Thursday, June 29, 2023

முஸ்லிம்கள் புறக்கணிப்பு..!


அரசுத் திட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான  பாகுபாடு: 

தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்....!

நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்நிலைகளை உருவாக்க இந்துத்துவ அமைப்புகள் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

நாட்டில் வாழும் 21 கோடி முஸ்லிம் மக்களும் அரசின் எந்தவொரு நலத்திட்ட உதவிகளை பெறக் கூடாது, அதற்கான அனைத்து கதவுகளையும் மூட வேண்டும் என்ற இலக்கை கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது.

இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு:

முஸ்லிம்களுக்கு தெலங்கானா அரசு வழங்கி வரும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என பகிரங்கமாகவே பாஜக மூத்த தலைவரும் மத்திய  உள்துறை அமைச்சருமான அமித்ஷா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் முஸ்லிம் வாக்குகள் பாஜகவிற்கு தேவையில்லை என தோல்வியின் விரக்தியில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா கொக்கரித்துள்ளார். இதன்மூலம் பாஜக இந்திய முஸ்லிம்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத கட்சி என்பது 100 சதவீதம் உறுதியாகியுள்ளது.

ஆய்வில் அதிர்ச்சி தகவல்:

இந்நிலையில், SPECT அறக்கட்டளை என்ற இலாப நோக்கற்ற தனியார் அமைப்பு ஒன்று, நாட்டில்  சிறுபான்மை மக்கள் அதிகம் வாழும் 10  மாவட்டங்களில் உள்ள நிலைமை குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.

சிறுபான்மையின மக்கள் வாழும் மாவட்டங்களில் முஸ்லிம்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் அறிக்கை அண்மையில் டெல்லியில் உள்ள  இந்திய பிரஸ் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. 

இந்த அறிக்கை, 10 மாவட்டங்களில் சிறுபான்மையின முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மக்கள் தொகை பெருக்கம், அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோத ஊடுருவல் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த மாவட்டங்களை பாஜக குறிவைப்பதாலும் இந்த 10 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

பீகாரில் அராரியா, புர்னியா, கிஷன்கஞ்ச், கதிஹார், அசாமில் துப்ரி, கோக்ரஜார், உத்தரப்பிரதேசத்தில் ஷ்ராவஸ்தி, பலராம்பூர், மேற்கு வங்கத்தில் மால்டா, முர்ஷிதாபாத் ஆகிய பத்து குறிப்பிட்ட மாவட்டங்களில் ஆய்வு நிறுவனம் கவனம் செலுத்தியது.

ஆய்வு நடத்தப்பட்ட பத்து மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மக்கள், நாட்டின் பிற மாநிலங்களை விட அதிகமான அடிப்படை வளங்களையும் வசதிகளையும் இழந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  

இதன்மூலம் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பது  உறுதியாகியுள்ளது.

பொய் பிரச்சாரம் அம்பலம்:

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், பிற சமூக மக்களை விட அதிக பலன்களை, வாய்ப்புகளை  பெறுகிறார்கள், வசதியாக வாழ்கிறார்கள்  என பாஜக தலைவர்கள் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

ஆனால் தற்போது ஆய்வில் கிடைத்த இந்த தரவுகள் மூலம் முஸ்லிம்கள் பிற சமூகங்களை விட மிகவும் பின் தங்கியுள்ளது உறுதியாக தெரிய வந்துள்ளது. 

பீகாரின் நான்கு மாவட்டங்களில் நிலவும் மோசமான சமூக பொருளாதார நிலையை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 

இந்த மாவட்டங்களில் முஸ்லிம் சமூகம் சராசரியை விட குறைவான கல்வியறிவு விகிதத்தைக் கொண்டு இருப்பது கண்டறியப்பட்டது.

அரசு நலத்திட்டங்களில் புறக்கணிப்பு:

முஸ்லிம்களுக்கு மத்திய,  மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், நலத்திட்ட உதவிகள் கூட அவர்களுக்கு சென்று அடைவதில்லை என்பது ஆய்வு உறுதி செய்துள்ளது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பது தெரியவருகிறது.

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களில் முஸ்லிம்களுக்கு எந்த முன்னுரிமை அளிக்கப்படுவது இல்லை என்றும் குறிப்பிட்ட ஒருசில திட்டங்களை தவிர பெரும்பாலான திட்டங்கள் முஸ்லிம்களுக்கு சென்று  அடைவது இல்லை என்றும் சமூக, பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாவும் ஆய்வு அறிக்கையில் உறுதிப்பட, திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.

No comments: