கல்வி, தொழில் குறித்த பயனுள்ள தகவல்....!
நல்ல வருமானத்திற்கு பேக்கரி தொழிலில் வாய்ப்புகள் அதிகம்….!!
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாணவரும் அடுத்து என்ன படிக்கலாம் என ஒருவித குழப்பத்தில் இருந்து வருகின்றனர். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. அதற்காக நீட் தேர்வை எழுதி முடிவுக்காக மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதேபோன்று, பி.காம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் அதிக கிராக்கி இருந்து வருகிறது. அத்துடன் பல்வேறு தொழிற்படிப்புகளில் சேர ஒருசில மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.
கலை, அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள், படிப்பு முடித்தபிறகு வேலை தேடும் படலத்தில் இறங்கி உடனடியாக வேலை கிடைக்காத காரணத்தில் பல ஆண்டுகள் தங்களது வாழ்க்கையை வீணடித்து விடுகின்றனர். ஒருசில இளைஞர்கள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல், குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிடைத்த வேலையில் சேர்த்து வாழ்க்கையை மனவேதனையுடன் நகர்த்தி செல்கின்றனர். இதற்கு முஸ்லிம் இளைஞர்களும் விதிவிலக்கு இல்லை.
உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு தேவை:
பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததும், உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு மிகவும் அவசியம். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எந்தெந்த படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன என்பது குறித்து அறிந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். நாட்டில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் எவை, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் குறைந்த கட்டணத்தில் எப்படி சேர்ந்து படிப்பது உள்ளிட்ட அம்சங்களில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் தொழில் கல்வி நிறுவனங்களில் சேருவது எப்படி, அதற்கான விதிமுறைகள் என்ன என்பதை அறிந்துகொண்டால், மிகக்குறைந்த கட்டணங்களைச் செலுத்தி, சிறப்பான தொழில் கல்வியை ஏழை, மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெற முடியும். எனவே, இதில் அவர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
உயர்கல்வி, தொழில் கல்வி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஒருசில சமூக மற்றும் கல்வி நிறுவனங்கள் அவ்வப்போது நல்ல ஆலோசனை வழங்கி வருகின்றன. இந்த ஆலோசனை பெற ஏழை, மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். தயக்கம் காட்டக் கூடாது. சிரமம் பார்க்காமல், ஆலோசனை பெற்றால், குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல கல்வியை பெற முடியும்.
அதிகரித்து வரும் நவீன உணவகங்கள்:
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் தற்போது, சுவையான உணவுகளை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதற்காக கச்சத்தனம் செய்யாமல், பணத்தை தாளாரமாக செலவு செய்கின்றனர். இதனால், சென்னை உட்பட நாட்டின் பல நகரங்களில் தொடர்ந்து அதிக உணவகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
நல்ல ஆரோக்கிய சூழ்நிலையில் கிடைக்கும் விதவிதமான நாவுக்கு சுவையான உணவை சாப்பிட மக்கள் ஆர்வம் செலுத்துவதால் அத்தகைய உணவகங்களை தேடிச் செல்கின்றனர். இதனால் அந்த உணவக நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்கள் கவர்ந்து நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றன. சிறிய கிராமங்களில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற பல சமையல் கலைஞர்கள், தற்போது சொந்தமாக ஹோட்டல்களை ஆரம்பித்து தொழில் அதிபர்களாக மாறி, பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.
வளர்ந்து வரும் பேக்கரி தொழில்:
இதேபோன்று பேக்கரி உணவுகளையும் குழந்தைகள், இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் தற்போது அதிகளவு விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். தரமான பேக்கரிகளில் கிடைக்கும் பேக்கரி பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதன் காரணமாக வீதிக்கு வீதி பேக்கரி கடைகளை நாம் காண முடிகிறது.
இளைஞர்கள் ஒரு தொழில்முறை பேக்கராக மாற விரும்பினால், அதுகுறித்த தகவல்களை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். சுவையான பேக்கரி உணவுகளை உருவாக்கி அதன்மூலம் நல்ல வருவாய் ஈட்ட இளைஞர்களுக்கு விருப்பம் இருந்தால், அந்த தொழிலில் இறங்கி சிறப்பாக சாதிக்க முடியும். அதற்காக தொழில்முறை பேக்கராக இளைஞர்கள் மாற வேண்டும்.
தொழில் நிபுணர்களின் கணிப்பின்படி, இந்திய பேக்கரி சந்தை 2023-ஆம் ஆண்டு முதல் 2028-ஆம் ஆண்டு வரை சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர் அடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு சரியான நேரத்தில், சரியான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுப்பது இளைஞர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
பேக்கரி தொழில் ஒரு கலையாக கருதப்படுகிறது. எனவே இந்த தொழிலில் ஆர்வமாக இருக்கும் இளைஞர்கள், பல்வேறு சுவைகளுடன் கூடிய உணவுப் பொருட்களை தயாரிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே, ஒரு தொழில்முறை பேக்கராக மாறுவதற்கு என்ன தேவை என்பதைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம்.
பேக்கரி தொழில் குறித்த படிப்புகள்:
பேக்கரி தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், பேஸ்டரி கலைகளில் முறையான பயிற்சி பெற்ற இளைஞர்களை பணியில் அமர்த்த விரும்புகின்றன. எனவே இளைஞர்கள் . தொழில்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கும் வெற்றி பெறுவதற்கும் தேவையான திறன்களையும் அறிவையும் வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும்.
இதுதொடர்பான முறையான கல்வியை பெற கவனம் செலுத்த வேண்டும். பேக்கிரி மற்றும் பேஸ்ட்ரி ஆர்ட்ஸ், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகள் பல பேஸ்ட்ரி மற்றும் சமையல் கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படுகின்றன.
அதுகுறித்த தகவல்களை அறிந்து பேக்கரி தொழில் தொடர்பான படிப்புகளில் சேர்ந்து கல்வி மற்றும் செய்முறை பயிற்சியை பெற இளைஞர்கள் முயற்சி செய்ய வேண்டும். மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப மக்களின் உணவுப் பழக்கங்களும் மாறி வருவதை கவனத்தில் கொண்டு, புதிய மற்றும் புதுமையான சுவைகள் கொண்ட பேக்கரி பொருட்களை தயாரிக்க வேண்டும். இதற்கு பேக்கரி தொடர்பான கல்வி நல்ல பலனை தரும் என்பதை மறந்துவிடக் கூடாது.
புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், பேக்கிரி நுட்பங்கள் மற்றும் முறைகள், மூலப்பொருள் அடையாளம்,மெனு திட்டமிடல் ஆகியவற்றில் இளைஞர்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
நல்ல உணவை உருவாக்கும் நுட்பங்களையும், உணவுத் துறையில் சிறந்து விளங்கத் தேவையான முறைகளையும் கற்றுக் கொள்ள அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வடிவமைக்கப்பட்ட படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன.
இந்த படிப்புகள் மற்றும் தொழிற்பயிற்சிகள் பொதுவாக இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை சொல்லித் தரப்படுகின்றன. இதன்மூலம் பேக்கரி தொழிலுக்கு தேவையான நல்ல திறன் தொகுப்பு இளைஞர்களுக்கு கிடைக்கிறது.
தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்:
பேக்கரி தொழில் குறித்து நுட்பங்களை கற்றுக் கொள்ளும் இளைஞர்கள், பல புகழ்பெற்ற நிறுவனங்களில் சேர்ந்து நல்ல வருவாயை ஈட்டலாம். அல்லது சொந்தமாக தொழில் தொடங்கி, மக்களுக்கு நல்ல சுவையான உணவுப் பொருட்களை வழங்கி நற்பெயர் பெற்று அதன்மூலம் ஒரு நல்ல நிறுவனத்தை உருவாக்கலாம். மேலும் இந்த தொழிலில் படிப்படியாக முன்னேறி, பின்னர் தொழில் அதிபராக மாறி நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கலாம்.
என்ன நீங்கள் திறமையான பேக்கர்களாக மாற விரும்புகிறீர்களா? அப்படியானால், இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக பேக்கரி கல்வியை சொல்லித்தரும் நல்ல கல்வி நிறுவனத்தில் சேருங்கள். நல்ல படிப்புடன் சிறப்பான பயிற்சியும் பெறுங்கள். பின்னர் பாருங்கள், உங்களுக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கும். அதன்மூலம் வருவாய் அதிகரித்து வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்கும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment