Thursday, June 29, 2023

கல்வி.....!


மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும்.....!

உலகில் வாழும் முஸ்லிம்களில் பலர் கல்வியை மார்க்கக் கல்வி என்றும் உலகக் கல்வி என்றும் பிரித்து பார்க்கும் நிலை தற்போது இருந்து வருகிறது. மார்க்கக் கல்வியை கற்கும் இஸ்லாமிய மாணவர்கள், சமுதாயத்தில் பெரும் அளவுக்கு கண்டுக் கொள்ளப்படுவதில்லை. மதராஸாக்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகள், மிகக் குறைந்த வருமானத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் நிலையை உயர்த்த எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.  பல நேரங்களில் மார்க்கக் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர்கள்அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

கல்வியை பிரித்து பார்ப்பது தவறு:

இஸ்லாமிய குடும்பங்களில் பிறந்தவர்கள், கல்வியை மார்க்கக் கல்வி என்றும், உலகக் கல்வி என்றும் பிரித்துப் பார்க்கக் கூடாது. அத்தகைய கண்ணோட்டத்துடன் நோக்குவது தவறு. அழகான வாழ்வியல் போதனைகளுடன் இம்மை, மறுமைக்கான கல்வியை மதராஸாக்களில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தற்போதைய நவீன  காலத்திற்கு ஏற்ப, மதராஸாக்களிலும், கணினி படிப்பு, உள்ளிட்ட உலகப் படிப்புகள் சொல்லித் தரப்படுவதுடன், தொழில் கல்வியும் கற்று தரப்படுகிறது. 

இதன்மூலம், மதராஸா மாணவர்கள், அழகான இஸ்லாமிய கல்வியை கற்பதுடன், உலகத்தில் மாறி வரும் சூழ்நிலைக்கு எற்ப, இஸ்லாமிய வாழ்வியலை, மிகச் சிறப்பாக பேண வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. 

இஸ்லாமிய மார்க்கம், மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை. ஏக இறைவன் அருளிய திருக்குர்ஆனில், “இறைவா எங்களை இந்த உலகிலும் நல்வழிப்படுத்துவாயாக,  மறு உலகிலும் நல்வழிப்படுத்துவாயாக. மேலும் நரக வேதனையில் இருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (சூரா 2:201) என்று மிக அழகாக கூறப்படுகிறது. 

இதன்மூலம், இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும், சிறப்பான வாழ்வை  முஸ்லிம்கள் பெற வேண்டும் என இறைவன் விரும்புகிறான் என்பது உறுதியாக தெரிகிறது. இதற்காக நாம் கல்வியை சிறப்பாக பயன்படுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பிரித்துப் பார்ப்பது தவறு என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். 

முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை:

அதேசமயம் உலக வாழ்க்கையிலேயே மூழ்கி இருந்து விடக் கூடாது என்றும்,பொருளாசையால்  மறுமையை மறப்பது இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இம்மைக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து  இஸ்லாம் மார்க்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அதன் மோசமான முடிவை, அதாவது நரகத்தில் தள்ளப்படும் செய்தியையும் தந்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

எனவே, முஸ்லிம்கள் விரைவாகப் பெறக்கூடிய நம்மைகளில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது. கல்வி விவகாரத்திலும், மார்க்கக் கல்வியை புறக்கணித்துவிட்டு, நவீன உலகக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது சரியல்ல. 

உலகின் அனைத்து சுகங்களும் இன்பங்களும் அழகாக தெரிந்தாலும்,  உலகம் அழியக்கூடியது என்பதை இஸ்லாமியர்கள் மறந்துவிடக் கூடாது. நித்தியமான மறுமை வாழ்விற்காக .சிறப்பாக அடித்தளத்தை உருவாக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.  அதற்காக, இஸ்லாமிய குடும்பங்களில் உலகக் கல்விக்கு தரும் முக்கியத்துவத்தைப் போன்றே, மார்க்கக் கல்விக்கும் தர வேண்டும்.  மதராஸாக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம்:

தனித்துவமான ஒழுக்கப் பண்புகளுடன் வாழ இஸ்லாமிய மார்க்கக் கல்வி முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியம். உலகக் கல்வி ஒழுக்க நெறிகளை போதித்தாலும், இஸ்லாமிய மார்க்கக் கல்வியை போன்று மிக ஆழமாக ஒழுக்கப் போதனைகளை அங்கு சொல்லித் தரப்படுவதில்லை. குடும்ப வாழ்வியல், சமுதாயத்தில் எப்படி ஒழுக்கப் பண்புகளுடன் வாழ வேண்டும், அனைவரையும் சகோரத்துவத்துடன் எப்படி நேசிக்க வேண்டும், பெண்களை எப்படி மதிக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இஸ்லாமிய மார்க்கக் கல்வியில், முஸ்லிம்களுக்கு மிக அழகாக சொல்லித் தரப்படுகிறது. 

எனவே, இஸ்லாமிய குடும்பங்களில் உலகக் கல்வியை விட மார்க்கக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, நல்ல பண்புள்ள இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இதன்மூலம், இம்மையில், அமைதியும், நிம்மதியும், கிடைப்பதுடன், மறுமை குறித்த அச்சம் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் எப்போதும் இருக்கும். அதன்மூலம், ஒழுக்க நெறிகளில் அவர்கள் உறுதியுடன் இருப்பார்கள். 

கல்வி விவகாரத்தில் இனியும், கவனக் குறைவாக இருந்து விடாமல், இஸ்லாமிய சமுதாயம், சிறப்பான பணிகளை செய்ய முன்வர வேண்டும். இதன்மூலம் மட்டுமே, தரமான கல்வியை பெற்று, ஒரு நல்ல பண்புள்ள மற்றும் அனைத்து மக்களையும் நேசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மார்க்கத்திற்கு கிடைப்பார்கள் என உறுதிப்பட கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: