்கள், உணவகங்கள், தேநீர் விடுதிகள், பலசரக்கு கடைகள் என அனைத்து பகுதிகளிலும் பணியில் சேர்ந்து குவிந்து இருப்பதை நாம் அன்றாடம் காணலாம்.  சென்னையில் உள்ள பல உணவகங்களில் வட மாநில சமையல் தொழிலாளர்கள் தான் அதிகமாக பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் சமைக்கும் இட்லி, தோசை, மசால் வடை போன்ற சுவையான சாப்பாடு வகைகளைதான் தமிழ்நாட்டு மக்கள் தற்போது சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

ஆசியா - சல்மான் கருத்து:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆசியா. இவர் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  தமிழ்நாட்டிற்கு இவர் வர காரணம் என்ன என்று கேள்வி கேட்டால், வேலைவாய்ப்பு என்றுதான் பதில் தருகிறார்.  

பீகாரில் தங்களுக்கு சரியான வேலைவாய்ப்புகள் இல்லை என்றும், அப்படியே கிடைத்தாலும் மிக குறைந்த அளவுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும் ஆசியா கூறுகிறார். எனவே, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்ததாவும், தற்போது திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில்பணி புரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ள ஆசியா, இதன்மூலம் தங்களுடைய துன்பங்களுக்கு ஒரு தீர்வு கிடைத்து இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழக மக்கள் அன்பனவர்கள் என்று பாராட்டு தெரிவிக்கும் ஆசியா, கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில்  தாங்கள் எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொண்டதில்லை என அழகிய தமிழில் கூறி மகிழ்ச்சி அடைகிறார். 

இதேபோன்று, ராமேஸ்வரத்தில் கடந்த 12 ஆண்டுகளாக வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சல்மான், தமிழ்நாடு தங்களுக்கு சொர்க்கப் பூமி என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரமேஸ்வரத்தில் தாம் சிறு வணிக கடையை நடத்தி வருவதாகவும், அதன்மூலம் நல்ல வருவாய் கிடைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழக மக்களின் அன்பு, பாசம், அவர்கள் பழகும் பண்பு ஆகியவை தங்களை மிகவும் கவர்ந்து இருப்பதாக கூறும் சல்மான், ஈத் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தாங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றாலும், அங்கு 10 நாட்களுக்கு மேல் தங்களால் இருக்க முடியல்லை என்றும் தமிழக பாசம் தங்களை ஈர்த்து இங்கு மீண்டும் கொண்டு வந்து விடுவதாகவும் தெரிவிக்கிறார். 

தமிழ் மீது ஆர்வம்:

தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநில தொழிலாளர்கள், மிக குறைந்த நாட்களிலேயே தமிழ் மொழியை அழகாக பேச கற்றுக் கொள்கிறார்கள். சென்னை உள்ளிட்ட பெருநகர பேருந்துகளில் பயணம் செய்யும் வட மாநில தொழிலாளர்கள், இந்தி மொழியில் பேசாமல், தமிழிலேயே பேசுவதை நாம் காண முடிகிறது. இதேபோன்று தமிழர்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மீதும் வட மாநில தொழிலாளர்களுக்கு ஒருவித ஈடுபாடு ஏற்பட்டு விடுகிறது. இதனால் தமிழ்நாட்டை அவர்கள் அதிகளவு நேசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். 

பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை:

வட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்துக் கொண்டு இருப்பதால், தமிழ்நாட்டில் பல பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன. ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைகள் பறிக்கப்படும் நிலை உருவாகிறது. தமிழக நகரங்களில் வட மாநில மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருக்கி கொண்டே போகிறது. இதனால், வீடு, குடிநீர், வாகன வசதி என பல பிரச்சினைகள் உருவாகின்றன. 

மேலும் ஒருசில வட மாநில தொழிலாளர்கள் வேண்டும் என்றே செய்யும் பிரச்சினைகளால், குற்றச் செயல்களும் நடக்கின்றன. இதனால் மற்ற வட மாநில மக்களின் நன்மதிப்பு சீர்குலைகிறது. எனவே, வட மாநில தொழிலாளர்களின்  பிரச்சினைக்கு தமிழக அரசு ஒரு நல்ல தீர்வை காண வேண்டும் என்றும் அதை முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும்  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

தமிழக இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்:

வட மாநில தொழிலாளர்களிடம் இருந்து தமிழக இளைஞர்கள், ஒன்றை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். அது, கடின உழைப்பு. கவுரவம் பார்க்காத உழைப்பு. தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநில மக்கள் எந்தவித பணியும் செய்யாமல் வெறுமனே சும்மா  இருப்பதில்லை. கிடைக்கும் வேலையில் உடனே சேர்ந்து விடுகிறார்கள். இதனால், அவர்களின் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உணவு, தங்கும் இடம் ஆகியவை கிடைத்து விடுவதால், வட மாநில தொழிலாளர்களின் சேமிப்பு உயர்கிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும்போது, குறிப்பிட்ட ஒரு தொகையை அவர்கள் கொண்டு செல்ல முடிகிறது.  

எனவே இனி வரும் நாட்களில் தமிழக இளைஞர்கள் சோம்பேறி தனத்தை கைவிட்டு விட்டு, உழைப்பின் மீது தங்கள் கவனத்தை முழுமையாக செலுத்த வேண்டும். பணி செய்வதில் கவுரவம் பார்க்கக் கூடாது. குடும்ப நலனில் உண்மையான அக்கறை கொள்ள வேண்டும். இதன்மூலம் மட்டுமே தமிழ்நாட்டில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகளை வட மாநில மக்கள் பயன்படுத்திக் கொள்வதை போன்று தாங்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை தமிழக இளைஞர்கள் உணர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வாழ்க்கையில் புதிய நம்பிக்கை பிறக்கும். அந்த நம்பிக்கையால், முன்னேறி சாதிக்க முடியும். இதை தமிழக இளைஞர்கள் மறக்காமல் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அவர்களின் வாழ்க்கை இனிக்கும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: