தேசிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் நிராகரிக்க வேண்டும்....!
கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்....!!
நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, பாஜக ஆளும் மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில், தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஒரு குழுவை அமைத்துள்ளது.
கல்வியாளர்கள் வலியுறுத்தல்:
கர்நாடகாவில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, பள்ளி, கல்லூரி பாடங்களில் மாற்றங்களை செய்தது. மேலும், தேசிய கல்விக் கொள்கையை சந்தேகத்திற்குரிய முறையில் சிக்கல்களுடன் செயல்படுத்தத் தொடங்கியது. கடந்த 2022-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மாநிலத்தின் கல்வி ஆவணங்களில் பொய்மையையும் சமூகப் பிளவுகளையும் பாஜக அரசு ஊக்குவித்தது.
எனவே, பாஜக அரசின் கீழ் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை தொடர்பான ஆவணங்கள் மூலம் பரப்பப்பட்ட அனைத்து தவறான தகவல்களையும் கர்நாடக காங்கிரஸ் அரசு இப்போது திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் அனிதா ராம்பால் வலியுறுத்தியுள்ளார்.
முட்டை, இறைச்சி குறித்த சர்ச்சை:
தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பசவராஜ் பொம்மை அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவால், கடந்த ஜூலை 2022-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட உடல்நலம் மற்றும் நல்வாழ்வு பற்றிய கட்டுரையில், மதிய உணவில் முட்டைகளை உட்கொள்வதை ஆதரிக்கவில்லை. மாறாக, முட்டை சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியர்களின் சிறிய உடல் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் மூலம் உடலுக்கு கிடைக்கும் கூடுதல் ஆற்றல், வாழ்க்கை முறை சீர்குலைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய கல்விக் கொள்கையின் நுண்ணிய மேலாண்மை மூலம் கல்வியை மையப்படுத்துதல், வகுப்புவாதம் மற்றும் வணிகமயமாக்குதல் ஆகியவற்றை ஊக்குவிக்க ஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை, எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் தொழிற்திறன் ஆகியவற்றை குறைக்கிறது என குற்றம்சாட்டும் கல்வியாளர்கள்,. கல்வியை தனியார்மயமாக்குவதை ஊக்குவிக்கிறது என்றும், இதனால் நாட்டில் வாழும் ஏழைகளுக்கு தரமான நல்ல கல்வி கிடைக்காமல் போய்விடும் என்றும் எச்சரிக்கை செய்கின்றனர்.
காங்கிரஸ் நிராகரிக்க வேண்டும்:
எனவே, கர்நாடகாவில் அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள காங்கிரஸ் கட்சி, தேசிய கல்விக் கொள்கை தொடர்பான ஒன்றிய அரசின் முயற்சிகளைய எதிர்க்க வேண்டும் என கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து, மாநிலத்திற்கு சொந்தக் கல்விக் கொள்கையை வழங்குவோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் காப்பாற்ற வேண்டும் என்றும் பல கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதிப்புகளை உன்னிப்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதை எதிர்க்கவும் நிராகரிக்கவும் மற்ற மாநிலங்களை ஒன்றிணைப்பதில் புதிய கர்நாடக காங்கிரஸ் அரசு முன்னோடியாக இருக்க வேண்டும் என்றும் டெல்லி பல்கலைழக்கழக முன்னாள் பேராசிரியர் அனிதா ராம்பால் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கர்நாடகாவில் புதிய காங்கிரஸ் அரசு, தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து, கல்வித் துறையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த மற்றொரு பேராசிரியர் அபா தேவ் ஹபீப் வலியுறுத்தியுள்ளார்.
கல்வியின் முக்கிய நோக்கம் குடிமக்களுக்கு அறிவு மற்றும் விமர்சனப் பகுப்பாய்வுக்கான திறன்களை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதாகும். ஆனால் தேசிய கல்விக் கொள்கை, மலிவான உழைப்பை வழங்குவதற்காக பல்வேறு தொழில்களில் திறமையானவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அது, அறிவுசார் அதிகாரம் பெற்ற நல்ல குடிமக்களை உருவாக்கத்தை நோக்கமாக கொண்டு இருக்கவில்லை என்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். .
என்ன செய்யப் போகிறது காங்கிரஸ்:
அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவுடன் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ், தனது வாக்குறுதியின் படி தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக, மாநிலத்திற்கு என சொந்தக் கல்விக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்த உள்ளதா, அல்லது வாக்குறுதியை கிடப்பில் போடுமா என்பதை எதிர்காலம் தான் பதில் சொல்லும். பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் நச்சை விதைக்கும் பாஜகவின் நடவடிக்கைகளுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே, மதசார்பற்ற நாட்டில் நல்ல மாணவர்களையும், சிறந்த சமுதாயத்தையும் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்து காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்றும் கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment